02/11/2022

அம்பை பெயர்கொண்ட அம்மணியே.

 


சால்வனைக் காதலித்து
சாமர்த்தியமாய் மறைத்துவிட்டு
சுயம்வர மண்டபத்தில்
சூடிடு மாலையென்று
சுயநல யோசனை தந்த
சுந்தரியைக் கேட்கின்றேன்...

அம்பிகா அம்பாலிகாவின் அக்கையே..
#அம்பை பெயர்கொண்ட அம்மணியே..
கங்கை மைந்தன் வந்து
தம்-கையை வைத்தபோது
தங்கைகள் பேசவில்லை சரி...
உம்-கை உதறலையே ஏன்?!

வந்த இடம் வந்து
வம்பிழுத்து வாங்கியன்று
நொந்த காதலனும்; நீ
சொந்தமெனச் சொல்லலையே ஏன்?!

சேதி தெரிந்ததுமே
சென்றுவர அனுமதித்தும்
சேர்க்க மறுத்துவிட்டக்
காதலனைக் கேட்கலையே ஏன்?

உன்னவன் உதறிவிட்டால்
உன்னவனைக் கேட்காமல்
தன்னவனாய் மாறென்று
தூக்கியவனைக் கேட்டாயே ஏன்?

கைவிட்ட காதலனை
கை எடுக்க எண்ணாமல்
போமா எனச் சொன்னவனை
போட்டுத்தள்ள நினைத்தாயே ஏன்?

சரசம் செய்த சண்டாளனின்
சிரசினைக் கொய்யாமல்
பரசுராமைக் கூட்டிவந்து
பீஷ்மரோடு மோதினாயே ஏன்?

அம்பையாய்த் தோற்றபோதும்
அப்படியே போகாமல்
சிகண்டிகையாய்ப் பிறந்துவந்து
சீறி நின்றாயே ஏன்?

தவறிலும் தவறிழைத்த
தறுதலையை விட்டுவிட்டு
பிறவி விட்டு பிறவி வந்து
பெரும்பிழையைச் செய்தவளே...

கர்மவினை காரணமே
காரியமாய் ஆவதினால்
தர்மப்போர் காரணியாய்
காரிகை நீ வந்தனையோ?!!

✍️செ. இராசா

No comments: