05/10/2022

புலமை இலக்கணம்

 

 


#இலக்கண_நூல்கள்_பற்றிய_ஒரு_அறிமுகம்

 

உலகின் தொன்மையான மொழியான நம் தமிழில், நமக்குக் கிடைத்த முதல் நூல் #தொல்காப்பியம். பொதுவாக, ஒரு மொழி தோன்றி எத்தனையோ ஆண்டுகளுக்குப் பிறகுதான் இலக்கண நூல்கள் தோன்றியிருக்க வேண்டும் என்பது ஆய்வாளர்களின் கருத்தாகும். அந்த வகையில் பார்த்தால்கூட, நமக்குக் கிடைத்த தொல்காப்பியத்தின் வயதே, ஏறக்குறைய 3000 ஆண்டுகள் இருக்கும் என்கிறார்கள் என்றால், நம் மொழியின் வயதை நீங்களே கணித்துக்கொள்ளுங்கள்.

 

தொல்காப்பியத்திற்கு முந்தைய நூல்களான #அகத்தியம் போன்ற இலக்கண நூல்கள் நமக்குக் கிடைக்கவில்லை என்றறிகிறோம். ஆனால், தொல்காப்பியத்திற்குப் பின்பாக பல இலக்கண நூல்கள் தோன்றியுள்ளன. ஒரு மொழியின் வளர்ச்சியைப்பொறுத்து காலம் தோறும் பல நூல்கள் தோன்றுவதும் காலத்தின் கட்டாயமே. அது மொழியின் வளர்ச்சிக்குத் தேவையும் கூட. அப்படி உருவான நூல்களில் சிலவற்றை அறிமுகப்படுத்தும் விதமாகவே இக்கட்டுரையை இங்கே வழங்குகின்றேன்.

 

அனைத்து மொழிகளுக்கும் இல்லாத ஒரு சிறப்பு என்னவென்றால், நம் மொழியில் மட்டும்தான் #எழுத்து, #சொல் என்னும் இரண்டு அதிகாரங்களோடு, மனித வாழ்வியலைச் சொல்லும் இலக்கணமாக #பொருள் என்னும் அதிகாரமும் உள்ளது. எழுத்து மற்றும் சொல் எப்படி உருவாகிறது, அதன் ஒலி அளவான மாத்திரை என்ன? சொற்களின் புணரியல் விதி என்ன என்பதையெல்லாம் முதல் இரண்டு அதிகாரங்கள் விளக்குகின்றன. மூன்றாம் அதிகாரமான பொருளில் தான், அகம் புறம் எனக் காதலையும் வீரத்தையும் எடுத்துச்சொல்கிறது. அதோடு நில்லாமல் மேலும் இரண்டு பிரிவுகளான, #யாப்பு மற்றும் #அணி போன்றவை தனி அதிகாரங்களாகவோ அல்லது பொருளியலோடு சேர்ந்தோ வருகின்றது. இப்படி எழுத்து, சொல், பொருள், யாப்பு மற்றும் அணி இவற்றை விளக்கும் விதத்தில்தான் பல நூல்கள் தோன்றியுள்ளன. அவைபற்றி சுருக்கமாக கீழே பாப்போம்;

Description: C:\Users\CL288\Desktop\Tamil\Tamil grammer.jpg

 

* தொல்காப்பியம் மற்றும் இலக்கண விளக்கம் என்னும் இரண்டு நூல்கள்---எழுத்து, சொல், பொருள் என மூன்று அதிகாரங்களை விளக்குகிறது.

 

* நன்னூல், நேமிநாதம் மற்றும் தமிழ்நூல் என்னும் மூன்று நூல்கள்- எழுத்து, சொல் என இரண்டு அதிகாரங்களை மட்டும் விளக்குகிறது. (நன்னூலில் முழுவதும் கிடைக்கவில்லை என்ற கருத்தும் உள்ளது)

 

* புறப்பொருள் வெண்பாமாலை, அகப்பொருள் விளக்கம், இறையனார் அகப்பொருள், தமிழ்நெறி விளக்கம் என்னும் நான்கு நூல்கள்----பொருளை மட்டும் புறம் அல்லது அகம் என்று தனியே எடுத்து விளக்குகிறது.

 

* யாப்பருங்கலம், யாப்பருங்கலக்காரிகை என்னும் இரண்டு நூல்கள்---யாப்பை மட்டும் விளக்குகிறது.

 

* தண்டியலங்காரம், மாறன் அலங்காரம் என்னும் இரண்டு நூல்கள்- அணியை மட்டும் விளக்குகிறது.

 

* வீரசோழியம், தொன்னூல் விளக்கம், முத்து வீரியம், சுவாமி நாதம் என்னும் நான்கு நூல்கள்---எழுத்து, சொல், பொருள், யாப்பு மற்றும் அணி என ஐவகை இலக்கணத்தையும் விளக்குகிறது.

 

* இதுபோக சிதம்பரப் பாட்டியல், நவநீதப் பாட்டியல், பன்னிரு பாட்டியல் என்னும் மூன்று நூல்கள்---பொதுவாக பாட்டியலைப் பற்றி விளக்குகிறது.

 

* இவற்றில் எல்லாம் தனித்து ஒரு நூல் #ஐவகை_இலக்கணத்தை மட்டுமின்றி ஆறாவது ஒரு இலக்கணத்தை அறிமுகப்படுத்துகிறது, அது "#புலமை_இலக்கணம்" என்று கவிஞனுக்குத் தேவையான இலக்கணத்தைச் சொல்கிறது.

 

அந்நூலின் பெயர் என்ன தெரியுமா? தெய்வத்திரு தண்டபாணி சாமிகள் இயற்றிய "#அறுவகை_இலக்கணம்" என்னும் நூலே ஆகும். அந்தப் "புலமை இலக்கணம்" என்ன என்பதை அடுத்தப் பதிவில் பார்ப்போமா?

 

 

#புலமை_இலக்கணம்

 

ஒரு புலவர் எப்படி இருக்க வேண்டும் என்பதை வலியுறுத்தும் "புலமை இலக்கணம்" என்னும் பகுதி, தமிழில் வேறு எந்த இலக்கண நூல்களிலும் காணக் கிடைக்காத ஒரு பகுதி. இங்கே....எழுத்து, சொல், பொருள், யாப்பு மற்றும் அணி போன்ற ஐவகை இலக்கணங்களையும் கூறிவிட்டு ஆறாவது இலக்கணமாக "புலமை இலக்கணம்" வருவதால் இந்நூலுக்கு அறுவகை இலக்கணம் என்ற பெயரைச் சூட்டியுள்ளார் இந்நூலின் ஆசியர். அவர் பெயர் தவத்திரு தண்டபாணி சுவாமிகள் அவர்கள்.

 

இந்தப் புலமை இலக்கணத்தில் நான்கு பகுதிகள் வருகிறது.அவையாவன....

1. தேற்ற இயல்பு

2. தவறியல்பு

3. மரபியல்பு

4. செயல்வகை இயல்பு

 

 

இதில் தேற்ற இயல்பு என்னும் பகுதி கவிஞனுக்குத் தேவையான தகுதியையும், தவறியல்பு என்னும் பகுதி கவிஞன் செய்யக்கூடாத விடயங்களையும் விவரிக்கிறது. மூன்றாவது பகுதியான மரபியல்பு என்பது முன்னர் வாழ்ந்த பல கவிஞர்களின் வரலாற்று நிகழ்வுகளை விவரிக்கிறது. அதை இங்கே வழங்கப்போவதில்லை. நான்காவது பகுதி தொழில் முறை கவிஞனுக்கு தேவையானவற்றை மேலும் நான்கு பிரிவுகளாக விவரிக்கிறது. இதிலும் நிறைய தேவையில்லாத பகுதிகளை நீளம் கருதி வழங்கப்போவதில்லை.

சரி..இப்போது கட்டுரையின் உள்ளே போகலாம்.

 

புலமை----ஒன்றைப்பற்றி அறியும் தன்மையே புலமை

 

தேற்ற இயல்பு (தேற்றம் என்றால் தெளிவு எனப் பொருள்படும்)

*********************************************************************

1. அறிவில் மயக்கமற்ற தெளிவே புலமை. அதனை உடையவரே புலவர்.

2. புலமை பெறவேண்டும் என்னும் பெருவிருப்புடையவன் பெரும்புலமை பெற்றுள்ள அறிஞர்களைப் பணிந்தொழுகுதல் சிறப்பாகும்.

3. இலக்கியத்தைப் இலக்கணத்தை இரண்டையுமே கவிஞனிடத்திற் கற்றலே சிறப்பு.

4. தெய்வத்துதிவழியாகப் புலமை தேறவேண்டும்.

5. நுண்மாண் நுழைபுலம் மிக்க சான்றோர்களை வெறுக்கும் பண்பு தமிழ்ப்புலமை வேட்கை உடையவர்க்குக் கொஞ்சமும் கூடாது.

6. மடி, பேருறக்கம், பெண்ணாசை, வறுமை --இடர்செய்தாலும் சோர்வடையாமல் கல்வியில் கவனம் செலுத்தும் மாணவர் தங்கத்தைப் போன்றவர்கள்.

7. முழுப்புலமை பெறாதவர்கள் (தம் பொறாமையால்) பாடல்களைக் குறைகூறுவதால் பயமடைந்து கவிதைகளைப் புனையச் சோர்வடைவது தவறாகும்.

8. புலமையும் சான்றாண்மையும் பெற்ற பெரியோர் பிழைகள் நேராமல் இருப்பதற்குரிய வழிகளையும் சொல்லித் தருவர். அப்பிழைகளைப் பெரிதுபடுத்தி மனச்சோர்வடையச் செய்யமாட்டார்கள்.

9. நன்கு தேர்ச்சியடைந்த பிறகே சித்திரகவிகளில் சிந்தை செலுத்தவேண்டும்

10. ஆசிரியன் மாணவனின் அறிவுநிலை அறிந்து ஈற்றடி தருவார். எனவே மாணவன் அதனை முற்றுவித்தால் எளிதாகும்.

11. பதம் கீர்த்தனை எனப்படும் நாடகத்தமிழ்ப் பாடல்கள், நான்கு காய்ச்சீர் கொச்சகக்கலிப்பா என்னும் இரண்டையும் முதலில் இயற்றத்தொடங்கிப் பழகுவது சிறப்பாகும்

12. ஆசிரிய விருத்தங்களின் நன்கு தேர்ச்சி பெறுவதற்குமுன் கட்டளைக்கலித்துறை முதலிய பாவினங்களைப் பாட முற்படுதல் தவறாகும்

13. அகவற்பாக்களின் கைவந்தபின்பே வெண்பா, கலிப்பா போன்றனவற்றை முயல வேண்டும்.

14. வெண்பா விரைவாகவும் இயல்பாகவும் பிழையற ஒருவருக்கு வருவதற்கு முன்னால் அவர் சந்தக்கவிகளை இயற்றத் தொடங்குதல் மரபன்று

15. மாலை, அந்தாதி, பிள்ளைத்தமிழ், கலம்பகம் போன்ற சிற்றிலக்கிய வகைகளில் நன்கு தேர்ச்சி பெற்ற பிறகு பெரிய காப்பியங்களை இயற்றத் தொடங்கினால் அவை சுவை குன்றாமலும் குற்றமற்றும் விளங்கும்.

16. நல்ல காவியப் புலமை கைவந்த பிறகே இலக்கணம் தத்துவம், சோதிடம், மருத்துவம் போன்ற அறிவுநூல்களை இயற்றத் தொடங்குதல் அறிவுடைமையாகும்.

17. மொழித்தெளிவு பிறக்கும்வரை புலமையைப் பெருக்கிக் கொள்ளவேண்டும்.

18. அனைத்து வகையான நூல்களையும் இயற்றுகின்ற அரிய வல்லமை ஏற்பட்டாலும், தம்மாலியற்றப்பட்டதைத் தாமே மீண்டுமோர்முறை பரிசீலித்துத் திருத்தவேண்டிய நிலைமை தோன்றாத சிறப்பை விழைந்து, அதனைப் பெறுவதற்காக முயலல் நன்மாணாக்கர்களின் இயல்பாகும்.

19. ஒரு கவிஞர் தம் படைப்பைத் தாமே வரிவடிவில் எழுதுவதைவிட மற்றொருவர் எழுதும்படி தாம் இடையீடில்லாமல் கூறிக்கொண்டே செல்வது மிகவும் செயற்கரிய செயல் (பட்டோலை) ஆகும். இந் நிலையை அடையும்வரை இவர் புலமை அறிவுத் தன்மையைச் சார்ந்தது என்று கொள்ளப்படும். (அப்புலமை தெய்வத்தன்மை கொண்டது எனப்படும்)

20. தம்மால் தியானிக்கப்படுகின்ற கடவுளின் திருவடிவம் காட்சியளித்தும், தம் செவிப்புலன் கேட்குமாறு உரையாடியும் ஆட்கொண்டாலன்றி முழுப்புலமை அடைந்ததாகக் கூறமுடியாது எனல் மரபு.

21. பொருளை நாடிச் செல்வர்களிடம் செல்வது உயர்ந்தது ஆகாது.

22. இலக்கியச் சுவை உணர்வு இல்லாதவன் பேரரசன் ஆயினும் அதனை உடைய சாமானியனைவிட இழிந்தவனே ஆவான் எனத் தெளிபவர்தம் சிறந்த அறிஞர் ஆவார்.

23. ஒரு தெய்வம் தமிழினினிமையைத் துய்க்க அறியாது இருக்கிறது என்றால் அது பேயைவிடக் கீழானதே என்று கூறுதலே நீதியாம்.

24. முழுவதும் சந்தக்கவிகளாலேயே இயலும் ஒலியலந்தாதி போன்ற அரிய நூல்களை இயற்றும் திறமை படைத்திருந்த போதிலும் ஒரு கவிஞரின் வாக்கில் அருள்வலிமை இல்லாவிட்டால் அவர் பலவாறு வருந்துவார்.

25. அளவாலும் முயற்சியாலும் சிறியதாக அமைந்த ஒரு பாடலைக் கூடச் செப்பமாக இயற்றத் தெரியாதவனும் ஏதாவது ஒரு பேயையாவது துணையாகக் கொண்டு ஓர் அதிசயத்தை நிகழ்த்திக் காட்டிவிட்டால் இவ்வுலகில் பெரும்பான்மையராகிய மக்கள் அவனைத் தெய்வமாகக் கருதிப் போற்றுவர்.

26. ஒரு பாடலைப் பாடி ஒருவன் இறந்தவரையே எழுப்பிக் காட்டினாலும் அது இலக்கியநயம் மிக்கதாக இல்லாமல் இருப்பின் சற்றும் மயங்காத தன்மையை உடையவர்கள் எண்ணிக்கையில் மிகச்சிலரே ஆவர்.

 

#புலமை_இலக்கணத்_தொடர்ச்சி_2

 

II. #தவறு_இயல்பு (புலவர்கள் செய்யக்கூடாதவை)

 

1. தம்மால் முடிந்தவரை எத்தகைய குற்றங்கள் எல்லாம் அமைந்துவிடக் கூடாது என அறிந்து அவற்றை நீக்கிக் கொள்வதற்காகத் தவறு இயல்பு என்ற பகுதி வருகிறது.

2. “ஒரு கவிஞனிடம் வாக்குப்பலிதம் இல்லாவிடினும் அவனிடமுள்ள கல்வி மற்றும் மொழிப்புலமையே இணையற்ற இறையருள் ஆகும்என எண்ணுதல் தவறாகும்.

3. எள்ளளவு கல்வியறிவு பெறுவதற்கு முன்பாகவே நெல்லளவு செருக்கடைவது தவிர்க்கப்பட வேண்டியதோர் தவறு ஆகும்.

4. காகம் தன் இனத்தோடு கலந்து வாழ்வதைப் போலன்றித் தன் இனமாகிய பிற நாய்களையே வெறுத்துத் துரத்தும் நாய்க்குணம் படைத்த புலவர்கள் பலராவர்.

5. தமிழ்ச்சுவையை உணரவல்ல அறிஞர்களின் நிலையான நட்பைக் காட்டிலும், பொருட்செல்வம் மட்டுமே பெற்று விளங்கும் அரசர், அமைச்சர், பெருஞ்செல்வர் போன்றவரின் நிலையற்ற நட்பு சிறப்புடையது எனக் கருதும் ஒருவர் சிறந்த நூலாசிரியராக விளங்கினாலும் அவர் புலவரில் இழிந்தவரே ஆவார்.

6. ஓரளவு கற்றும் கல்வி நுட்பத்தை உணராத இளம்புலவர்களை மனச்சோர்வும் துன்பமும் அடையும்படித் தம் புலமையையும் செல்வாக்கையும் காட்டி வருத்துகின்ற பெரும் புலவர்கள் உள்ளீடற்ற வெற்றுத் தானியம் போன்று பயனற்றவரே ஆவர்.

7. செவ்வையாக அமைந்த சிறந்த புலவர்களின் சொற் றொடர்களை அப்படியே தாம் எடுத்தாண்டு இழிவான கவியாகப் பாடுகின்ற புலவர்கள் பலர் உள்ளனர்.

8. தம் கல்விச் செருக்கால் இளம் புலவர்களையும் பொது மக்களையும் துன்புறுத்துகின்ற கொடிய இயல்புடைய வாதிட்டு வென்று அவர்களுடைய ஆணவத்தை ஒடுக்க வேண்டும். அவ்வாறு செய்யாதவருடைய சிறந்த புலமையாற்றலும் குறையுடையதாகவே கருதப்படும்.

9. இலக்கியப் போட்டியில் தம் தோல்வியை ஒப்புக்கொண்ட பிறகு தோற்றவரின் செவியை அறுப்பதால் பயன் ஒன்றும் இல்லை.

10. மற்றவர்களின் பழிச்சொற்கள் அனைத்தையும், எல்லா இடத்திலும், எல்லா நேரத்திலும் சற்றும் வெகுளியின்றித் தாங்கிக் கொள்வதுதான் தமிழ்ப்புலவர்களின் இயல்பு எனலாகாது. அவ்வாறே அடுத்தவர் அனைவர்பாலும் எப்போதும் சினத்தைக் காட்டுகின்ற முன்கோபத்தன்மையும் பண்பன்று.

11. தம் தமிழ்ப் புலமையை வெளிக்காட்டக் காமச்சுவையை மிக விரித்தும், பச்சையாகவும் கொச்சையாகவும் பாடுதலே சிறந்த நெறியாகும் என நம்பி, அவ்வழியில் ஈடுபடுவோரின் புலமையால் அவர்களுக்கோ, நாட்டுக்கோ, மொழிக்கோ சற்றும் ஆக்கபூர்வமான பயன் இல்லவே இல்லை.

12. பெறுதற்கரிய வீட்டின்பத்தையும் தமிழ்ப் புலமையால் பெறலாகும் என்பதைப் புரிந்துகொள்ளாத நாவலர்கள் இழிந்தவரே ஆவர்.

13. பரிசில்களுக்காகப் புகழ்ந்து பாடி பெற்றுக் களிக்கின்ற செல்வச் செழிப்பைக் காட்டிலும், படைத்தளித்த பரம்பொருளின் வள்ளன்மையைப் போற்றும் புலவரின் வறுமைநிலையே பாராட்டிற்குரியது.

14. இயற்றுதற்கரிய நூலை இயற்றி அதைப் பணத்திற்குவிலைப் பொருளாக்குதல் சிறப்புடைய செயல் ஆகாது.

15. செல்வன் முன்சென்று தம் பெருமையைக் கூறுவதும், அவன் அறிந்து பாராட்டிப் பரிசில் வழங்குவான் என எதிர்பார்த்தலும் தவறாகும்.

16. கால வேற்றுமை கருதாப் புலவன்

சீலனே எனினும் சிறுமை யினனே.

மாறிவருகின்ற காலப்போக்கின் இயல்பைச் சிந்தித்துப் பார்க்காத கவிஞர் சிறப்புடையவனாகவே இருந்த போதிலும் உலகின் அன்றைய சிந்தனையை உணராதவர் என்னும் குறையை உடையவர் ஆகிறார்.

17. காரணம் காரியம் காணாப் புலமையைப்

பூரணம் என்னப் புகலவொண் ணாதே.

(உலகில் நடைபெறும் அனைத்து நிகழ்ச்சிகளும் சங்கிலித் தொடர் போலக் காரண, காரியத் தொடர்புடையவை. பல சமயங்களில் அவை எளிதில் விளங்காது எனினும்) நிகழ்ச்சிகளினுடைய காரண, காரியத்தொடர்பை அறியாவொருவரின் கல்வியாற்றலை முழுமை பெற்றதாகக் கூற முடியாது.

18. கொண்ட துறையினைக் கோதுபடக் கூறின்

மண்டலத் தாரும் மதியார் அன்றே.

தாம் பாடத் தொடங்கிய துறையைத் தவறாகப் பாடுவாராகில் இவ்வுலகில் யாருமே அவரைப் போற்ற மாட்டார்.

19. திருவருள் வலிமை பெற்றுள்ள பெரியவர்களுக்குக் கூட பயப்படாத புலமைச்செருக்கு அறிவுமயக்கத்தின் விளைவாகக் கருதப்பட்டு நல்லோரால் பழிக்கப்படும்.

20. குறைவின்றி அனைவராலும் போற்றப்படுதலைப் பெற விரும்பும் புலவன் ஒருவனுக்கு இடத்தாலும், காலத்தாலும் பொருந்தாததும், பலராலும் ஏற்றுக் கொள்ளமுடியாததும் ஆகிய வழிகளை மிகவும் வற்புறுத்திக் கூறுவது பெரிய தவறாக முடியும்.

21. சுருக்கமாகச் சொல்லத் தக்கனவற்றைப் பயனின்றி மிக நீட்டி விரித்துக் கூறினாலும், விளக்கமாகக் கூறவேண்டிய இடங்களில் தெளிவு ஏற்படாத வண்ணம் மிகவும் சுருக்கமாகக் கூறினாலும் கல்விச் சிறப்பையுடைய அறிஞர்கள் போற்றமாட்டார்கள்.

22. ஒரு புலவன் தன் மாணவனுக்குக் கல்வி கற்பிக்கும்போது தாம் சார்ந்துள்ள சமயத்தின் தெய்வத்தையும் குருவையும் போற்றாத பிற சமய நூல்களைக் கருவியாகக் கொண்டு கற்பித்தல் பிழையாகும்.

23. எல்லோராலும் சிறப்புடையதாக ஒருமித்து ஏற்றுக் கொள்ளப்பட்டுள்ள நூலின் கருத்துகளையும், அந் நூலின் சிறப்பை யெடுத்துப் பாராட்டுபவர்களின் கூற்றுகளையும் அறிவற்றவை எனக்கூறுவது பெரும் தவறாகும்.

24. பழைய வரலாறுகள் இடம்பெறக் கூடாது என்பது ஒரு தவறான கருத்தாகும்.

25. ஒரு செல்வனுக்கே அடிமைப்பட்டு அவன் கருத்தின் வண்ணமே ஒழுகுகின்ற ஒரு கவிஞனின் புலமையை விடப் பற்பல தலைவர்களின்மீது பாடல்களைப் புனைந்து அவர்கள் தரும் பரிசில்களால் வாழ்க்கை நடத்தும் இரவலரின் இழிவும் உயர்ந்ததே.

26. ஒரு நூல் அல்லது செய்யுளில் ஏதோ ஒரு குற்றத்தை நினைத்து அந் நூல் அல்லது பாடல் முற்றுமே பிழையென்று வாதிடுதல் சிறந்த அறிவுடைமைக்கு ஏற்ற செயலாகாது.

27. தமிழைவிட எல்லாவகையாலும் சிறப்புப்பெற்றதாகிய வேறு ஒரு மொழி இவ்வுலகத்திலே இருக்கிறது என யாராவது ஒருவர் கூறக்கேட்டும் சற்றும் சினங்கொள்ளாமல் ஒரு புலவன் இருப்பின் அவன் பெயரளவில் புலவனே அன்றி உண்மையில் வெறும் சதைப்பிண்டமே.

28. அனைத்துவகைக் கவியினும் வண்ணக் கவியே மிக உயர்வானது என ஒப்புக்கொள்ளாதவர்களின் அறிவுத்திறமை குறையுடையதாகக் கருதப்படும்.

29. ஒருவனின் இலக்கியப்படைப்பு தம் உள்ளத்திற்குப் பிடித்ததாக இருந்தும் அழுக்காறு அல்லது வேறு சில காரணங்களால் அப்படைப்பைக் குறை கூறுகின்ற தீய குணம் படைத்தவர்களின் பொல்லாங்கை உடனே தெய்வம் குறித்துவைத்துக் கொள்ளும்.

30. ஒருவன் பெற்றுள்ள செல்வவளம், தோன்றிய குடும்பத்தின் சிறப்பு, வசிக்கும் அதிகாரமுள்ள பதவி, அணிந்துள்ள ஆடையணிகளின் ஆடம்பரம், பெற்றுள்ள விருதுகள் முதலியனவற்றில் ஒன்றையோ அல்லது சிலவற்றையே மட்டுங்கருதி அவனுடைய புலமையைத் தகுதியற்றபோதும் புகழ்ந்துரைத்தல் உண்மைப் புலவனுக்குப் பொருந்தாத செயலாம்.

 

 

#புலமை_இலக்கணத்_தொடர்ச்சி_3

(ஏற்கனவே கூறியதுபோல் மரபியல்பு மற்றும் செயல்வகை இயல்பில் சில பகுதிகள் தவிர்க்கப்படுகிறது)

IV. #செயல்வகை_இயல்பு

#தொழில்நிலை (தொழில் நிலை கவிஞர்களுக்கானது)

1. தமிழ் மொழிக்கும், பாடும் தொழிலில் ஈடுபட்டுள்ள தனக்கும், தான் சார்ந்துள்ள சமயத்திற்கும், தமிழர்களாகிய தன் இனத்தினர்களுக்கும் எத்தகைய தீமையும் நேர்ந்து விடாதபடி விழிப்புடன் தொழில் புரிபவனின் அறிவாற்றல் தலைசிறந்தது.

2. பொதுமக்களின் சொற்களையும், அவர்கள் கூறும் செவிவழிச் செய்தி முதலியவற்றையும் தன்படைப்பில் சற்றும்சேர்க்காமல் முற்றிலுமாக ஒதுக்கி விடுதல், அவை அனைத்தையும் அப்படியே முழுமையாகப் பயன்படுத்தல் ஆகிய இரண்டும் புலமைத் தன்மைக்குத் தாழ்வை உண்டாக்கும்.

3. ஒரு புலவன் தன் அறிவு வன்மையை மட்டுமே பெரிதாக எண்ணித் தனக்கு இறையருள் முற்றிலும் எப்போதும் துணை செய்யும் என்னும் நிச்சயமான துணிவு ஏற்படுவதற்குமுன்னமேயே அட்டாவதானம், எமகண்டம், கண்டசுத்தி போன்ற ஆபத்தான துறைகளில் விளையாட்டாக ஈடுபடக் கூடாது

4. கல்வியறிவற்ற பாமரர்கள் மட்டும் மிகவும் சுவைத்துப் பாராட்டும்படியாகக் கவிதைகளை இயற்றும் புலமையைவிட, அறிஞர்கள் போற்றுமாறு இலக்கியம் படைப்பவனின் ஆற்றல் பல மடங்கு உயர்வானது

5. தான் நினைத்த செயலைத் தன்வாக்குப் பலிதத்தாலேயே உடனே செய்து முடிக்கின்ற ஆற்றல் உடைய புலவனை ஆதிசேடனுக்கு இணையானவன் என்று உலகத்தவர் கூறுவர்

6. தான் கற்ற கல்விக்குக் கல்வி, செல்வம் இவற்றால் உண்டாகும் பெருமிதமும், பலராலும் பாராட்டப்படும் சிறப்புமே பயன்கள் எனவும், அதனால் அவற்றை எப்படியாவது பாடுபட்டுப் பெறவேண்டும் எனவும் கருதி வருந்தி உழைப்பவன் சூரியனுக்கு முன்னால் நெளிந்து ஆடுகின்ற பாம்புக்குட்டி போன்றனே ஆவான், ஆனால் இந்த உண்மையை அறிந்தவர் மிகச்சிலரே ஆவர்.

7. “முற்காலக் கவிஞர்களுக்கு இயல்பாகவே மிகுதியான நல்லூழ் இருந்தது. அத்தகைய அதிர்ஷ்டம் இன்றைய புலவர்களுக்கு இல்லை., எனவே இக்காலத்தில் எம்போன்றவர்கள் செயற்கரியனவற்றைச் செய்ய இயலாதுஎன்று படித்தவன் ஒருவன் கூறுவானாகில் அவன் பார்வைக்கு மட்டிலும் பாம்பைப் போலக் காட்சிதரும் ஒரு மீன்போன்றவனே ஆவான்.

8. யாராக இருந்தாலும் வாக்குப்பலிதமுடைய புலமையின் சிறப்பை, அடையப் பெற்றால் அவர் கடவுளர்களுக்கு இணையாகப் போற்றப்படுதல் ஒருதலை

9. புலமையின் சிறப்பையெல்லாம் மற்றொரு புலவனால்தான் முற்றிலுமாக உணர முடியும் என்பது உண்மையாகும்.

 

2. #நடுநிலை (நடுவர்கள் தகுதி)

 

 

இப்பிரிவில் தவிர்க்க முடியாத காரணங்களால் புலவர் இருவர்க்கிடையே போட்டி ஏற்பட்டுவிட்டால் அப்போட்டிக்கு நடுவராக இருப்பவர் எப்படி ஒழுக வேண்டும் என்பது சிறப்பாகவும், போட்டியாளர்கள் எவ்வாறு நடந்து கொள்ள வேண்டும் என்பது பொதுவாகவும் கூறப்பட்டுள்ளது, நடுநிலை பற்றிய ஓரிரு பொதுக் கருத்துகளும் இதில் இடம்பெற்றுள்ளன

1. தெளிந்து கூறுபவர்கள் சான்றோராவர்.

2. எந்த ஒரு நல்ல பொருளிடத்தும் சில தீய பண்புகளும், எத்தகைய தீய பொருளிடத்தும் சில நல்ல குணங்களும் இயல்பாக விரவியே இருக்கும்.

3. தன் தோல்வியை ஏற்றுக்கொள்பவனே நல்லறிஞனாவான்.

4. நடுவராக அமைந்த ஒருவன் இருதரப்பு வாதங்களையும் நடுநிலையில் நின்று சீர் தூக்கி உணர்ந்து நியாயமான தீர்ப்பை வழங்காமல் தன் சொந்த வெறுப்பு விருப்புகளின் காரணமாக ஒருவனுக்குச் சாதகமாகச் சார்ந்து நின்றால் அவன் மீளா நரகத்து உழல்வான்.

5. சொந்தமாகக் கவிதை புனையும் ஆற்றல் இல்லாத வாதிடப் புகுந்தால் நடுவர் அவ்விருவரையும் பரிகசித்து ஏளனம் செய்வதே சரி.

6. இரு புலவர்கள் வாதிட்டால் தோற்றவர் தம் காதை இழப்பதற்குச் சித்தமாக இருப்பது வண்ணத்தில எழும் வாதம் ஆகும்.

7. வெண்பாவின் அடிப்படையில் ஏற்பட்ட போட்டியில் தோல்வியடைந்த புலவன் தான் அதுவரை பெற்றிருந்த சிறப்புப் பட்டங்கள், பல்லக்கு முதலிய விருதுகள் அனைத்தையும் விட்டுவிட வேண்டும், அதேபோல வண்ணப் போட்டியில் ஒருவன் தோல்வியுற்றால் அவன் காதுகள் அரியப்பட்டுவிடும், இது பண்டைய மரபு எனப் பலர் கூறுவர்.

8. வாதிடும் இருவரும் வண்ணமோ, வெண்பாவோ இயற்றத் தெரியாதவர்களாக இருப்பின், அவ்விருவருக்கும் புனையத் தெரிந்த ஒரு யாப்பில் பாடல்களை இயற்றச் சொல்லி, அவற்றைச் சீர்தூக்கிப் பார்த்து எது சிறந்தது என்பதைக் காரணங்களோடு விளக்கித் தீர்ப்பு வழங்கிய பிறகு தோற்றவனை வென்றவன் அடிக்க வைத்து மனநிறைவைப் பெறுவது சரியான பண்பே.

9. தனக்கு எதிர்ப்பட்ட ஒரு கவிஞன் எந்த அளவிற்குத் தமிழ்மொழியைச் சிறப்பாகக் கையாள வல்லவன் என்பதை அவன் இயற்றும் இரட்டை ஆசிரிய விருத்தத்தைக் கொண்டும் அறியலாம் என்று கூறுபவர்களும் பலர் உளர்.

10. சரியாகச் செயல்படுகின்ற பேரறிஞர்களை எப்போதும் போற்றவேண்டும்.

 

-----முற்றும்-----

 

 

 

No comments: