பல்வகைத் தகவல்களை
பலவாறு பேசம்முன்
பல்-வகைத் தகவல்களை
பல் நோக்கில் பார்ப்போமா...?!!
வெட்டுப் பல் வெட்டுமாம்..
வேட்டைப்பல் கிழிக்குமாம்..
முன்கடவாய் நொறுக்குமாம்..
பின்கடவாய் அரைக்குமாம்..
ஆமாம்...என்ன இதெல்லாம்?
பல்லைப் பற்றிய
பல்-வகைத் தகவல்கள்தானே?
பல்லைத் தட்டிக் கையில் கொடுப்பேன்
பல்லைப் புடுங்கிடுவேன் என்றால் பதறாதீர்
பல்லைச் சொத்தாய்ப் பாராமல்
பல்லைச் சொத்தை ஆக்கினால்
இப்படித்தான்
பல் மருத்துவர்
பல்லைத் தட்டவா எனப்
பரிந்துரை செய்வார்...
சரி...சரி...
பல்லை நறநறவென்று கடிக்காதீர்.
பல் போனால் சொல் போச்சாம்; இது
பல்லைப் பற்றிய பழமொழி
சொல் போனால் எல்லாம் போச்சாம்; இது
சொல்லாமல் விட்டப் புதுமொழி
இங்கே....
கால்மேல் கால்போட்டு பேசினால்
தப்பில்லை! ஆனால்
நாக்குமேல் பல்போட்டு பேசினால்
தப்புதான்!
ஒன்றைப் புரிந்துகொள்ளுங்கள்?
நாளெல்லாம் பல் முளைக்க
நாமொன்றும் சுறாமீன் இல்லை...
ஆறுமுறையேனும் பல் முளைக்க
நாமொன்றும் யானையும் இல்லை...
பால்பல் விழுந்துவிட்டால்
புதிய பல் முளைக்கும்
இந்த வாய்ப்பும் ஒரு முறைதான்
மறவாதீர்
அது வெறும் வாய்ப்பு அல்ல
அதுவே நம் வாய்ப்பூ....!!!
அங்கே புன்னகை மட்டும் பூக்கட்டும்
அமிலங்கள் வேண்டாமே....!!!
செ. இராசா
(நான்காம் வருடம் படிக்கும் பல் மருத்துவ மாணவி மேடையில் பேசுவதற்காக எழுதிய கவிதை)
No comments:
Post a Comment