#மலரும்_நினைவுகள்
#தொலைபேசி
அந்த
வருடம் 1990 என்று நினைக்கிறேன். ஆம்....எங்கள் வீட்டிற்கு தொலைப்பேசி
வந்த வருடம் அதுவாகத்தான் இருக்கும் என்று நினைக்கிறேன். நாங்கள் வசித்தது
சிவகங்கையில் இருந்து 17 கிமீ தள்ளி உள்ள அம்மன் பட்டி என்கிற கிராமம்.
எங்கள் ஐயா பல வருடங்களாக வெளிநாடுகளிலேயே வேலை பார்த்ததால், எம் தந்தையார்
தன்னை நகர வாசியாகவே உணர்ந்து, எந்தப் புதிய கருவிகள் வந்தாலும் உடனேயே
வாங்கி வந்துவிடுவார்கள்.
அவரால்தான் வானொலி, தொலைக்காட்சி, டேப்ரெக்கார்டர், டெக், டிஷ்ஆன்டெனா.., இப்படி எல்லாம் எங்களுக்குக் கிடைத்தது.
நன்றாக
ஞாபகம் இருக்கிறது....அது MGR இறந்த நாள். அன்றுதான் எங்கள் வீட்டிற்கு
சாலிடர் கருப்பு வெள்ளை தொலைக்காட்சி பெட்டி வந்தது. அதன்பிறகு சரியாக
சொல்லி வைத்ததுபோல் இராஜீவ்காந்தி இறந்த வருடம் BPL வண்ணத் தொலைக்காட்சி
வந்தது. ஆனால் அதற்கு முன்பாகவே இந்தத் தொலைப்பேசி வந்துவிட்டது. வெறும்
இரண்டே இலக்கத்தில் வந்த தொலைபேசியின் எண்கள் 43 மட்டுமே. விரலை உள்ளே
விட்டு சுற்ற வேண்டும். அந்த நாளில் வீட்டிற்கு வந்தப் புதிய தொலைப்பேசியை
அனைவரும் வந்து பார்த்து சென்றது மகிழ்வாக மட்டுமல்ல பெருமையாகவும்
இருந்தது. ஆமாம்...அதுவரை சினிமாவில் மட்டுமே பார்த்த ஒரு கருவி, இப்போது
நேரடியாக வருகிறதென்றால் சும்மாவா...?!.
எங்கள் அப்பா அதற்கொரு
பூட்டொன்று வைத்திருப்பார். அவர் மட்டுமே சுற்றிவிட்டுப் பேசுவார். எங்கள்
சித்தப்பா வீட்டிலும் (எண் 45) மதகுபட்டி கடையிலும் (எண்: 54) இராஜா
டாக்டர்......
என்று இப்படி எல்லாமே இரண்டு இலக்கங்கள் தான்.
வெளியூருக்குப் பேசுவதாக இருந்தால் பாகனேரிக்கு அழைத்து, அவர்கள்
காரைக்குடிக்கு இணைத்து பிறகு பேசவேண்டிய இடத்திற்குப் பேசுவோம். இதை டிரங்
கால் புக்கிங் என்று சொல்வார்கள். மழை, இடி, மின்னல், காற்று...என்றால்
தொலைபேசி கம்பிகள் அறுந்துபோகும். பிறகு அதைச் சரி செய்யும் வரையில்
தொலைபேசி வேலை செய்யாது. அப்படி உயிர்பெற்றால்....அதை அனைவரும் ஏதோ பெரிய
விடயமாகப் பேசுவார்கள்.
யோசித்துப்பாருங்கள்.....காலம் மாற மாற
அடுத்து செல்லுலார் பேசி என்று செங்கல்போல் வந்தது. அதுவும் நடிகர்கள் வைத்திருப்பதாக பத்திரிகையில்தான் படித்தோம். பிறகு நோக்கியா, மோட்டோரோலா, சோனி எரிக்சன்.....என்று பேச மட்டுமே வந்த கைப்பேசிகள் சாம்சங், ஆப்பிள், ஒன்ப்ளஸ் என்று ....அனைத்துக் கருவிகளையும் உள்ளடக்கிய அற்புத சாதனமாக இன்று உருமாறி உலகமே சுருங்கிவிட்டது. தகவல் தொழில்நுட்ப வளர்ச்சியால் அனைத்து துறைகளிலும் வளர்ச்சி வந்துவிட்டது. அனைவரும் அருகருகே வந்துவிட்டோம். ஆனால் அருகாமையில் உள்ளவர்கள்தான்....... தூரரரரரரமாகிக்கொண்டே போகிறோம்.
செ. இராசா
(இது சுயதம்பட்டப் பதிவு அல்ல..... பாதுகாப்பு மற்றும் பரிமாற்றப் பதிவே....
No comments:
Post a Comment