#ஏழு_பள்ளிகள்
#சாதாரண_மாணவன்_சாதனை_மாணவன்
#8ஆம்_வகுப்பில் 80/500------ #10ல்-432/500
சிவகங்கை
 மாவட்டம் அம்மன்பட்டி என்ற சிறிய கிராமத்தைச் சேர்ந்த எனது தந்தையார் 
செட்டிநாட்டு ஊர்களில் சிறப்புமிகு நகரமான தேவகோட்டை என்ற ஊரில் வாழ்ந்த 18
 வயதே ஆன என் அம்மாவைத் தன் 21 வயதிற்குள்ளாகவே திருமணம் 
செய்துவிட்டார்கள். இரண்டு ஊர்களுக்கும் இடையே 50கிமீ தூரம் வரும். மேலும் 
அக்கால கட்டத்தில் மின்சார வசதியோ வாகன போக்குவரத்து வசதியோ இல்லாத ஊரில் 
எப்படித்தான் என் தாயாரைக் கட்டிக்கொடுத்தார்களோ? பிற்காலத்தில் நானே 
இக்கேள்வியை என் அம்மாவிடம் கேட்டபோது, சென்னை கூட்டிப் போவதாகப் பொய் 
சொல்லியே தந்தையார் திருமணம் செய்தாராம். பாவம்....அவர் அம்மன் பட்டியை 
விட்டு வரவே மாட்டார் என்பதை அன்று யாருமே தெரிந்திருக்கவில்லை போலும். 
ஆமாம் இதையெல்லாம் ஏன் சொல்கிறேன் என்றால் என் பள்ளி வாழ்க்கை கிராமம் 
மற்றும் நகரங்களுக்கிடையே எப்படி அடிப்பட்டது என்பதைச் சொல்வதற்காகத்தான்.
சிறுவயதிலேயே
 என் தந்தையார் அடுத்தடுத்து மூன்று ஆண் பிள்ளைகளைப் பெற்றதால் என்னை என் 
அம்மாச்சி வீடான தேவகோட்டையிலும் என் இரண்டாம் தம்பியை மூன்றாம் அத்தை ஊரான
 திருச்சியிலும் கொடுத்துவிட்டு மூன்றாம் தம்பியை மட்டும் அம்மன் 
பட்டியிலேயே படிக்க வைத்தார்கள்.
நான் 1/2 கிளாஸ்  போன்ற (Pre KG/ LKG போல்) ஒரு வகுப்பை அம்மன் பட்டியிலேயே பழைய #பிரஸிடென்ட்_ஐயா_வீட்டில் ஒரு அக்கா எடுத்ததாக ஞாபகம். பின்னர் #தேவகோட்டை_புனித_ஜான்
 என்ற கிறுத்துவ நடுநிலைப் பள்ளியில் சேர்த்துவிட்டார்கள். அங்கே 
அம்மாவிற்கு எடுத்த இராணி டீச்சர்தான் எனக்கும் டியூசன் எடுத்தார்கள். 
கைக்குட்டை எப்படி பயன்படுத்த வேண்டும் என்ற ஒழுக்கமெல்லாம் சொல்லிக் 
கொடுத்தது இன்னும் ஞாபகம் உள்ளது. ஆங்கிலத்தில் Tenses (take took taken) 
புத்தகம் கொடுத்து படிக்க வைத்ததை இன்னும் மறக்கவில்லை. 
எனக்குக் கண் 
குறைபாடு ஏற்பட்டதைக் கண்டறிந்து சொல்லி 5 ஆம் வகுப்பிலேயே கண்ணாடி போட 
வைத்தார்கள். ஐந்தாம் வகுப்பின் இறுதியில் தாத்தா இறந்துவிட்டார். உடனே என்
 தந்தையார் தேவகோட்டையில் இருந்து சிவகங்கைக்கு 5 கிமீ அருகேயுள்ள #சோழபுரம் என்ற ஊரில் #சுத்தானந்த_பாரதி_தேசிய_வித்யாலயம்
 என்ற உயர்நிலைப் பள்ளியில் 6 ஆம் வகுப்பில் சேர்த்துவிட்டார்கள். இரண்டே 
வருடங்கள்தான் இப்பள்ளியில் படித்தேன். ஆனால் என் வாழ்வில் மறக்கவே முடியாத
 பள்ளி என்றால் அது இதுவே. காரணம், இங்கே பாடம் மட்டும் சொல்லிக் 
கொடுப்பதில்லை. ஒவ்வொரு புதன் கிழமையும் இலக்கிய மன்றம் என்ற பெயரில் 
மேடைப் பயிற்சியும், வியாழக்கிழமைகளில் யோகா மற்றும் உடற்பயிற்சிகளும், 
வெள்ளிக்கிழமைகளில் பக்திப் பிரார்த்தனையும் நடைபெறும். 
என்னை முதன் முதலாக ஆண்டுவிழாவில் #கோலாட்டம் ஆட வைத்து, ஒரு வயதான பாட்டி ரஜினி படம் பார்க்கப் போவதுபோல் நானே உருவாக்கிய #தனி_நடிப்பு_நாடகம் போட வைத்ததும், #மாணிக்கவாசகர்
 பற்றி பேசும்போது பயந்து நடுங்கிய சமயத்தில் "டேய் இராசமாணிக்கம்...ஏன் 
பயப்படுகிறாய் கீழே உள்ள அனைவரையும் ஆடுமாடாக நினைத்துக்கொள்" என்று 
மாணிக்க வாத்தியார் தைரியம் கொடுத்ததும் இப்பள்ளியில்தான். இன்றும் பல 
தமிழ், ஹிந்தி, சம்ஸ்கிருத, ஆங்கிலப் பாடல்கள் மனப்பாடமாகத் தெரியும் 
என்றால் இந்த இரண்டு வருடங்களில் கற்றுக் கொண்டதே என்பேன்.
சோழபுரம்
 பள்ளி எங்கள் ஊரிலிருந்து சற்றே தொலைவு (14 கிமீ) என்பதாலும் காலையில் 
6:30க்குப் போய்விட்டு மாலை 6:30 க்குத்தான் பேருந்து வருமென்பதால் எட்டாம்
 வகுப்பிற்கு ஊருக்கு சற்று அருகிலேயே உள்ள #ஓக்கூர் (5 கிமீ) #சோமசுந்தரம்_செட்டியார்_உயர்நிலைப்
 பள்ளியில் சேர்த்துவிட்டார்கள். சோழபுரத்தில் நல்ல மதிப்பெண் எடுத்த நான் 
இங்கே மொத்தமே 80/500 எடுக்கும் அளவு தாழ்ந்துவிட்டேன். இப்பள்ளியில்தான்  
அதே ஊரைச் சேர்ந்த #நண்பன்_சிவக்குமார் கிடைத்தான் அந்த ஒரு காரணத்திற்காகவே அப்பள்ளிக்கு நன்றி சொல்லலாம். இங்கே மேடையில் #முட்டாள்_இராஜா
 என்ற நாடகத்தில் நானே கதாநாயகனாக நடித்தேன். என் நடிப்பை ஒருவர் 
பார்த்துவிட்டு நான் பிற்காலத்தில் பெரிய நடிகராக வருவேன் என்று சொன்னார். 
அது என் மனதில் பசுமரத்தாணிபோல் பதிந்தாலும் அதெல்லாம் நடக்கவில்லை. 
பாட்டுப் போட்டியிலும் கலந்துகொண்டு இரண்டாமிடம் வந்தேன். இங்கேதான் 
நகரம்பட்டியைச் சேர்ந்த #இரமேஸ்
 என்ற நண்பனும் பழக்கமானான். நானும் என் தம்பியும் சரியாகப் படிக்கவில்லை 
என்று என் தந்தையார்  ஒக்கூரிலிருந்து பொன்னமராவதி அருகே உள்ள ஆத்திக்காடு #தெக்கூர் என்ற ஊரில் #விசாலாட்சி_கலாசலா_மேல்நிலைப் பள்ளியில் 9 ஆம் வகுப்பில் விடுதியில் தங்கி படிக்கச் சேர்த்துவிட்டார்கள்
என்னால்
 விடுதியில் தங்கவே முடியவில்லை. முதல்நாளே தப்பி ஓடினால் உடனே 
பிடித்துவிட்டார்கள். இரண்டாம் நாள் என் தம்பியோடு ஓடினால் இரண்டு மணிநேரம்
 தேடி ஒரு கிணற்றடியில் பதுங்கிய எங்களைப் பிடித்து வெளுத்துவிட்டார்கள். 
பிறகு எப்படியோ போராடி அப்பாவிடம் சொல்லி சொல்லி ஒரு வருடம் மட்டுமே 
படித்து மீண்டும் சிவகங்கை திரும்பி விட்டோம். ஆனால் இந்தப் பள்ளியிலும் 
மறக்க முடியாத சம்பவங்கள் உண்டு. ஒருமுறை ஊருக்குக் கிளம்பத் தயாரானபோது 
கண்காணிப்பாளர் விடாததால் சொறி மருந்தை எடுத்துக் குடித்துவிட்டேன். 
பொன்னமராவதி மருத்துவமனைக்குக் கூட்டிப்போயி வாந்தி எடுக்க வைத்து 
சரிசெய்தார்கள். பின்னர் அந்த வார்டன் பிரபாகரன் அடி பிரித்துவிட்டார். 
இன்னும் வலிக்கிறது என்றால் பார்த்துக்குங்க...அந்தப் பள்ளியில் 
பொன்னமராவதி ஆறுமுகம் என்ற புகழ்பெற்ற ஒருவர் எழுதிய நாடகத்தில் #தேவா_என்ற_பாத்திரத்தில் நடித்த நான் #முதலிடம்_வாங்கியது மறக்க முடியாதது. அதுமட்டுமல்ல.... இங்கேதான் நான் படிக்க ஆரம்பித்தேன். தர வரிசையில் 16-14-12-7-2...வரை வந்துவிட்டேன். 
அங்கிருந்து கிளம்பியநான் #சிவகங்கையில் 10ஆம் வகுப்பிற்கு வந்தபோது யாருமே சேர்த்துக் கொள்ளவில்லை. மன்னர் மேல்நிலைப் பள்ளியில் 5000 ரூபாயோ 2000 ரூபாயோ கேட்டார்கள்.. #மருதுபாண்டியர்
 என்ற அரசுப்பள்ளியில் ஒரு பெஞ்சு மட்டுமே கேட்டார்கள். என்னை எங்கப்பா 
அங்கே சேர்த்துவிட்டார்கள். அங்கே அதுவரை எடுத்த அதிகபட்ச மதிப்பெண்ணே 
315தான். அதில்தான் படித்து முதன்முதலாக 432 என்று 400க்குமேல் அதிகமாக 
எடுத்து முதல் மாணவனாகவும் கணக்கில் 100 எடுத்த மாணவனாகவும் ஆனேன். 
இப்பள்ளியில் #The_Lost_Son என்ற ஆங்கில நாடகத்தில் நடித்தது மறக்க முடியாது.
அடுத்து 11 மற்றும் 12 ஆம் வகுப்பு #கற்பூரசுந்தர_பாண்டியன்_மேல்நிலைப்
 பள்ளியில் படிக்கப் போனேன். சொல்லிக்கொள்வதுபோல் இல்லாக் கேவலமான பள்ளியே 
இது. 11ஆம் வகுப்பில் புத்தகமே வரவில்லை. மரத்தின் அடியிலேயே கழித்தோம். 
இங்கேதான் மேலூரைச்சேர்ந்த நண்பர் #நாகராஜ் மற்றும் #ஜெயகாந்தன்
 பழக்கமானார்கள். இவர்களால் ரங்கீலா ஹம்ஆப்கே ஹைன் கோன் என்கிற ஹிந்திப் 
படப் பாடல்களெல்லாம் கேட்க ஆரம்பித்தேன். மற்றபடி இப்பள்ளியில் சொல்ல 
ஒன்றுமில்லை. இங்கே 992 தான் எடுத்தேன். இப்பள்ளியில் சேராமல் 
இருந்திருந்தால் எனக்குப்பிடித்த உயிரியல் பாடத்தில் நல்ல மதிப்பெண் 
எடுத்து மருத்துவத்தில் போயிருப்பேன் என்ற ஆதங்கம் இன்னும் இருக்கிறது. எது
 எப்படியோ கிராமத்தில் இருந்து 4 கிமீ சைக்கிள் மிதித்து மதகுபட்டி வந்து 
அங்கிருந்து பேருந்தில் சிவகங்கை சென்று படித்துவிட்டு மீண்டும் ஊர்வரும் 
வாழ்க்கைப் பாடம் இருக்கிறதே அது பள்ளிப் பாடத்தைவிடமேல் என்றே சொல்வேன்.
நான்
 படித்த ஏழு பள்ளிகளில் மிகச்சிறந்த பள்ளியென்றால் அது சோழபுரம் பள்ளியே. 
அதைப்போல் நல்ல பள்ளிகள் உருவானால் நிறைய நிறைய நல்ல மாணவர்கள் உருவார்கள் 
என்பது என் திண்ணம்.
என்னைப் பொறுத்தவரை மேடைகளில் பயமில்லாமல் 
நடிக்கும் ஒருவன் பிற்காலத்தில் எங்கேயும் எந்த நிறுவனங்களிலும் எந்த 
கூட்டத்திலும் பயமின்றி சாதிப்பான். அதேபோல் விளையாட்டில் கலந்து கொள்ளும் 
ஒருவன் அடிக்கடி தோல்விகளை சந்திப்பதால் வாழ்க்கையில் தோற்றாலும் தற்கொலை 
என்ற முடிவுக்கெல்லாம் போகாமல் தோல்விகளை விளையாட்டாக சந்திப்பான். ஆக... 
பள்ளிப் படிப்பைவிட இவற்றை ஊக்குவிக்கும் பள்ளிகளே மிகச்சிறந்த பள்ளிகள் 
என்றுகூறி என் பள்ளி வாழ்க்கையை இத்தோடு நிறைவு செய்கிறேன்.
செ.இராசா
15/03/2021
அனுபவப் பதிவு -12---பள்ளி வாழ்க்கை சுருக்கமாக-----கட்டுரை
Subscribe to:
Post Comments (Atom)

No comments:
Post a Comment