#2001_2003
#சென்னை_இறுதிப்பகுதி
சென்னையில்
முதன் முதலாக வேலைக்கு வந்த புதிதில் நான் எங்கள் உறவினர் வீட்டில்
இருந்துதான் போய்வந்தேன். சுரேந்தர் நகரில் இருந்து சைக்கிளில்போய்
செந்தாமஸ் மவுண்ட் நிறுத்தத்தில் போட்டுவிட்டு இரயிலில் கிண்டி அல்லது
நுங்கம்பாக்கம் சென்றுவிட்டு அங்கிருந்து ஷேர் ஆட்டோ அல்லது பேருந்தில்
ஏறிஇறங்கி நடந்தே சென்று வேலை பார்த்துவிட்டு மீண்டு(ம்) வரும்
நிகழ்விருக்கிறதே... அப்பப்பா....போதும் போதும் என்றாகி விடும். இப்படிப்
போகும் வாழ்வில் ஒருநாள் ஞாயிறு விடுமுறை என்பது மட்டுமே நமக்கான நாள்.
அன்று பெரும்பாலும் அனைவருக்கும் ஓய்வெடுக்கவே உடலும் மனமும் ஏங்கும்.
ஆனால் அவற்றைத் தகர்த்தெறிந்து நான் மயிலாப்பூர் இராமகிருஷ்ண மடம்,
திருவல்லிக்கேணி விவேகானந்தர் இல்லம் என்றோடில்லாமல் பொறியியல் சம்பந்தமான
இலவச கருத்தரங்குகள் என்றெல்லாம் சுற்றிக்கொண்டே இருப்பேன்.
ஒரு
பத்து மாதங்களுக்குப் பிறகு தனியாக அறையெடுத்துத் தங்க விரும்பினேன்.
காரணம் என்னைத் தேடி நண்பர்கள் வர ஆரம்பித்தார்கள்...இல்லை இல்லை அனைவரும்
வேலைதேடி சென்னைக்குப் படையெடுத்தார்கள். அவர்கள் அனைவருக்கும் உதவி
செய்யும் பொருட்டு அறையெடுக்க நினைத்து என் பட்ஜெட்டில் இரயில் நிலைய
ஓரத்திலேயே தேடினேன். கடைசியாக பழவந்தாங்கலில் ஒரு கர்நாடகக் காரர்
கட்டியிருந்த மேன்சன் ஒன்றில் 1000/- ரூபாய்க்கு மூன்றாவது மாடியில் ஒரு
பத்துக்குப் பத்து அறை கிடைத்தது. அவர் போட்ட விதிமுறைகள் அவர் சார்ந்த
மாநிலத்தை உறுதிப்படுத்தியது. ஆம்... தண்ணீர் பிர்ச்சினைதான். அட...
நீங்கள் நினைப்பது போல் குடிநீர் பிர்ச்சினையல்ல. அது நாம் வெளியே
குழாயிலேயோ அல்லது காசுகொடுத்தோதான் வாங்க வேண்டும். இது குளிக்கும்
கழிக்கும் நீர் பிரச்சினை. அதாவது குளியலறை/கழிப்பறை இருப்பது மூன்றாம்
மாடியில் தண்ணீர் இருப்பதோ தரைதளத்தில்.. ஒவ்வொரு வாளிக்கும் இறங்கி
வரவேண்டும். இவ்வளவுக்கும் மேலே நீர்த்தொட்டி மற்றும் மோட்டாரெல்லாம்
உண்டு. ஆனால் அதைப்போட்டால் நிறைய தண்ணீர் செலவாகிறதாம்... அடப்பாவிங்களா?
என்று சொல்லத் தோன்றுகிறதா?!! என்னைப்போலவே என் அறைக்குப் பின்னர் வந்த
என் உயிர் நண்பன் மாயவரம் சுபாஷ், என் நண்பனின் தம்பி ஸ்ரீமுஷ்ணம் ஜான்,
அப்புறம் அவன் நண்பன், அத்தோடு என் தம்பி இரமேஷ் என்று அனைவரும்
கஷ்டப்பட்டோம். அதற்கெல்லாம் நாங்கள் எப்படி தீர்வு கண்டோம் தெரியுமா?!
ஆண்கள்
அனைவரும் கீழேயே குளிக்க ஆரம்பித்தோம். அவர்கள் பதறிவிட்டார்கள். காரணம்
அவர் வீட்டில் இரண்டு பெண் பிள்ளைகள். உடனே தண்ணீரை மேல்நிலைத் தொட்டிக்கு
ஏற்றிவிட்டார். அன்று எங்களால் பலரும் பயனடைந்தனர்.
நான் ஒருவன் தான்
அன்றைய கால கட்டத்தில் கொஞ்சம் நல்ல சம்பளத்தில் வேலை பார்த்தேன்.
மற்றவர்கள் வேலை தேடினார்கள் அல்லது ஏதோ சில வேலை பார்த்தார்கள். எனில் என்
நல்ல சம்பளம் எவ்வளவு தெரியுமா? வெறும் 2500/- ரூபாய்தான். அதில் 1000/-ரூ
வாடகை, போக்குவரத்து 750/-ஆகும். மீதம் 750/ல் வீட்டிற்கு அம்மா
அப்பாவிற்கும் எப்படியாவது 300/+200/- என்று அனுப்பி விடுவேன். காரணம்
அனுப்பும் எண்ணம் எப்போதும் இருக்க வேண்டும் என்பதால். ஆக..சாப்பிடப் பணம்
பத்தவே பத்தாது. ஒரு வயிறென்றால் பரவாயில்லை....பல வயிறுகள் போராடுகிறதே.
மேலும் நான் யாரிடமும் கடன் வாங்கக்கூடாதென்றக் கொள்கையுடையவன். பிறகு
எப்படி சமாளித்தோம் தெரியுமா?!
அங்கே நிறைய ஒப்பந்ததாரர்கள்
பெயிண்டிங் இன்டீரியர் என்று வேலை செய்வார்கள். கோடி கோடியாய் சம்பாதித்து
நல்ல டிப்டாப்பாய் இருப்பார்கள். ஆனால் Bill Quantity எடுக்கத் தெரியாது.
எனக்கு அவ்வப்போது ஞாயிற்றுக்கிழமைகளில் பகுதிநேர வேலையாக அழைப்பார்கள்.
அதில் ரூ 500/-1000/-வரைக்கிடைக்கும். ஒரு வரைபடம் போட்டுக்கொடுத்தால் ரூ
500/- கிடைக்கும். நான் ஆர்க்கிடெக்ட் பொறியாளர் என்பதால் எனக்குப பல
வழிகளிலும் பணம் வர வழி இருந்தும் நேர்மை தவறாது நின்ற காரணத்தால்
இப்படித்தான் அங்குமிங்கும் வேலை பார்த்தேன். இருப்பினும் பணம் பத்தவில்லை.
வீட்டில்
மின்சாரக் கட்டணம் இல்லை என்பதால் ஒரு ரைஸ் குக்கரில் சோறு பொங்குவோம்.
என் தம்பி இரவு கடை மூடும் நேரத்திற்குப்போய் சிலபல உடைந்த தக்காளிகளையும்
காய்கறிகளையும் குறைந்த விலையில் வாங்கி வருவான். பின்னர் அதே ரைஸ் குக்கர்
குழம்பு வைக்கும் சட்டியாக உருவெடுக்கும். அப்படி செய்த உணவு பல
சமயங்களில் வெந்தும் வேகமால் இருந்தாலும் மேன்சன் மொட்டைமாடியில்
நிலாச்சோறு சாப்பிட்டபோது கிட்டிய அந்த உணவின் சுவை இருக்கிறதே......அட அட
அடா...
இன்னும் ருசிக்கிறது.
நன்றி
செ.இராசா
12/05/2021
அனுபவப் பதிவு 20-----------கஷ்ட காலம்
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment