12/11/2022

புதிய மனிதர்கள்



கத்தாரில் என் அலுவலகத்தில் இருந்து வெறும் 200 மீட்டர் தொலைவில்தான் கடற்கரை உள்ளது. எங்கள் அலுவலக நேரமென்பது காலை 6:30 மணிக்கெல்லாம் துவங்கிவிடும் என்பதாலும் சீக்கிரம் வந்தால்தான் வாகனத்தை நிறுத்த இடம் கிடைக்கும் என்பதாலும் அனைவரும் சற்று சீக்கிரமே வந்துவிடுவோம். இதில் நான் அதிலும் சற்று முன்பாக 6:00 மணிக்கெல்லாம் வந்துவிடுவேன்‌. காரணம், நான் என் இரண்டாம் தாய்போல் நினைக்கும் அந்தக் கடல் அன்னையிடம் போய், அந்நீரைத் தொட்டு இரண்டு கண்களிலும் ஒற்றியெடுத்துத் தலையின் உச்சியில் தடவும் பழக்கமுள்ளவன் என்பதால். அப்படித் தொடும்போது, அந்தப் பிரபஞ்சத்தின் துளியை நேரடியாகவே தொடுவது போன்ற ஓர் உணர்வு என்னுள் ஏற்படுவதுண்டு.

தற்சமயம் உலகக்கோப்பைக் கால்பந்தாட ஆரம்ப நிகழ்வுகள் நடைபெறுவதால், ஏழு கிலோமீட்டர் நீளமுள்ள கார்னீஷ் கடற்கரையில் நடக்க மட்டுமே அனுமதியுள்ளது. நிறைய காவல்துறையினர் அங்கே நிற்பதால் ஏகப்பட்ட கெடுபிடி. இருப்பினும், நான் வழக்கம்போலவே இன்றும் கடற்கரை போயிருந்தேன். படித்துறையில் நீரைத் தொட்டு வணங்கி விட்டுத் திரும்பினால், என்னைப்போலவே ஒரு கருகரு நிறத்தில்...இல்லை இல்லை... சற்றே கூடுதலான கருநிறத்தில் ஒரு இளைஞர் என் அருகிலே அமர்ந்து அந்தத் தண்ணீரை எடுத்துக் குடித்துக்கொண்டிருந்தார். எனக்கோ ஆச்சரியம்.... மீண்டும் எடுத்து குடித்தார். நான் பார்த்துக்கொண்டே இருந்தேன். நான் பார்ப்பதன் அர்த்தத்தைப் புரிந்து கொண்டு, அவராகவே அதற்கான விளக்கத்தைக் கூறினார். அதாவது, காலையில் வெறும் வயிற்றில் கடல்நீரை அருந்தினால் நல்லதாம். அது மருந்துபோல செயல்படுமென்றார். (மனிதர்களுக்குள்தான் எத்தனை எத்தனை நம்பிக்கைகள்)

அவரின் ஊரை விசாரித்தபோது கென்யா என்றார். அவர் வந்து ஒரு வருடம்தான் ஆகிறதாம். பிறகு கால்பந்து விளையாட்டு பற்றி பேசினோம். அவர்கள் நாட்டணி விளையாடத் தகுதி பெறவில்லையாம். நம்ம அணியும் தான். ஆனால் நம்ம ஊர் கிரிக்கெட் அணியை, முதல்தரமான அணியென்று மிகவும் புகழ்ந்தார் (நம்ம வாங்குன அடியை இவர் பார்க்கலைபோல).

அடுத்து நான் கத்தார் வந்த வருடத்தைக் கேட்டார். 2006 என்றேன். அப்போது தனக்கு 7 வயதென்றும், தற்போது 22 வயதென்றும் கூறினார். என் வயதைக்கேட்டார். நான் 42 என்றேன். என் தந்தையாரின் வயதென்றார் (உண்மையில் என் தந்தைக்கும் இதே வயது ஆகும்போது, நான் பொறியியல் படித்து முடிந்துவிட்டேன்) ஆகா.....சரி என் வயது என்ன இருக்குமென்றேன். ஒரு 30, 33 போல உள்ளதென்றார். உடனே மிகவும் மகிழ்ச்சியோடு அந்தக் கென்யத் தம்பியிடம் ஒரு புகைப்படம் எடுத்துக்கொண்டேன். பிறகு இருவரும் அவரவர் பணியை நோக்கி விடைபெற்றுக்கொண்டோம்.

உண்மையில் இப்படிப் புதிய புதிய மனிதர்களைச் சந்திக்கும்போதுதான் எத்தனை எத்தனை மகிழ்ச்சி கிடைக்கிறது.

நன்றி இறைவா...💐💐💐

No comments: