#நல்லதைப்_பாராட்டு
#வள்ளுவர்_திங்கள்_170
#இராவணன்
இராவணன் பேச்சை இலக்குவணன் கேட்க
இராமன் பணித்தானே ஏன்?!
(1)
#கும்பகர்ணன்
உண்ட உணவிற்காய் ஓடி ஒளியாத
கும்பகர்ணன் நற்குணக் குன்று!
(2)
#வாலி
தன்மேலே எய்ததுபோல் தம்பிமேல் எய்யாதீர்
என்றதே வாலியின் ஈவு
(3)
#துரியோதணன்
கொடையாளி கர்ணன் கொடைதந்த போதில்
தடைபோடா வள்ளல்யார் சொல்?
(4)
#விகர்ணன்
விகர்ணன் விடுத்த வினாக்கணை ஒன்றே
தகமைக்குச் சொல்கின்ற சான்று
(5)
#பாரதப்போர்
பாரதப் போரன்று பார்த்தனிடம் போதித்த
காரண காரியத்தைக் காண்
(6)
#யிங்_யாங்
இருமையால் இவ்வுலகம் என்கின்ற உண்மை
இருப்பினை ஆராய்வாய் இங்கு
(7)
#அத்வைதம்
பள்ளம் இருந்தாலே பக்கத்தில் மேடுண்டு
பள்ளமின்றி மேடுண்டா பார்
(
#மெய்யறிவு_பகுத்தறிவு
நாத்திகக் கண்கொண்டு நன்றாக ஆராய்ந்தால்
ஆத்திகம் காணும் அறிவு
(9)
#நல்லதைப்_பாராட்டு
நல்லதைப் பாராட்டும் நற்குணம் போய்விட்டால்
எல்லோரும் பொல்லாரே இங்கு
(10)
செ. இராசா
No comments:
Post a Comment