06/03/2021

அனுபவப் பதிவு-9------------------------படிக்காத மேதை சம்சாத்கான்-------கட்டுரை

 


 #அஸ்ஸாம்_மேகாலயா


இளம்வயதில் கொடுக்கும் வேலைகள் எதுவாக இருந்தாலும் தவறில்லாமல் செய்பவன் என்ற மிடுக்கும் செருக்கும் பொதுவாக பலருக்கும் இருப்பதுபோல் எனக்கும் நிறையவே இருந்தது. ஆனால் அவைகளையும் உடைத்தெறியும் சம்பவங்கள் இரண்டு நடந்தேறின.

ஒன்று மிகப்பெரும் வெள்ளத்தில் சிம்சாங் என்ற ஆற்றங்கரை அருகே தொழிற்சாலைக்காக நான் கட்டிய தடுப்புச் சுவர்கள் எல்லாம் உடைந்து ஆற்றோடு ஆறாக போனபோது ஏற்பட்டது. உண்மையில் இவையெல்லாம் மெருவெள்ளத்தில் சகஜமான ஒன்றுதான் என்றே முதலாளி கூறினாலும் நான் கட்டிய ஒரு கட்டுமானம் உடைந்ததை என்னால் மட்டும் ஏனோ ஏற்க முடியவில்லை. அன்று முதலாளியைவிட நானே மிகவும் வருத்தப்பட்டேன். அதற்கெல்லாம் காப்பீடு மற்றும் சலுகைகள் அரசாங்கம் கொடுத்தாலும் நம் மேற்பார்வையில் கட்டிய ஒன்று காணாமல்போய்விட்டதே என்ற வருத்தம்தான் எனக்கிருந்தது. ஆக நமக்கும்மேல் ஒரு ஆண்டவன் இயற்கையின் சக்தியாய் இருக்கிறான் என்பதை மறக்கும்போதெல்லாம் அவன் ஒரு குட்டு குட்டத்தான் செய்கிறான்.

ஆனால், அடுத்த சம்பவம் டில்லி சாகாரன்பூரைச் சேர்ந்த சம்சாத்கான் என்னும் ஒரு படிக்காத மேதையால் உணர்த்தப்பட்டது. அவர்விட்ட சவாலில் தோற்று என்னை அழுஅழுவென்று அழுக வைத்தது. அது என்ன தெரியுமா?!

சொல்கிறேன்.... நானோ BE படித்து முறையாக சிலபேரிடம் வேலைகளைக் கற்றுக்கொண்டு படித்ததன் அடிப்படையில் வேலை பார்க்கிறவன். ஆனால் நண்பர் சாம்சத்கானோ கைநாட்டு, ஆனால் இரும்புத் தூண்கள் மற்றும் சிமெண்ட் ஆலைக்குத் தேவையான அனைத்து இயந்திரங்களையும் தூக்கி வைக்கும் வேலையை பரம்பரை பரம்பரையாக செய்பவர்கள். இதைப்பற்றியெல்லாம் எனக்குத் தெரியாது. Steel Design மட்டும் தான் பொறியாளர்கள் செய்வார்கள். அதைவைத்து fabrication அறிந்த யாரும் செய்துவிடலாம். ஆனால் Erection என்று சொல்லப்படும் வேலை அனைவராலும் முடியாது. அதற்கு வெறும் பட்டறிவு பயன்படாது. அனுபவ அறிவே பயன்படும். அது தெரியாமல் நானும் அவரும் பேசும்போது என்னிடம் ஒரு சவால் வந்தது. அதாவது நான் கட்டிய அனைத்துத் தூண்களின் மேல் மட்டமும் மிகச்சரியான உயரத்தில் உள்ளதென்றேன். அவர் முதல் தூணிற்கும் கடைசி தூணிற்கும் இடையே பெரிய அளவில் உயர வித்தியாசம் உள்ளதென்றார். நான் இல்லவே இல்லை என்றேன். நிருபித்து காட்டி என்னைத் தலை குனிய வைத்தார். அறையில் சென்று தேம்பி தேம்பி அழுதேன். என்னை ஓடோடிவந்து தேற்றினார். இதெல்லாம் வேலையில் சகஜமென்று கூறி அதை அவ்வளவு எளிதாகச் சரிசெய்தார். அதைச் சரி செய்யாவிட்டால் தூணிற்கு மேலே ரயிலில் ஓடும் கிரேனை இயக்க முடியாது. அதைச் சில Steel plates கொடுத்து packing செய்து சரி செய்துவிட்டார். அன்று முதல் என் அன்பு நண்பராகவும் மாறிவிட்டார். அவரின் திறமையைப் பல கட்டங்களில் கண்டு வியந்துள்ளேன்.

ஒரு முறை சிமெண்ட் மில்லைத் தூக்கி வைக்கும் சவால் ஒன்று அவரிடம் வந்தது. ஏன் சவால் என்கிறேன் என்றால், மிகப்பெரிய கிரேன் வந்தால்தான் தூக்கி வைக்க முடியும். ஆனால் மேலே கூரையெல்லாம் போட்டாகிவிட்டது. மீண்டும் கூரைகளைப் பிரிக்க முடியாது. கிரேனும் வர முடியாது. தூரத்தில் இருக்கும் சிமெண்ட் மில்லை (40-50மீ நீளம் 2-3மீ விட்டம்) நகர்த்தி பவுண்டேசன் மேல் தூக்கி வைக்க வேண்டும். எப்படி முடியும்?!. முடியும் சாம்சத்கானால் முடியும். மூன்றே நாட்களில் வெறும் chain block மற்றும் சில ஜுகார்டுகள் செய்து முடித்துவிட்டார். ஆக..BE பொறியியலில் படிக்கா பாடத்தை நான் சாம்சத்கானிடம் படித்தேன் என்றால் அது மிகையல்ல. அதுமட்டுமா.... ஹிந்திப்படமே பார்க்காத என்னைக் கட்டாயப்படுத்தி கே.பாலச்சந்தர் இயக்கிய கமல்ஹாசன் நடித்த "ஏக் துஜே கேலியே" காண வைத்தார். அன்றுமுதல் ஹிந்திப் படங்களும் காண ஆரம்பித்தேன்.

அஸ்ஸாம் வந்து பலநாட்கள் ஆகிவிட்டதால், ஊருக்குப் போகும் ஆசை வந்தது. முதலாளியிடம் தெரியப்படுத்தியபோது, தன் வீட்டில் ஒரு Swimming pool with Billiards வசதியுடன் செய்துதரச் சொன்னார். அப்போதுதான் முதன்முறையாக அதற்கெல்லாம் தனியாக பணம் தரவேண்டும் என்று கூறினேன். கூறியதும் ஒரு சிரிப்பு சிரித்துவிட்டு என்ன சொன்னார் தெரியுமா?!

No comments: