18/03/2021

அனுபவப் பதிவு-13------------கல்லூரி நுழைவுத்தேர்வு--------------கட்டுரை

 




அனைவருடைய வாழ்விலும் ஒன்றிலிருந்து மற்றொன்றை நோக்கிப் போகின்ற பருவங்கள் என்பது எப்போதும் சுவாரஸ்யமான ஒன்றே. அதுவும் குறிப்பாக பனிரெண்டாம் வகுப்பு முடித்தவுடன் எந்த படிப்பைத் தேர்ந்தெடுப்பது என்பதில் நம் எதிர்கால வாழ்க்கைக்கான சவாலும் அடங்கியுள்ளதால் அதுபற்றி சொல்லவே வேண்டாம். மிக மிக முக்கியமான தருணமாகவே அது அமைகிறது. ஆம்...எனக்கும் அப்படியே அமைந்தது.

நான் பனிரெண்டாம் வகுப்பு முடித்த அந்தத் தருணம்தான் தமிழ் நாட்டில் பொறியியல் படிப்புக்கான கவுன்சிலிங் சிஸ்டம் அறிமுகமானது (1997). ஆனால் அதில் அண்ணாமலைப் பல்கலைக் கழகம் சேர்ந்திருக்கவில்லை, அதற்கு தனி விண்ணப்பம் போட வேண்டும். அதுபோக மருத்துவம், பிசியோதெரபி, நர்சிங், சித்தா, வேளாண்மை....என்று அனைத்திற்கும் தனித்தனி படிவங்கள் போட வேண்டும். ஆங்கிலத்தில் இருக்கும் அனைத்து விண்ணப்பப் படிவங்களையும் பூர்த்தி செய்தல் என்பது என்னைப்போன்ற தமிழ்வழிக் கல்வி கிராமத்து மாணவர்களுக்கெல்லாம் அது மிகப்பெரிய சவாலே. ஆனால் எனக்கான அனைத்து படிவங்களையும் என் அப்பாவின் உயிர் நண்பரான நகரம்பட்டியைச் சேர்ந்த #சுந்தரமூர்த்தி_சித்தப்பா குடும்பத்தினர்தான் இரண்டு நாட்களாக பூர்த்தி செய்து கொடுத்தார்கள். (மனமார்ந்த நன்றி சித்தப்பா மற்றும் குடும்பத்தினர்)

இந்தப் பனிரெண்டாம் வகுப்பு முடிந்தவுடன்தான் எத்தனை போராட்டங்கள் எத்தனை மன அழுத்தங்கள்? எத்தனை கோச்சிங் வகுப்புகள்? எத்தனை நுழைவுத்தேர்வுகள்? எத்தனை கலந்துரையாடல்கள்? நம்மை ஒரு வழி செய்து விடுவார்கள். நானும் முதலில் சிவகங்கையில் உள்ள கோச்சிங் வகுப்பிற்குத்தான் சென்றேன். அங்கே என் பனிரெண்டாம் வகுப்பு வாத்தியார்களே இருந்ததால், அது சரிப்பட்டு வராதென்று மதுரையில் அமெரிக்கன் பள்ளியில் தல்லாகுளம் அருகே ஒரு மாதம் தெரிந்த மாமா வீட்டில் தங்கி இருந்து படித்தேன். சாதாரண ஸ்லிப்பர் செருப்புதான் போட்டுகொண்டு போன என்னை அந்த #மாமாதான் நல்ல செருப்பு வாங்கிக்கொடுத்து ஒரு மாதம் சாப்பாடு போட்டு இருக்க இடம் கொடுத்தார். அவருக்கும் என் மனமார்ந்த நன்றி.

அங்கிருந்த படியே அத்தனை நுழைவுத் தேர்வுகளையும் எழுதினேன். மதுரை தியாகராஜா கல்லூரியில் பொறியியலுக்கும், யாதவா கல்லாரியில் அண்ணாமலைப் பல்கலைக்கழக பொறியியல் மற்றும் மருத்துவத்திற்கும் எழுதினேன்.ஒரு வழியாக அனைத்து அழைப்புகளும் ஒவ்வொன்றாக வந்தது.

முதலில் பொறியியலுக்கான அழைப்பில் சென்னை சென்றோம். என் அப்பா சிவில் எடுக்கச்சொன்னார், ஆனால் நானும் என் மாமாவும் சம்பந்தமே இல்லாமல் வாணியம்பாடியில் உள்ள பிரியதர்சினி பொறியியல் கல்லூரியில் லெதர் டெக்னோலஜி என்ற பிரிவை எடுத்து வந்தோம். இவ்வளவிற்கும் ஊருக்கு அருகிலேயே முகமது சதக் கல்லூரியில் சிவில் இருந்தது. அக்கால கட்டங்களில் சிவில் என்றாலே சிவிலா என்று ஏளனமாகப் பார்ப்பார்கள். என் அப்பா சிவில் ஒப்பந்தக்காரர் என்பதால் நானும் அவர் வேலையைத் தொடரலாம் என்ற எண்ணத்தில் இருந்திருக்கிறார். நானோ மாற்றி எடுத்துவிட்டு வந்ததால் மிகவும் வேதனை அடைந்தாலும் அதை வெளியே காட்டிக்கொள்ளாமல், வாணியம்பாடி கல்லூரிக்கு அழைத்துச் சென்றார். அங்கே போனால் வெறும் செங்கல் கட்டிடமாக இன்னும் பூசாமலே ஒரு கட்டிடம் இருந்தது. அதைத்தான் கல்லூரி என்று சொன்னார்கள். மேலும் அந்த ஊரே எனக்கு அந்நிய தேசம் போல் இருந்தது. சொல்லவும் முடியாமல் மெல்லவும் முடியாமல் அங்கிருந்து கிளம்பி வீடுவந்து சேர்ந்தோம்.

அப்பா மிகவும் நொந்துபோய் ஒரு மாமாவிடம் சொல்லிக்கொண்டிருந்தார். இப்போது கூட மோசமில்லை, தான் சென்னை சென்று அண்ணாமலைச் செட்டியாரின் உதவியாளர் காலில் விழுந்து சிவில் வாங்கி வருவதாகவும் என் சம்மதம் தெரிவிக்கவும் சொன்னார். அப்போது அந்த மாமா " பார்ரா நீ வாழ்க்கையில் நிமிர உன் அப்பா குனிகிறாராம்" என்று சொன்னவுடன் என் கண்கள் குளமானத்தைச் சொல்லவும் வேண்டுமா?...

அப்பா சென்னை கிளம்பி அண்ணாமலைப் பல்கலைக்கழக உதவியாளரிடம்
பேசியுள்ளார். அவர்கள் பேரத்தை ஒன்றரை லட்சத்தில் ஆரம்பித்து ஐம்பதாயிரம் ரூபாயில் முடித்துள்ளார்கள். இயந்திரவியல், மின்சாரவியல், கணினி என்று எது வேண்டும் என்றார்கள், என் அப்பா சிவில் மட்டுமே என்று கூறி பணம் கட்டியுள்ளார்கள். இப்படிப் பொறியியலுக்குக் காத்துக்கொண்டிருந்தால் எதிர்பாராவிதமாக மருத்துவ நுழைவுத்தேர்வுக்கு அதே அண்ணாமலையில் சிதம்பரத்தில் இருந்து அழைப்பு வந்தது. முதல் நாள் MBBS (பொது மருத்துவம்) இரண்டாம் நாள் BDS (பல் மருத்துவம்) .அங்கே எல்லாமே பணம்தான் என்று அப்போது எங்களுக்குத் தெரியவில்லை.

நாங்கள் ஏதோ ஒரு தைரியத்தில் கௌன்சிலிங் போனோம். நான் போன தோரணையே அவர்களுக்கு உணர்த்தியிருக்கும் நான் எந்தமாதிரி பின்புலமென்று. நான் இரு கைகளையும் கூப்பி வணக்கம் ஐயா என்று கூறினேன். அவர்கள் ஒருவரை ஒருவர் பார்த்துக்கொண்டு என்னை அமரச்சொன்னார்கள். அவர்களே ஆரம்பித்தார்கள், தம்பி...இங்கே படிக்க உங்களிடம் பணம் இருக்கிறதா என்று?...நான் என் நிலைமையை முழுதாகச் சொன்னவுடன் என் மேல் இரக்கம் கொண்டு விவசாயிகளுக்கான ஏதோ ஒரு சிறப்பு பிரிவில் தருவதாகவும் ஆனால் வருடம் ஒன்றரை லெட்சம் மட்டும் கட்டவேண்டும் என்றார்கள். மேலும் நீங்கள் தேர்வாகி விட்டீர்கள் நாளைய BDS கௌன்சிலிங் வரவேண்டாம் என்றார்கள்.

என்ன செய்யலாம் என்ற குழப்பத்தோடு என் அப்பாவும் நானும் பாண்டிச்சேரி ஜிப்மர் மருத்துவக் கல்லூரியில் மலேசியாவில் இருந்து வந்து படிக்கும் என் சொந்த பெரியப்பா மகனைப் பார்க்க சென்றோம். அவர் என்ன ஆலோசனை வழங்கினார் தெரியுமா?

......தொடரும்

No comments: