17/05/2021

உப்பு



இனிப்புச்சுவை
இன்சுவையே ஆயினும்
உவர்ப்புச் சுவை
உவப்பில்லையா?!

அறுசுவைகளும்
அவசியமே ஆயினும்; அதில்
உவர்ப்புச் சுவை
உன்னதமில்லையா?!

விதைத்தது முளைத்தால்தான்
அறுவடை நெல்லாகும்
இறைத்ததை தடுத்தால்தான்
இருப்பது உப்பாகும்

இங்கே
வெறும் உப்பு
உணவில்லைதான்;
ஆனால் உப்பின்றி உணவுண்டா?
உப்பு கூடினால் பாழ்தான் ஆனால்;
உப்பு கூடாமல் உணவுண்டா?!

உப்பில்லாப் பண்டம் குப்பையிலே-இது
உப்பை உணர்த்தும் உயர்மொழி

உப்பிட்டோரை உள்ளவும் நினை- இது
உணவிட்டோரைப் போற்றும் உளமொழி?

நான்
உங்கள் வீட்டு
உப்பைத் தின்றவனென்றால் -இங்கே
உப்பு என்பது உணவென்றாகிறது!

நீங்கள்
உப்பைத் தின்றவன்
தண்ணீர் குடிக்க வேண்டுமென்றால்-இங்கே
உப்பு என்பது தப்பு என்றாகிறது!

அவன்
உப்புக்குப் பிரயோஜனமில்லையென்றால்
ஒன்றுக்கும் இலாயக்கில்லை என்றாகிறது!

அவனுக்கு...
சோற்றில் உப்பைக் குறையென்றால்
ரோசம் அதிகமுள்ளதாய் அரத்தமாகிறது

இப்படி உப்பு
பல மொழிகளில்
பழ மொழியாய்ப் பவனி வருகிறது!

அதுமட்டுமா?!
உப்பு ஏழைகளின்
எளிய ஃபிரிட்ஜாய்
ஊறுகாய் ஜாடிக்குள்
உலாவருகிறது...

செத்த மீன் கருவாடாவதும்
இறந்த ஆடு உப்புக் கண்டமாவதும்
உப்பின் உபயமின்றி வேறென்ன?

ஒரு காலத்தில்
உப்பென்றால் உயர் பொருள்...
இன்னும்கூட
திருடுபோகா விலைப் பொருளென்றால்- அது
உப்பு மட்டுமே...
உப்பள உழைப்பாளிகள் அல்ல

உப்பின் குறியீடு NaCl ஆம்
இதில் உப்பள வியர்வைக்கு மட்டும்
குறியீடில்லைபோலும்
என்ன செய்ய?!
இன்னொரு தண்டி யாத்திரைக்குக்
காந்தி இல்லையே?!

✍️செ. இராசா

No comments: