12/05/2021

குறளுரையாடல்----------நானும் மருத்துவரும்-------------கரு: நற்படைப்பு


 

#குறள்_வெண்பாக்கள்_அந்தாதி
#12.05.2021

#ஐயா_1
பலசொல்ல..பாநலம் பார்க்க பொருளின்
இலக்கணம் பாவின் இலக்கு

#நான்_2
இலக்கை நினைந்தே இயங்கிடும் போதில்
இலகுவாய்க் கிட்டும் இலக்கு

#ஐயா_3
இலக்கின்றிச் சொல்லும் இனிய கவிதை
இலக்கணம் பெற்றாலும் வீண்.

#நான்_4
வீணாய்க் கதைவிட்டு வெட்டியாய் ஏற்றாமல்
தேனாய்ப் படைத்தால் சிறப்பு

#ஐயா_5
சிறப்புடன் யாத்திட சிந்தித்(து) எழுதல்
திறமுடன் யாப்பின் திறப்பு.

#நான்_6
திறந்திட்ட கண்களில் தீயே வரினும்
மறத்துடன் நிற்கும் அறம்

#ஐயா_7
அறமற்ற பாக்கள் அழகாகத் தோன்றல்
சிறப்பில்லை என்பது சீர்.

#நான்_8
சீர்-களை ஆய்ந்த(றி)ரிந்து சீர்களை சீர்ப்படுத்த
நேர்த்தியாய்த் தோன்றும் கவி

#ஐயா_9
கவிஞன்ஓர் சிற்பி கவிதைஓர் சிற்பம்
கவியுளி ஆணியாம் காண்.

#நான்_10
காண்கின்ற காட்சியையும் காணாத காட்சியையும்
காண்பிக்கச் செய்வான் கவி

#ஐயா_11
கவியும்நம் தாயும் கருவை
வளர்த்து
புவியை மலர்த்தும் பூ.

#நான்_12
பூவாசம் வந்ததிசை போகின்ற வண்டைப்போல்
நூல்வாசம் தேடிடுவோம் வா

#ஐயா_13
வாவென்று சொன்னால் வரும்ஒளிப்பா போய்விடுமோ
போவென்று சொன்னால் ஒளி

#நான்_14
ஒளிமட்டும் உள்ளே ஒளிர்ந்திடும் என்றால்
வெளியெங்கும் தோன்றும் இறை

#ஐயா_15
இறையை விளக்கும் இனியவை யாவும்
மறையாம் கவிதையின் மாண்பு.

#நான்_16
மாண்புடன் வாழ்ந்து மரித்தவர் யாருமே
மாண்டவர் ஆகார் உணர்

#ஐயா_17
உணர்ந்து வடிக்கும் உயிரோட்டப் பாக்கள்
கணமும் நினைவிழெழும் காண்.

#நான்_18
காண்கின்ற ஒன்றோடு கற்பனைப் பாவூற்றி
தேன்போல் தருவான் கவி

#ஐயா_19
கவிதை எனுமோர் கருத்தில் உளத்தைக்
குவித்தாக்கல் பாவெனக் கூறு.

#நான்_20
கூறுவதைக் கேட்போர்க் குறைவாய் இருந்தாலும்
கூறுஞ்சொல் செய்யும் பல

✍️நானும்_ஐயாவும்

No comments: