20/08/2021

ஒரு பாகிஸ்தானிய நண்பரை சந்தித்தேன்

 நேற்றைய தினம் என் அலுவலகத்தில் மின்தூக்கியில் (LIFT) போகின்ற அந்த சிறிய நேரத்தில் ஒரு #பாகிஸ்தானிய நண்பரை சந்தித்தேன். அவர் எனக்குக் கிட்டத்தட்ட 10 வருடங்களுக்கு மேலான பழக்கம் உடையவர். ஆரம்பகாலங்களில் பாகிஸ்தானியர் என்றாலே ஒரு பிம்பம் அனைத்து இந்தியர்களுக்குமே இருக்கும். ஆனால் அவர்களோடுப் பழகினால்தான் தெரியும் அவர்களில் பெரும்பாலானோர் நல்ல மனம் படைத்தவர்கள் என்று.

என்னைப் பொறுத்தவரை ஒரு தமிழ் நிறுவனத்தில் அல்லது இந்திய நிறுவனங்களில் வேலை செய்வதுதான் கடினம் என்பேன். ஆம்....பல்வேறுபட்ட அரசியல் பிளவுகள், நேரச்சுரண்டல்கள், அதீத மரியாதை எதிர்பார்ப்புகள், நம்மவர்களை நம்மவரே மட்டம் தட்டும் போக்குகள்.....இப்படிப் பல காரணங்கள் இருக்கும். ஆனால் இவையெல்லாம் பெரும்பாலும் மற்ற மேற்குப்பக்க நாட்டினர்களிடம் இல்லை அல்லது குறைவு என்றே சொல்லலாம். இதையெல்லாம் இந்திய, பாகிஸ்தானிய, ஐரோப்பிய நிறுவனங்களில் வேலைப்பார்த்தவன் என்கிற முறையிலேயே சொல்கிறேன். அவ்வளவே....சரி நான் எதையோ சொல்லவந்து எங்கேயோ போய்விட்டேன். இப்போது மீண்டும் அந்த பாகிஸ்தானிய நண்பரிடம் வருவோம். அவரிடம் பேசியதை உரையாடலாகவே தமிழ்ப்படுத்தித் தருகிறேன்;.

#நான்:
ஜி... #ஆப்கானிஸ்தானில் நடந்த ஆட்சி மாற்றத்தை அங்குள்ள பொதுமக்கள் எப்படிப் பார்க்கிறார்கள். ஊடகங்கள் சொல்வதுபோல் அங்கு நிலைமை மோசமாக உள்ளதா?

#நண்பர்:
அதெல்லாம் ஒன்னுமில்லைஜி. மக்களின் ஆதரவு இல்லாமல் எந்தவொரு இயக்கமும் இவ்வளவு எளிதாக ஆட்சியைக் கைப்பற்ற முடியுமா? நீங்களே சொல்லுங்கள்.
கண்டிப்பாக....சில கட்டுப்பாடுகள் இருக்கத்தான் செய்யும். அது... வளைகுடா நாடுகளில் ஒவ்வொரு நாட்டிலும் உள்ளதுபோல் சிலபல தளர்வுகளோடு இருக்கும். ஆனால், கண்டிப்பாக முன்பு போல் மிகத் தீவிரமாக இருக்காது ஜி.

#நான்:
எனில் ஏன் மக்களில் பலர் அகதிகளாக வெளியேறுகிறார்கள்.

#நண்பர்:
எல்லா நாடுகளிலும் ஆட்சி மாற்றத்தை விரும்பாதவர்கள் இருப்பார்கள்தானே?!
ஆனால் கண்டிப்பாக ஊடகங்கள் சொல்வதுபோல் அவர்கள் அப்படிப்பட்டவர்கள் அல்ல ஜி.

(மின்தூக்கி திறந்து விட்டது...நாங்கள் ஒருவொருக்கொருவர் OK TK சொல்லிக்கொண்டு விடைபெற்றோம்)

உண்மைதானே...எந்த ஊடகம் உண்மையைச் சொல்கிறது சொல்லுங்கள். வலியவன் வகுத்ததே நீதியான காலத்தில் ஊடகங்கள் எல்லாம் உண்மையா சொல்லும்?

பொறுத்திருந்து பார்ப்போம்....

✍️செ. இராசா

No comments: