#கண்கள்_திறக்கட்டும்
*************************
அகத்தின் அழகு
முகத்தில் தெரியுமெனில்
முகத்தின் அழகை
முன்மொழிவது எது?....கண்கள் தானே?!
எண்ணையும் எழுத்தையும்
கண்ணெனச் சொல்லி
கல்லார் கண்களைப்
புண்ணெனச் சொல்லி
குறிப்பறிதல் இரண்டில்
குறியீடு காட்டி
கண்களை வைத்தே
கதகளி ஆடினாரே வள்ளுவர்!
அவரை விடவா
கண்களைப்பற்றி கவியேற்ற முடியும்?!
இங்கே....
வாய்மொழி வாசிக்கும் வரிகளுக்கே
வார்த்தையில் ஆயிரம் ஒலி!
கண்களால் பேசிடும் கவிதைக்குக்
கண்களே செப்பும் மொழி!
எத்தனை மெகா பிக்சலென
எப்போதும் கேட்பீரே....
கண்களின் மெகா பிக்சல்
கணக்கென்ன கேட்பீரா...
ஐநூற்று எழுபத்தாறாம்..
சொல்கிறது கூகிள்!
எங்கே காட்டுங்கள்
அப்படி ஒரு கேமிரா?!
வானொலி வீச்சைவிட
காணொளி வீச்சால்தான்
அண்டங்கள் இங்கே
அருகாமை ஆனது.....
காரணம் கண்கள்..
கண்கள் வெறும் கண்களல்ல
அது...
புறத்தை அகத்தில் வரையும் தூரிகைகள்
அகத்தை புறத்தில் காட்டும் கணிப்பொறிகள்
இங்கே....
இமைகள் இயங்க மறுத்தால்
இதயம் இசைக்க மறந்ததாய் அர்த்தம்..
இமைகள் உறங்க மறுத்தால்
இதயம் எங்கோ பறந்ததாய் அர்த்தம்...
ஒன்றைப் புரிந்து கொள்ளுங்கள்?
கண்களைத் திறந்தே
கனவு காண முடியும்
சில ஆசிரியர்கள்
பாடம் எடுத்தால்...
கண்களை மூடியே
விழிக்கவும் முடியும்
சில குருக்கள்
தீட்சை கொடுத்தால்...
எனில்...
கண்கள் திறக்கட்டும்....
கவிதை தீட்சை கொடுக்கட்டும்!
செ. இராசா
ஓவியம் : Aslam Kadu
No comments:
Post a Comment