11/05/2021

மூன்றாம் ஆப்பிளும் அயோக்கியத்தனமும்


 
#ஆப்பிள்_அனுபவம்

இந்த உலகில் மூன்று ஆப்பிள்கள் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததென்று சொல்லுவார்கள். முதல் ஆப்பிள் ஏவாளின் தூண்டுதலில் ஆதம் பறித்த ஆப்பிள், இரண்டாவது ஆப்பிள் நியூட்டனின் தலையில் விழுந்த ஆப்பிள். மூன்றாவது ஆப்பிள் ஸ்டீவ் ஜாப்ஸ் கண்டறிந்த ஆப்பிள். இப்படியெல்லாம் சொல்லி இந்த மூன்றாவது ஆப்பிளை நம் தலையில் கட்ட முயற்சிக்கிறார்கள் இந்த விற்பன்னர்கள்.பொதுவாக பொருள்களை விற்பதில் அமெரிக்கர்களை யாரும் விஞ்சமுடியாது என்பதை அனைவரும் அறிவோம்.

மெக்டொனால்ட் துரித உணவகத்தில் குழந்தைகளுக்கு ஐஸ் க்ரீமை மலிவு விலையில் கொடுத்து தன் பிராண்டை சிறு வயதிலேயே மூளைக்குள் செலுத்தும் வியாபர யுக்தியோடு களம் இறங்கியவர்களே அமெரிக்கர்கள். அவர்களைப்போலவே ஆனால் வேறு விதமாக இந்த ஆப்பிள் நிறுவனமும் சந்தையில் தன் பொருளை ஒரு அந்தஸ்து அடையாளமாக்கி (status symbol) வைத்தால் அதொற்கொரு கூட்டம் கண்டிப்பாக வருவார்கள் என்று கணித்தார்கள்.இவ்வுலகத்தில் பணமுள்ளவர்கள் வாங்குவதற்கென்றே ரோல்ஸ் ராய்ஸ், பெர்ராரி, லம்போர்கினி போன்ற மகிழுந்துகள் போல் ஆப்பிள் தயாரிப்புகளையும் ஆக்கிவிடும் முனைப்பிலேயே இறங்கினார்கள். ஆனால் அதை அடைந்துவிட்டார்களா என்பதெல்லாம் பொருளாதார நிபுணர்கள் பேச வேண்டியது. இப்போது நாம் அதுபற்றி பேசப் போவதில்லை. இந்த ஆப்பிள் வழங்கும் கைப்பேசி பற்றி மட்டும் பேசப்போகிறோம். இது முழுக்க முழுக்க என் அனுபவம் சார்ந்தது மட்டுமே...மாற்றுக் கருத்திருந்தால் அதை எமக்குத் தெரியப்படுத்தலாம். இப்போது கட்டுரைக்குள் போவோம்.

நான் முதன் முதலில் வாங்கிய கைப்பேசி என்பது சாதாரண கருப்பு வெள்ளை நோக்கியா மாடல் தான். பின் வருமானமும் காலமும் மாற மாற என் கைபேசியின் வடிவமும் தயாரிப்பும் மாறிக்கொண்டே போனது. ஆயினும் என் கைபேசிக்கான பட்ஜெட் என்னவோ 800/- ரியாலைத் (16000 /- இன்றைய இந்திய மதிப்பு) தாண்டவில்லை. ஒரு கட்டத்தில் என் மனைவியாரே எனக்கு ஆப்பிள்-5 கைப்பேசி வாங்கிக்கொடுத்தார்.
ஒரே பெருமையாக இருந்தது. மிகவும் சிறிய கைப்பேசி என்பதாலும், புகைப்படங்கள் தெளிவாக இருந்ததாலும் ஆரம்பத்தில் பிடித்தது. பிறகு அடிக்கடி தகராறு செய்தமையால் சில நாட்களுக்குப்பிறகு ஆப்பிள்-7 கைப்பேசி வாங்கினேன். அதுவும் அப்படியே ஆரம்பத்தில் நன்றாக இருந்து அதுவும் தொந்தரவு தந்தது. ஆமாம் அது என்ன தொந்தரவு என்று தானே நினைக்கின்றீர்கள். சொல்கிறேன் கேளுங்கள்;

1. ஆப்பிள் கைபேசியில் மின்கலம் (charge) நிற்காது. எப்போதும் மின்னூட்டம் கொடுத்துக்கொண்டே இருக்க வேண்டும்.
2. மின்னோட்டம் தரும் கேபிள் (cable) அடிக்கடி பழுதாகிவிடும். ஆப்பிள் நிறுவன கேபிள் வாங்கி போட்டாலும் சில நாட்களில் பழுதாகிவிடும். இதற்குத் தனியாக நாம் ஒரு தொகை செலவிட்டுக்கொண்டே இருக்க வேண்டும்.
3. ஆப்பிள் கைப்பேசி ஹாங்கே (Hang) ஆகாதென்பார்கள். அது சுத்தப்பொய்.
4. கேமிரா மிகவும் அருமை என்பார்கள். அதையெல்லாம் தாண்டி எத்தனையோ கைப்பேசிகள் சந்தைக்கு வந்துவிட்டன.
5. ஆப்பிள் கைப்பேசி மிகவும் பாதுகாப்பு, யாராலும் தகவல்களை எடுக்க முடியாதென்பார்கள். நாமென்ன ஒசாமா வேலையா பார்க்கப்போகிறோம். மேலும் அது நமக்கேகூட ஆபத்தாகும் வாய்ப்பு நிறைய உண்டு. (என் முதல் கைப்பேசியின் பாஸ்வார்ட் மறந்து போய் திறக்க முடியாமேலே போய்விட்டது).
6. மேலும் ஆப்பிள் கைப்பேசியில் பாடல், கோப்பு என்று எதை ஏற்றுவதாய் இருந்தாலும் கணினியின் துணை இன்றி முடியாது.
7. பெருவாரியான மெமோரிகளை (Memory) செயலிகளே எடுத்துக்கொள்ளும்.
8. எடுத்த புகைப்படங்களை கேபிள் வழியாக கணினிக்கு மாற்ற எண்ணினால், மாற்றிக்கொண்டிருக்கும்போதே பல சமயங்களில் இணைப்பு (disconnect) விடுபடும்.
9. எல்லாவற்றிற்கும் பணம் பணம் என்று அழுக வேண்டும்.

இத்தனை இருந்தாலும் எனக்கெல்லாம் எதுவும் பிரச்சினை இல்லை ஆப்பிள் தான் சிறந்த கைப்பேசி என்று சொல்பவர்கள் இருப்பதாலும், எதையும் வெளிக்காட்டிக் கொள்ளாதவர்கள் இருப்பதாலும் ஆப்பிளை இன்னும் அதிசயமாக பார்ப்பவர்களும் இருக்கவே செய்கின்றார்கள் என்பதும் மறுக்க முடியாத உண்மையே.

இவன்,

செ. இராசா

No comments: