27/03/2021

அனுபவப் பதிவு 16------கல்லூரிஅனுபவம்----------பூஜ்யம் நூறானது

 

 


#RomanticHeroes

தமிழ்வழிக் கல்வியில் இருந்து பொறியியல் வந்ததாலும், நானே எனக்குள் ஏற்படுத்திக்கொண்ட தாழ்வு மனப்பான்மையாலும் முதலாம் ஆண்டில் இயற்பியல் (Physics ) மற்றும் அடிப்படை இயந்திரவியல் & மின்னியல் (Basic Mechanic & Electrical) பாடங்களில் தோல்வியடைந்தேன். அதற்குப்பின் எந்த பாடத்திலும் தோல்வியடையவே இல்லை என்பதும் குறிப்பிடத்தக்கது. இருப்பினும் அந்த முதலாமாண்டு தோல்வியில் மறக்கமுடியாத சுவாரஸ்யங்கள் நிறையவே இருந்தது‌. பொதுவாக கணிதத்தில்தான் பெரும்பாலோனோர் தோல்வி அடைவார்கள். நானோ இயற்பியலில் தோல்வி அடைந்தததன் காரணம் அலட்சியம் மட்டுமே. இயற்பியல் புத்தகம் தலையணைமாதிரி மிகவும் பெரியதாக இருக்கும். இதையெல்லாம் யார் படிப்பார்கள் என்று நண்பர் ஒருவரிடம் விற்றுவிட்டேன். கடைசியில் அதில் நான் மட்டும் தோல்வியடைய, வாங்கிய நண்பரோ அதில் மட்டுமே தேர்ச்சியடைந்தார். அடுத்து அடிப்படை பொறியியல் என்கிற பாடமானது மற்ற துறைகளை மேலோட்டமாகப் படிப்பது. அதாவது நான் கட்டிடவியலாக இருந்ததால் மற்ற துறைகளான இயந்திரவியல் மற்றும் மின்னியல் படிக்க வேண்டும். அதைப்போலவே மற்றவர்களும் அவர்கள் துறையை விட்டுவிட்டு மற்ற துறைகளைப் படிக்க வேண்டும். இதில் எனக்கு சுத்தமாக வரவே வராத மின்னியலில் நான் எடுத்த மதிப்பெண் எவ்வளவு தெரியுமா?! வெறும் பூஜ்யம் தான்..... ஆனால் உங்களுக்கொன்று தெரியுமா?!..அந்த பூஜ்யம் தந்த மின்னியல்தான் இன்று கத்தாரில் மின்கம்பிவட பொறியாளராக்கி என்னையும் என் குடும்பத்தையும் வாழவைக்கிறது என்றால் நம்புவீர்களா?!. "பூஜ்யத்திற்குள்ளே ஒரு ராஜ்ஜியத்தை ஆண்டுகொண்டு புரியாமலே இருப்பான் ஒருவன். அவனைப் புரிந்து கொண்டால் அவன்தான் இறைவன்" என்ற கவியரசரின் வரிகளை அன்றுநான் படித்திருக்கவில்லைதான். ஆனால் இன்று முழுவதும் புரிந்துகொண்டேன் என்றால் அது மிகையல்ல (ஜீரோ 0 எடுத்ததற்கு எவ்வளவு பில்டப்பு😊😊😊😊)

இருப்பினும் இரண்டாம் வருடத்தில் இருந்து படிக்க ஆரம்பித்தேன் என்பதைவிட எப்படி பரீட்சை எழுதவேண்டும் என்பதையும் தெரிந்து கொண்டதால், இரண்டாம் வருட முடிவில் முதலாம் மாணவனாகத் தேர்ச்சியடைந்தேன். அதுமட்டுமல்லாமல், Planning and cost evaluation என்ற பாடத்தில் 100 மதிப்பெண்கள் எடுத்த மாணவனாகி மிகவும் மதிப்புமிக்க மாணவனாகவும் ஆனேன். நான் சீனியரான பிறகு ஜூனியர் மாணவ மாணவிகள் எல்லாம் என்னிடம் கற்றுக்கொள்ள வேண்டும் என்று ஆசிரியர் ரமேஷ் அவர்கள் என்னிடமே அனுப்பி வைத்தார். அது எவ்வளவு பெருமையாகவும் சந்தோசமாகவும் இருந்தது தெரியுமா?!..அட அட அடா....

அப்புறம்... நான் மேடையேறிய விடயங்களைக் கூறுகிறேன். கல்லூரியில் மேடையேறுவது என்பது எப்படியென்றால், ஒவ்வொரு குழு அமைக்க வேண்டும். ஒவ்வொரு குழுவிற்கும் 750 ரூபாய் கட்டணம் மற்றும் 15 நிமிடங்கள்தான் தருவார்கள். நான் இரண்டாம் வருடம் படிக்கும் போது Romance-99 என்று ஆரம்பித்தேன். ஆனால் வாய்ப்பு கிடைக்கவில்லை. மூன்றாம் வருடம் படிக்கும்போது Romantic Heroes என்று ஆரம்பித்து மேடையேறி இரண்டாமிடம் வாங்கியதென்பது வாழ்நாளில் மறக்கமுடியாத ஒன்றே. நம் 15 நிமிடங்களில் முதலில் வள்ளுவரைக் காண்பித்து கவிதாலயாவில் வரும் 'அகர முதல எழுத்தெல்லாம்" என்ற குரல் ஒலிக்க மலர் தூவுவோம். அதன் பின்னர், நானே இயக்கி நடித்த நான்கு நிமிட நாடகம் வரும். அதைத்தொடர்ந்து பாரதி என்ற இயந்திரவில் நண்பர் இயக்கிய நடனம் அரங்கேற்றம் செய்தோம். முடிவில் குஜராத் பூகம்பத்தில் இறந்தோர்க்கு மௌன அஞ்சலி செலுத்தும் விதமாக அனைவரையும் எந்திரிக்க வைத்தோம். இப்படி அப்பவே அனைத்தையும் வழங்கித்தான் வென்றோம். முதலிடம் வென்றவர் எங்கள் துறையைச் சேர்ந்த நண்பர் கானா சரவணன்தான் என்பது எங்களுக்கெல்லாம் பெருமை. நான்காம் வருடமும் அதே வடிவமையில் அரங்கேற்றம் செய்தோம். எங்களுக்குத்தான் முதலிடம் என்றார்கள். ஆனால் சில குழுக்கள் பெண்களை அதிகம் கலாய்த்ததால் பிரச்சினையாகி எந்த நிகழ்வுகளிலும் யாருக்கும் இடங்களை அறிவிக்கவில்லை.

முதலாம் வருடத்தில் ஏற்பட்ட ஒரு விளையாட்டான தோல்விக்குப் பதிலடி நான்காம் வருடத்தில் கிடைத்தது. ஆம். நான் என் கட்டுமானவியல் துறையின் கருத்தரங்க நிகழ்விற்கு (STRESS 2001) தலைவரானேன் (Chairman). அந்தநேரத்தில் இரண்டு மூன்று லெட்சங்கள் சேர்த்து இந்தியா முழுவதும் உள்ள கல்லூரிகளுக்கு அழைப்பை விடுத்து நிகழ்வை நடத்துவது என்பது ஒரு சவாலான விடயமே. அதையும் ஜூனியர் மாணவர்களின் துணையால் நன்றாக நடத்தி முடித்தோம். அது ஏன் ஜூனியர் மாணவர்கள் என்று நீங்கள் கேட்கலாம். காரணம் இருக்கிறது. எங்கள் வகுப்பில் வெறும் இரண்டு பெண்களோடு சேர்த்து மொத்தம் 18 பேர்தான், ஆனால் முதலாமாண்டு மற்றும் இரண்டாமாண்டில் முறையே 100+ 80+ மாணவர்கள் படித்தார்கள்.(கட்டிடவியலுக்கான மதிப்பை புரிந்து கொண்டதால் மாணவர்கள் அதிகமாகச் சேர்ந்தனர். நானும் பணத்திற்காக டேரிஃப் கார்டு (Tariff card) கொடுத்தபோது நிறைய பணம் குவிந்தது. அட நம் பேச்சையும் கேட்டு பணம் தருகிறார்களே என்று மனதிற்குள் மகிழ்ச்சி கூடியது. மேடையில் பேசவேண்டிய தருணம் வந்தது. நான் ஆங்கிலத்தில் பேசும் பேச்சை டெல்லியில் இருந்து வந்து தற்சமயம் அமெரிக்காவில் பணிபுரியும் நண்பன் கபில்குப்தா தயாரித்துக்கொடுத்தான். (இவனிடம் ஆங்கிலத்தில் பேசுவதற்காகவே ஒரு சிலமாதங்கள் அறையெல்லாம் எடுத்துத் தங்கியுள்ளேன்). என்னதான் அவன் பேசத் தயாரித்துக் கொடுத்தாலும் நான் தமிழில் பேசிய வரிகளே முத்தாய்ப்பாக அமைந்தது.

அவ்வரிகள் இதோ...

வையகமே வாழ்த்துமளவில்
வானளாவில் உயர்ந்து நிற்கும்
அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில்
கட்டிடவியல் துறையைக்
கலைநயத்துடன் தேர்ந்தெடுத்து
எதிர்கால இந்தியாவை
ஏற்றமிகு இந்தியாவாக மாற்றத்துடிக்கும் வருங்கால வல்லுனர்களை
வருக வருகவென வரவேற்கிறேன்...

✍️செ. இராசா

No comments: