31/05/2021

வளைகுடா நாடுகள்



எனக்குத் தெரிந்த நண்பர் ஒருவரின் மகன் அமெரிக்காவில் பணி புரிகிறார். அவர் அங்கேயே சீனப்பெண்ணைக் காதல் திருமணம் புரிந்துகொண்டு இரு குழந்தைகளுக்குத் தந்தையாகவும் உள்ளார். இன்று நான் அவரின் பேரன்கள் என்ன மொழி பேசுவார்கள் என்று வினவினேன். அவர்களின் அம்மா சைனீஸ் மற்றும் ஆங்கிலம் பேசுவதாகவும் அப்பா தமிழில் பேசுவதாகவும் சொன்னார்கள். நண்பர் அவர்களும் தன் பேரன்களிடம் பேசும்போது தமிழில் பேசுவதாகவேக் கூறினார்கள். உண்மையில் மனதிற்கு மிகவும் மகிழ்வாக இருந்தது.

நம் தமிழகத்தில் சமீபகாலமாக ஆங்கிலம் பேசுவதைப் பெருமையாக நினைக்கின்ற போக்கால் தமிழும் தமிழ்வழிக்கல்வியும் படாதபாடு படுவதை அனைவரும் அறிவோம். இப்படியே போனால் தமிழ் தமிங்கலமாகி நம் அடையாளத்தை இழக்குமோ என்ற ஐயமும் ஏற்படவே செய்கிறது. எனினும் கால ஓட்டத்தில் தமிழ் தன்னை மீண்டும் புதுப்பித்துக் கொள்ளும் என்ற நம்பிக்கையையும் இதே காலம் உணர்த்தியுள்ளதால் நாம் மனதைக் தேற்றிக்கொள்ளலாம்.

நம் மொழி, இனம் மற்றும் கலாச்சாரம் என அனைத்து அடையாளங்களையும் தொலைத்துவிட்டு பணம் மட்டுமே குறிக்கோளாய் எண்ணி அதனை நோக்கியே ஓடுவதெல்லாம் ஒரு வாழ்க்கையா?!.. இந்தக்கேள்வி எழுந்ததால்தான் நான் ஆஸ்திரேலியா, கனடா போன்ற நாடுகளுக்கெல்லாம் போகின்ற முயற்சியை கடைசி நேரத்தில் கைவிட்டேன் என்றால் நம்புவீர்களா?!. நீங்கள் நம்பாவிட்டாலும் அதுவே உண்மை. அப்புறம் ஏன் வளைகுடா நாட்டில் பணிபுரிகிறீர்கள் என்று கேட்கலாம். தங்களின் கேள்விக்கான பதில் இதோ;

இன்று தமிழர்கள் உலகெல்லாம் பரவி இருந்தாலும் மற்ற நாடுகளில் எல்லாம் குடியுரிமை பெற்று அந்த ஊர் குடிமகனாக மாறிவிட முடியும். ஆனால் வளைகுடா நாடுகளில் எத்தனை வருடங்கள் ஆனாலும் அப்படி ஆகவே முடியாது. கண்டிப்பாக ஊர் திரும்பியே ஆக வேண்டும். முதலில் நாம் ஏன் வேலைக்குப் போகிறோம் சொல்லுங்கள்?! நம் சுற்றத்தார் முன் நல்ல படியாக வாழவும் நம் அத்தியாவசியத் தேவையைப் பெருக்கிப் பொருளாதாரத்தை உயர்த்தவும் தானே?! ஆனால் அனைத்தும் ஓரளவு கிடைத்தவுடன் அமெரிக்கா ஆஸ்திரேலியா போன்ற நாட்டில் வாழ்வோர் என்ன செய்கிறார்கள்?! அங்கேயே ஒரு வீடு வாங்கி தனக்கேற்ற பெண்ணை மணமுடித்து தன் சுற்றத்தையே மாற்றி (புது சுற்றத்தில்) அங்குள்ளோர் முன்னிலையில் நல்ல முறையில வாழவேண்டுமென்று மீண்டும் போராடத் துவங்கிவிடுகிறார்கள். இவர்கள் தாயகம் திரும்புவார்களா என்றால், எப்போதோ ஒரு முறை வந்து தலை காட்டிவிட்டுப் போவார்கள். பின் அவர்களின் தலைமுறை வாரிசுகள் கொஞ்சம் கொஞ்சமாக வருவதை நிறுத்திவிட்டு தன்னை இந்திய வம்சாவளியினர் என்றே பேரளவில் சொல்லிக் கொண்டு அவர்களும் அங்குள்ள சுற்றங்களுக்கிடையேயான புதிய போராட்டத்தை மீண்டும் மீண்டும் தொடர்ந்து நடத்திக் கொண்டிருப்பார்கள். ஒருவேளை அவர்களின் வாரிசுகள் மொழியையும் கலாச்சாரத்தையும் மறந்து விட்டால் தன் அடையாளம் மொத்தமும் நீங்கி அனாதைபோல்தான் ஆகிவிடுகிறார்கள்.

ஆனால், இதற்கெல்லாம் வாய்ப்பே இல்லாத வளைகுடா நாடுகளில், அந்த நாட்டுக் குடியுரிமை தராவிட்டாலும், மற்ற கலாச்சாரச் சீரழிவெல்லாம் இல்லாமல், எந்த வித வரிச்சுமைகளும் இல்லாமல், மண் சார்ந்த உணர்வுகளும் நீர்த்துப்போகாமல் தன்னை எப்போதும் தன் தாயகக் குடிமகனாகவே எண்ணி வாழும் ஓர் சூழல் உள்ளதால், வேலை முடிந்தவுடன் மீண்டும் வழக்கம்போல் தாயகக் குடிமகனாகவே திரும்ப முடிகிறதென்றால் வளைகுடா நாடுகளே வசிக்கச் சிறந்தவை என்று நாம் ஏன் சொல்லக்கூடாது?!

✍️செ. இராசா

No comments: