13/12/2024

குறள் அந்தாதி வெண்பாக்கள்


அடைமொழியின் உள்ளே அடைபட்டோம் என்றால்
தடைப்பட்டுப் போகும் தமிழ்.
(1)

தமிழை உயர்த்துவதாய் தம்பட்டம் போட்டுத்
தமிழால் உயர்கின்றார் தான்.
(2)

தான்தான் உயர்வென்று தற்பெருமை பேசினால்
சான்றோர்முன் தாழும் தரம்.
(3)

தரமில்லாச் செய்கை தரம்தாழ்த்தும் என்றும்
சிரமுயரச் செய்தால் சிறப்பு.
(4)

சிறந்தவராய் மாற சிலகாலம் ஆகும்
திறமை குறையாமல் தேடு.
(5)

தேடுகின்ற அத்தனையும் சேர்வதில்லை என்றாலும்
ஓடுகின்ற காலத்தில் ஓடு.
(6)

ஓடுகின்ற காலத்தில் ஓயாமல் ஓய்ந்துவிட்டால்
கேடுறும் வாழ்க்கைதான் தீர்வு .
(7)

தீர்வில் தெளிவோடு தேடுகின்ற ஓட்டத்தால்
யார்க்கும் எளிதாம் இலக்கு.
(8)

இலக்கின்றிப் போனால் எளிதும் அரிதாம்
இலக்கை முதலில் எழுது!
(9)

எழுத்தென்னும் ஆயுதத்தால் எண்ணத்தைக் கீறி
அழுத்தமுற வெற்றி அடை!
(10)

✍️செ. இராசா

No comments: