31/05/2021

வளைகுடா நாடுகள்



எனக்குத் தெரிந்த நண்பர் ஒருவரின் மகன் அமெரிக்காவில் பணி புரிகிறார். அவர் அங்கேயே சீனப்பெண்ணைக் காதல் திருமணம் புரிந்துகொண்டு இரு குழந்தைகளுக்குத் தந்தையாகவும் உள்ளார். இன்று நான் அவரின் பேரன்கள் என்ன மொழி பேசுவார்கள் என்று வினவினேன். அவர்களின் அம்மா சைனீஸ் மற்றும் ஆங்கிலம் பேசுவதாகவும் அப்பா தமிழில் பேசுவதாகவும் சொன்னார்கள். நண்பர் அவர்களும் தன் பேரன்களிடம் பேசும்போது தமிழில் பேசுவதாகவேக் கூறினார்கள். உண்மையில் மனதிற்கு மிகவும் மகிழ்வாக இருந்தது.

நம் தமிழகத்தில் சமீபகாலமாக ஆங்கிலம் பேசுவதைப் பெருமையாக நினைக்கின்ற போக்கால் தமிழும் தமிழ்வழிக்கல்வியும் படாதபாடு படுவதை அனைவரும் அறிவோம். இப்படியே போனால் தமிழ் தமிங்கலமாகி நம் அடையாளத்தை இழக்குமோ என்ற ஐயமும் ஏற்படவே செய்கிறது. எனினும் கால ஓட்டத்தில் தமிழ் தன்னை மீண்டும் புதுப்பித்துக் கொள்ளும் என்ற நம்பிக்கையையும் இதே காலம் உணர்த்தியுள்ளதால் நாம் மனதைக் தேற்றிக்கொள்ளலாம்.

நம் மொழி, இனம் மற்றும் கலாச்சாரம் என அனைத்து அடையாளங்களையும் தொலைத்துவிட்டு பணம் மட்டுமே குறிக்கோளாய் எண்ணி அதனை நோக்கியே ஓடுவதெல்லாம் ஒரு வாழ்க்கையா?!.. இந்தக்கேள்வி எழுந்ததால்தான் நான் ஆஸ்திரேலியா, கனடா போன்ற நாடுகளுக்கெல்லாம் போகின்ற முயற்சியை கடைசி நேரத்தில் கைவிட்டேன் என்றால் நம்புவீர்களா?!. நீங்கள் நம்பாவிட்டாலும் அதுவே உண்மை. அப்புறம் ஏன் வளைகுடா நாட்டில் பணிபுரிகிறீர்கள் என்று கேட்கலாம். தங்களின் கேள்விக்கான பதில் இதோ;

இன்று தமிழர்கள் உலகெல்லாம் பரவி இருந்தாலும் மற்ற நாடுகளில் எல்லாம் குடியுரிமை பெற்று அந்த ஊர் குடிமகனாக மாறிவிட முடியும். ஆனால் வளைகுடா நாடுகளில் எத்தனை வருடங்கள் ஆனாலும் அப்படி ஆகவே முடியாது. கண்டிப்பாக ஊர் திரும்பியே ஆக வேண்டும். முதலில் நாம் ஏன் வேலைக்குப் போகிறோம் சொல்லுங்கள்?! நம் சுற்றத்தார் முன் நல்ல படியாக வாழவும் நம் அத்தியாவசியத் தேவையைப் பெருக்கிப் பொருளாதாரத்தை உயர்த்தவும் தானே?! ஆனால் அனைத்தும் ஓரளவு கிடைத்தவுடன் அமெரிக்கா ஆஸ்திரேலியா போன்ற நாட்டில் வாழ்வோர் என்ன செய்கிறார்கள்?! அங்கேயே ஒரு வீடு வாங்கி தனக்கேற்ற பெண்ணை மணமுடித்து தன் சுற்றத்தையே மாற்றி (புது சுற்றத்தில்) அங்குள்ளோர் முன்னிலையில் நல்ல முறையில வாழவேண்டுமென்று மீண்டும் போராடத் துவங்கிவிடுகிறார்கள். இவர்கள் தாயகம் திரும்புவார்களா என்றால், எப்போதோ ஒரு முறை வந்து தலை காட்டிவிட்டுப் போவார்கள். பின் அவர்களின் தலைமுறை வாரிசுகள் கொஞ்சம் கொஞ்சமாக வருவதை நிறுத்திவிட்டு தன்னை இந்திய வம்சாவளியினர் என்றே பேரளவில் சொல்லிக் கொண்டு அவர்களும் அங்குள்ள சுற்றங்களுக்கிடையேயான புதிய போராட்டத்தை மீண்டும் மீண்டும் தொடர்ந்து நடத்திக் கொண்டிருப்பார்கள். ஒருவேளை அவர்களின் வாரிசுகள் மொழியையும் கலாச்சாரத்தையும் மறந்து விட்டால் தன் அடையாளம் மொத்தமும் நீங்கி அனாதைபோல்தான் ஆகிவிடுகிறார்கள்.

ஆனால், இதற்கெல்லாம் வாய்ப்பே இல்லாத வளைகுடா நாடுகளில், அந்த நாட்டுக் குடியுரிமை தராவிட்டாலும், மற்ற கலாச்சாரச் சீரழிவெல்லாம் இல்லாமல், எந்த வித வரிச்சுமைகளும் இல்லாமல், மண் சார்ந்த உணர்வுகளும் நீர்த்துப்போகாமல் தன்னை எப்போதும் தன் தாயகக் குடிமகனாகவே எண்ணி வாழும் ஓர் சூழல் உள்ளதால், வேலை முடிந்தவுடன் மீண்டும் வழக்கம்போல் தாயகக் குடிமகனாகவே திரும்ப முடிகிறதென்றால் வளைகுடா நாடுகளே வசிக்கச் சிறந்தவை என்று நாம் ஏன் சொல்லக்கூடாது?!

✍️செ. இராசா

செல்வச் சிறப்பு----------இராசாவின் குறள்---------வள்ளுவர் திங்கள்-161

 


#செல்வச்_சிறப்பு
#இராசாவின்_குறள்
#வள்ளுவர்_திங்கள்_161

கையூட்டு* வாங்காமல் கண்ணியமாய்ச் சேர்த்தார்க்கேக்
கையூன்று** கோலாகும் காசு
(1)

(*லஞ்சம் **ஊன்றுகோல்)

வட்டிக்கு வாங்காமல் வையத்தில் வாழ்வோர்க்கேக்
கட்டிலில் நல்லுறக்கம் காண்
(2)

ஏமாற்றிச் சேர்க்கின்ற எக்காசும் நிற்காமல்
தாமாகப் போகும் தவிர்
(3)

கடன்தரும் அட்டையைக்* கையிலேப் பற்றார்
இடர்பெரு(று)ம் சிக்கலில்லார் இங்கு
(4)

*Credit card

சிந்தும் சிறுபருக்கைச் சிற்றுயிர்க்குப் பேருணவாம்
கொஞ்சமாய்க் கூடக் கொடு
(5)

செல்வோம் எனச்சொல்லும் செல்வத்தைச் சேர்ப்போரேச்
செல்லும்முன் நல்லறம் செய்
(6)

நிரந்தரம் இல்லா நிலையினை எண்ணி தரும்திறன் உள்ளதெனில் தா
(7)

தந்திடத் தந்திடத் தந்திட வேண்டியே
வந்திடும் தந்திட வா
(😎

வரவுக்கு மீறாமல் வாழ்கின்ற வாழ்வை
வரமென்று போற்றி மகிழ்
(9)

இருப்பதால் இல்லை இருப்போரின் செல்வம்
தருவதால் தானே சிறப்பு
(10)

✍️செ. இராசா

30/05/2021

மெட்டு: தென்பாண்டிச் சீமையிலே----------கத்தாரு தேசத்துலே


 

மெட்டு: #தென்பாண்டிச்_சீமையிலே

கத்தாரு தேசத்துலே
......தோகாவின் வீதியிலே
.......ஓடோடித் திரிபவனே
................ஏன் படைத்தாரோ?
...............ஏன் படைத்தாரோ?
................ஏன் படைத்தாரோ?
................ஏன் படைத்தாரோ?

உறவ நினைச்சே அழுகாதே
உலகம் திரும்பும் வருந்தாதே
கொடுமை ஒழியும் கலங்காதே
கொடுமை ஒழியும் கலங்காதே

--செ. இராசா

கொண்டக் கடலையோடு

 


கொண்டக் கடலையோடு கொண்டுவந்த பூரியைக்
கண்டதும் கவ்விடுமே கை

😊😊😊😅😅😅😅

✍️செ. இராசா

29/05/2021

மழைத் தூறும் நேரம்

 #மலையாள_மெட்டில்_ஒரு_காதல்_பாடல்

 

மழைத் தூறும் நேரம்
மனம் போடும் தாளம்
மதியோரம் எழும்கானம் பல கோடி...
கேளாயோ அன்பே...நம் காதல்ராகம்
கொஞ்சும் தமிழ்த்தேன் கவி நீயே

சில காலமாய் பனி மூட்டமாய்
சண்டைகள் ஏனோ?....... தெரியாதே
கடும் வெப்பமாய் சுடும் சொற்களாய்
கொட்டினால் ஐயோ.......முடியாதே
புதைஞ்சிருந்தாலும் வேர் மரந்தாங்கும்
ஒளிச்சுவச்சாலும் ஆழ் மனம் ஏங்கும்
காதலே....தூரம் போகாதே
#ஆரோமலே போதும் கொல்லாதே

✍️செ.இராசா

27/05/2021

பத்தோடு சேர்ந்து பதினொன்றாய்

  


பத்தோடு சேர்ந்து
...........பதினொன்றாய் ஆகிடவா
இத்தனையும் செய்கின்றேன்
...........இன்றுவரைச்- சத்தியமாய்
என்னென்ன செய்தாலும்
...........ஏறெடுத்தும் பாரார்முன்
என்னதான் செய்ய இனி?

✍️செ. இராசா

24/05/2021

கண்ணும் கண்ணும்---வள்ளுவர் திங்கள் 160


❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️

#வா_மூன்று
🌺🌺🌺🌺🌺
கண்ணோடு கண்கவ்வும் காதல் விளையாட்டை
என்னோடு நீஆட வா
(1)

இம்சை பொறுக்காமல் எம்இமைகள் பேசுவதை
உம்காதில் நீகேட்க வா
(2)

உன்நாட்டம் வந்ததுமே உள்ளூரப் பாய்கின்ற
மின்னோட்டம் நீபார்க்க வா
(3)

#பார்_மூன்று
🌺🌺🌺🌺🌺🌺
வியந்து வியந்தே விரிகின்ற தாலே
அயர்ந்த புருவத்தைப் பார்
(4)

காஞ்ச கருவாடாய்க் காய்கின்ற என்மீது
வாஞ்சை உணர்வோடு பார்
(5)

இதழின் சிவப்பை இமைகளில் நீக்கிப்
பதமாய்ப் பரிவோடு பார்
(6)

#நீ_மூன்று
🌺🌺🌺🌺🌺
விழியால் அடைகாக்கும் மீனினம் போலே
விழியால் அணைக்கின்றாய் நீ
(7)

ஒலியாய் மொழியா உலகின் மொழியாம்
விழியால் விதைக்கின்றாய் நீ
(8.)

இடம்வலம் போகும் இருவிழி கொண்டே
படக்கென்று பாய்கின்றாய் நீ
(9)

#சொல்_ஒன்று
🌺🌺🌺🌺🌺🌺🌺
புருவத்தை மேலேற்றி புன்முறுவல் பூக்கும்
ஒருகணம் போதாதா சொல்?
(10)

#வள்ளுவர்_திங்கள்_160