16/11/2022

சூரியன்

 #சூரியன்

திடீர் வெடிப்பில் சிதறி
கோள்களோடு குடும்பமாகி
பால் வீதியில் குடியேறி
பேரண்டத்தில் சுற்ற வேண்டி
வளியூரில் வழியமைத்த
ஒளிவெள்ளச் சூரியனை
எண்ணியெண்ணிப் பார்க்கின்றேன்..
எண்ணமெல்லாம் போற்றுகின்றேன்...

ஒன்றைச் சொல்லுங்கள்...

சூரியன் மட்டும் இல்லையென்றால்
பூமிப் பாத்திரத்தில்
கடலை யார் காய்ச்சமுடியும்?
ஆவி சூத்திரத்தில்
புனலை யார் பாய்ச்சமுடியும்?

சூரியகுலத் தென்றல் இராமனாம்...
சூரியவழித் தோன்றல் கர்ணனாம்...
இங்கே...
சூரியனை மையமாக வைத்துதான் எல்லாம்..
இந்த மையத்தைச் சொன்னவர் கலிலியோ
அவரைச் சொல்லவா விட்டார்கள்?!

ஒன்றைப் புரிந்து கொள்ளுங்கள்!

சூரியன் மட்டும் இல்லையென்றால்
சுற்றிடும் கோள்கள் இல்லை
சுற்றிலும் விடியல் இல்லை
என்னது விடியலா?
அட...
இதுஅரசியல் இல்லை
அறிவியல்!

இருளில்லா சூரியன்தான்
இருளைக் கிழிக்கிறது!
நீரில்லா சூரியன்தான்
நீரை அளிக்கிறது!
தூரத்து சூரியன்தான்
துணைக்கு வருகிறது!
ஞாலத்து சூரியன்தான்
ஞானம் தருகிறது!

எனில்...
எரியட்டும் சூரியன்‌‌!
தெரியட்டும் பாதை!
தெளியட்டும் போதை‌‌!
போகட்டும் வாதை!

✍️செ. இராசா

No comments: