எடப்பாடியார்
பற்றிய ஒரு வாழ்த்துப்பதிவு போட்டவுடன் தம்பி ஒருவர் உடனே அழைத்துத் தன்
மகிழ்வைத் தெரிவித்தார். மேலும் சமீப காலங்களில் அவருக்காக நான் பதிவிடும்
ஓர் நல்ல பதிவென்றும் கூறினார். கண்டிப்பாக அவரைப்போலவே பலரும் இதேபோல்
எண்ணியிருக்கக்கூடும். அதற்கான காரணம் நான் சமீபத்தில் முதல்வர் பற்றி
பதிவேற்றிய ஒரு வாழ்த்துப்பதிவாக இருக்கலாம். இங்கே என்னைப்பற்றிய ஒரு சுய
விளக்கத்தோடு என் அக விருப்பத்தையும் தெரிவிக்க ஆசைப்படுகிறேன்.
நம்ம
ஊரைப் பொருத்தவரை பொதுவாக ஒருவரின் கட்சி நிலைப்பாடு என்பது
ஆரம்பகாலங்களில் அவர்களின் குடும்பத்தார்கள் விரும்பும் கட்சிசார்ந்தே
இருக்கும். பிறகு சிலர் தன்னை மாற்றிக் கொள்கிறார்கள், பலர் அப்படியே தன்
குடும்பத்தார் சார்ந்தே இருக்கிறார்கள். அதற்கு நானும் விதிவிலக்கல்ல. என்
தந்தையார் தீவிர அதிமுக விசுவாசி மற்றும் கட்சிப் பொறுப்பிலும் இருப்பவர்.
கடந்த மூன்றுமுறையாக MLA சீட்டிற்கும் பணம்கட்டியவர். இருப்பினும் நான்
சற்றே நடுநிலையோடு இருப்பதற்கான காரணம் இயல்பிலேயே குணம்நாடி குற்றம்நாடி
அவற்றுள் மிகைநாடச் சொன்ன வள்ளுவரின்மேல் கொண்ட பற்றே என்று
சொல்லலாம்........நிற்க.
இங்கே..நம் தமிழ்நாட்டு அரசியலை இனி
கலைஞர்
மற்றும் அம்மா காலங்களுக்கு முன் பின் என்று பிரிக்கலாம் என்பதே அடியேனின்
கணிப்பு. அக்காலத்தைச் சரியாகப் பிரிக்கும் அளவுகோல் காரணிகளாக தற்போதைய
முதல்வர் ஸ்டாலின் அவர்களும் எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடியாரும்
இருப்பார்கள் என்றே நினைக்கின்றேன்.
க-ஜெ காலத்திற்கு முன் இருந்த
அரசியலில் அவர்களுக்குள் இருந்த காழ்ப்புணர்ச்சி மிகப்பெரிய பகையாகி
எதிர்க்கட்சிகள் எதிரிக்கட்சிகளாக பார்க்கப்பட்டதன் காரணமெல்லாம் அனைவரும்
அறிந்ததே. எம்ஜிஆர் மற்றும் கலைஞர் நட்பின் விரிசலானது ஜெ தலையெடுத்த பிறகு
சட்டசபையில் ஏற்பட்ட சில பல துரதிர்ஷ்டவசமான நிகழ்வுகளால் தனிப்பட்ட கோபம்
வஞ்சமாகி அதுவே பலி வாங்கலாகி மீண்டும் பலிக்குப் பலியாகி இறுதிவரை
கீரியும் பாம்புமாய் இரு கட்சித்தலைவர்களும் இருந்தமையால் அது சமூகத்திலும்
எதிரொலித்து மக்களுக்குள்ளும் எதிர்மறை உணர்வுகளாய்மாறி எங்கிலும்
எதிரொலித்ததைக் கண்டோம்.
அதையெல்லாம் நீக்கும் விதமாக
காலமாற்றத்தில் எப்படியோ எடப்பாடியார் ஆட்சிக்கு வந்தார் அல்லது
வரவழைக்கப்பட்டார் (அந்த சர்ச்சை அனைவரும் அறிந்ததே) அவர் எப்படியோ
முதல்வராக வந்தாலும் அவருக்கு எதிராக இருந்த OPS ஐ சமாளித்து கட்சிக்குள்
சேர்த்து, தினகரனைக் கைப்பற்றவிடாமல் கட்சியைப் பாதுகாத்து,
எதிர்க்கட்சியின் தாக்குதல்களை எதிர்கொண்டு, எப்போது வேண்டுமானாலும் போர்க்
கொடி தூக்கக் காத்துக்கொண்டிருந்த சில பல உறுப்பினர்களை சமாளித்து, மத்திய
அரசாங்கத்தின் அழுத்தத்தை வேறு வழி இல்லாமல் ஏற்க வேண்டிய கட்டாயத்திற்கு
உட்படுத்தப்பட்டு, அதனால் ஏற்பட்ட பழிச்சொல்லையும் தாங்கித்
தாக்குப்பிடித்து நான்கு வருடங்கள் ஆட்சியை திறம்பட நடத்தித் தான் யார்
என்று நிரூபித்த எடப்பாடியாரைக் கண்டிப்பாக பாராட்டியே தீர வேண்டும்.
அடுத்து
நம் புதிய முதல்வர் முக ஸ்டாலின் அவர்களின் திறமையை பலரும் பல விதமாகப்
பேசினர். ஆனால் அவர் முதல்வராக பதவியேற்றபின் எடுத்த ஆரம்ப கால
நடவடிக்கைகளே அவர் யாரென்று காட்டியிருக்கும். மிக முக்கியமாக அவரின்
பண்புநலன் தமிழக அரசியலில் கட்டாயம் ஒரு மாற்றத்தைக் கொண்டு வருமென்றே
நினைக்கின்றேன்.
தன் அப்பாவைப்போல் அடுக்குத் தொடரில் பேசத்தெரியாது
என்பது என்னவோ உண்மைதான். ஆனால் அதெல்லாம் இனி தேவையே இல்லை. நல்ல
நிர்வாகமும் பண்பும் இருப்பதால் அவர் காலத்தையே மாற்றும் சக்தியாக
இருப்பார் என்றே நினைக்கின்றேன். அதற்குத் துணையாக கண்டிப்பாக
எடப்பாடியாரும் அரசியல் ரீதியாக எதிர்ப்பதை எதிர்த்து நல்லதை ஆதரித்து
பண்புநலன் பேணுவதில் அவரும் துணையிருப்பார் என்றே நம்பலாம். இப்படிப்பட்ட
நல்ல ஆரோக்கியமான அரசியல் பண்பு தொடருமானால் நம் தமிழ்ச் சமூகத்திலும்
மாற்றம் வருமென்பது வெறும் நம்பிக்கையல்ல... அது பகுத்தறிவு காட்டும்
மெய்ஞானக் கணிப்பே...
வாழ்க வையகம்
வாழ்க வளமுடன்
செ.இராசா
10/05/2021
அரசியல் மாற்றம்-----------பண்புள்ள அரசியல்
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment