#கற்றதால்_என்ன_பயன்?
#ஔவைத்_திங்கள்_12
சார்ந்த இனத்தைத் தவறாகப் பேசுகையில்
சார்பின்றி நிற்பதா சால்பு?
(1)
பிரிவினை பேசிப் பிரிக்கின்ற பேரை
பிரிப்பதில் என்ன பிழை?
(2)
அறமென்ற ஒன்றே அறிந்தநற் தெய்வம்
அறமின்றி உண்டா அரண்(ன்)?
(3)
மெய்யை உணராமல் மேதினியில் பேசிடுவோர்
பொய்யைச் சரியென்றால் போடு!
(4)
தன்னை உணராமல் தான்கற்ற கல்வியினால்
என்ன பயனுண்டாம் இங்கு?
(5)
ஆய கலையெல்லாம் அற்புதமாய்க் கற்றாலும்
காய கற்பமின்றி கல்!
(6)
நம்பித் தெளிவோரின் நம்பிக்கை தப்பென்று
நம்பாதோர் சொல்வதா நன்று?
(7)
உட்பொருள் காணாமல் ஒன்றொன்றாய்க் கற்றாலும்
மட்பொருள் போல்தான் மதி
(8)
அணுஞானம் கற்றோன் அறமின்றிப் போனால்
அணுகுண்டு செய்வான் அறி
(9)
கற்றதில் உற்றதைக் கற்றபடி பற்றாரை
கற்றாராய் ஏற்றிலர் காண்!
(10)
செ. இராசா
10/10/2022
கற்றதால் என்ன பயன்? --- ஔவைத் திங்கள்- 12
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment