01/03/2021

அனுபவப் பதிவு-6-------பில்லிணியம் சிமெண்ட்ஸ் அனுபவம்---கட்டுரை

 



புதிய வேலை தொடங்குகிறார்கள் என்ற செய்தி கேட்டவுடனே ஊரே திரண்டு கூட்டமாக வந்துவிட்டனர். மிகவும் பின்தங்கிய மாநிலங்களில் வசிக்கும் அவர்களின்மேல் எந்தக்குற்றமும் இல்லை. இந்திய அரசாங்கம் இதுவும் தன் நாட்டின் ஒரு பகுதிதான் என்று எண்ணாமல் விட்டுவிட்டதோ என்று எண்ணத்தோன்றும் அளவில்தான் அம்மாநிலங்கள் இன்றும் இருக்கின்றன. விளைவு வேலை இல்லாத் திண்டாட்டம்தான் எல்லாப் பக்கமும். ஆனால் இயற்கை அன்னை அவர்களுக்கு மிகவும் கொட்டித்தான் கொடுத்துள்ளாள். அவர்களுக்குத்தான் அதைப் பயன்படுத்தும் அளவிற்கு முறையான கல்வி இல்லை. ஆம்... என்ன இல்லை அங்கே?! நம்ம ஊரில் சீமைக்கருவைபோல் அங்கே தெருவெங்கும் தேக்கு மரம் இருக்கிறது. எங்கும் பசுமைதரக்கூடிய நீர்வளம் இருக்கிறது. ஆனால் வறுமையும் கூடவே இருக்கிறது காரணம் யாராக இருக்க முடியும்?! கண்டிப்பாக முறையான ஆட்சியாளர்கள் இல்லாமையே காரணம் என்பேன்.
 
ஆகவேதான் எங்களிடம் வேலை தேடி அத்தனைபேரும் வந்துவிட்டார்கள். நாங்களும் 100 நாள் வேலைத்திட்டம்போல் ஒரு திட்டம் தீட்டினோம். வீட்டுக்கு ஒருவருக்கு வேலை அதுவும் சுழற்சி முறையில் ஒரு நாள் விட்டு ஒருநாள். இப்படியெல்லாம் பார்த்துதான் வேலை கொடுப்போம்.
இதில் ரபா என்ற இனத்தைச் சார்ந்தவர்கள் பெரும்பாலும் கரடுமுரடான வேலைகளை சர்வ சாதாரணமாக செய்யக்கூடியவர்கள். அதாவது ஒரு மூங்கில் குச்சிபோட்டு மேலே ஏறி விடுவார்கள். தண்ணிக்குள் மூழ்கிச்சென்று பவுண்டேசன் போட்ட மோல்டுகளை கழட்டி வருவார்கள். ஒரு கயிற்றைப்பிடித்தே மூன்று மாடி உயரத்தில் இருந்து இறங்கி விடுவார்கள். இவர்கள்தான் என் பலம் என்பேன். இவர்களைச் சரியாகப் பயன்படுத்தக் கற்றுக்கொண்டேன். பெரும்பாலும் அஸ்ஸாமிய பெங்காலிகளே கொத்தனார் மேஸ்திரி வேலைபார்க்க வந்தார்கள். அவர்கள் அனைவரும் இஸ்லாமியர்களே. அதிலிருந்த அன்வர் மற்றும் அப்ஜலூர் என்ற இருவரை மேற்பார்வையாளராக நியமித்தேன். என் இரு கரங்களாக இருவரும் இருந்து பல ஆலைகள் அமைய உதவி செய்தார்கள். அதில் அப்ஜலூர் அன்வரைவிட நல்ல பொறுப்பாக வேலை பார்ப்பான். அன்வர் பல மொழிகள் பேசும் திறமைசாலி. என்னோடுப்பேசிப்பேசி தமிழும் பேசுவான். நான்கு முறைக்குமேல் தமிழ்நாடு வந்துள்ளான். என் மேல் இந்த இருவரும் அவ்வளவு அன்பு வைத்திருந்தனர். இதுவே அங்கே உள்ள மற்றவர்களுக்கு உறுத்தியது. குறிப்பாக விர்கோ சிமெண்ட் தொழிலாளர் சங்க நிர்வாகிகளுக்கு உறுத்தியது. அவர்கள் என் அலுவலகத்தில் வந்து என் முன்னால் உட்கார்ந்து பேசக்கூடாது என்று என் முன்னாலேயே அப்ஜலூரை அடிக்க வந்தார்கள். காரணம் அங்கே உள்ள இஸ்லாமியர்கள் பங்களாதேசத்தில் இருந்து வந்தவர்களாம், அவர்களை அஸ்ஸாமிய இந்துக்கள் மதிப்பதே இல்லை. ஆனால் இதை என் அலுவலகத்தில் நான் அனுமதிக்கவில்லை. பெரிய அளவில் எதிர்த்தேன். இதனால் எனக்கும் சங்க உறுப்பினர்களுக்கும் பிரச்சினை உருவானது. இரபிஜெயின் தலையிட்டு அவர்களிடம் பேசியுள்ளார்.
 
அங்கே அலி என்ற ஒரு பொறியாளர் என்னை இரம்ஜான் பக்ரீத் என்றால் அன்வர் வீட்டிற்கு அழைத்துச்செல்வார். இரபிஜெயின்கூட அங்கே எல்லாம் நீ ஏன் போகிறாய். நீ இந்து அல்லவா...அங்கே மாடெல்லாம் சாப்பிடுவார்கள் என்றார். நான் சிதம்பரம் கல்லூரியில் படிக்கும்போதே ஃபீப் சாப்பிடுவேன் என்பதால் எனக்கு பிரச்சினை ஒன்றுமில்லை. மேலும்..நான் சென்னை ராமகிருஷ்ண மடத்து நூல்களை வாசித்து அதன்மூலம் பக்குவமடைந்தவன். ஆனால் அங்கே ஒரு இந்து பீப் சாப்பிட்டால் அது மிகப்பெரிய குற்றமாகிவிடும். நம்மை ஒதுக்கி விடுவார்கள். ஆனால் எனக்கு மட்டும் தனியாக அப்ஜலூர் பச்சைமிளகாய் வெங்காயம் தூக்கலாகப் போட்டு யாருக்கும் தெரியாமல் அவ்வப்போது செய்து கொடுப்பான்.
 
நான் அஸ்ஸாமில் இருந்த என் அறையை மாற்றி வேலை நடக்குமிடமான டமாஸிலேயே தங்க ஆரம்பித்தேன். இங்கே 24 மணிநேரமும் மின்சாரம் இருக்கும். மேகாலயாவில் மின்சாரம் துண்டிப்பு ஏற்பட்டால் மின்சார வாரியத்தில் உள்ள பொறியாளர்களை அடி நிமித்திவிடுவார்கள். டமாஸில் ஒரே ஒரே மலையாளி RK. பிள்ளை மட்டும் விர்கோ சிமெண்டில் வேலை பார்த்து வந்தார். எனக்கு சமையல் கற்றுக்கொடுத்த குரு இவர். (பாவம்... சமீபத்தில் அங்கேயே தற்கொலை செய்து கொண்டாராம்)
 
நான் இதற்கு முன் சிமெண்ட் பேக்டரி போட்ட அனுபவமெல்லாம் கிடையாது. வரைபடத்தைப் பார்த்து பார்த்து அப்படியே அட்டையில் அதை மாடல் செய்து மேஜையில் வைத்துவிடுவேன். அதில் உள்ள அளவுகளைக் குறித்துக்கொண்டு அப்படியே செய்ய வேலையாட்களுக்குச் சொல்லித்தருவேன். பழைய சிமெண்ட் ஃபேக்டரியில் பேக்கிங் செய்யும்போது அதில் கீழேசிந்தும் சிமெண்டை JCB யில் அள்ளிக்கொண்டு வருவார்கள். இரும்புக் கம்புகள் வேறு ஒரு ஃபேக்டரியில் இருந்து உடைந்த நெளிந்த கம்பிகளாய் வரும். அதை நிமிர்த்திக்கொள்ள வேண்டும். மணல் பக்கத்திலேயே ஆற்றிலிருந்து எடுப்பார்கள். செங்கல் சூலையும் அவர்களுக்கு உண்டு. ஆக கட்டிடத்திற்குத் தேவையான அனைத்தும் அவர்களுடையதே. அதாவது கழிவுபோல் விழும் அனைத்தையும் வைத்துக் கட்டிடங்களாக்கட்ட எந்த நிறுவனம் ஒத்துக்கொள்ளும் சொல்லுங்கள். அதற்குத்தான் என் தலைமையில் இப்படி ஒரு செட்டப்.
நான் கட்டிடவியல் பொறியாளன் என்ற முறையில் அனைத்தும் எப்படி தயாராகிறது என்பதை நேரடியாக பார்க்கும் பாக்கியம் பெற்றவனாவேன்.
இங்கே கடைக்கால் தோண்டினால் 2 அடியிலேயே தண்ணீர் வரும். ஒரு பக்கம் குழி தோண்டி தொடர்ச்சியாக தண்ணீர் எடுத்துக் கொண்டே சாதாரண கலவை இயந்திரத்தில் காங்கிரீட் போட்டுத்தான் வேலைகளை முடித்தோம். (ready mix எல்லாம் கிடையாது) தொடர்ந்து மழை வேறு பெய்யும். குடை பிடித்துக்கொண்டு மூன்று நாட்கள் 24 மணி நேரம் தொடர்ந்து காங்கிரீட் போட்ட அனுபவமெல்லாம் மறக்கவே முடியாது. 8 மணிநேரம் ஒரு சிஃப்ட் என்ற ரீதியில் 3 குழுக்கள் உருவாக்கி, குழுத்தலைவருக்கு அரை நாள் கூடுதல் கூலி கொடுத்து வரவழைத்து காங்கிரீட் போட்டோம். 
 
தொழிற்சாலை கட்டிக்கொண்டிருந்த போதே முதலாளி கேட்டுக் கொண்டதற்கிணங்க அவருடைய வீட்டில் வெளியே ஒரு போர்டிகோ கட்டும் வேலையும் கொடுத்தார். அவர் இருக்கும் வீடு துத்னையில் (Assam) ஆலை இருப்பது டமாஸில்(Meghalaya). போர்டிகோ காங்கிரீட் முடிய இரவு ஆனநிலையில் எனக்கு வாகனம் கொடுக்காமல் அங்கிருந்த சம்பூஜி என்ற மேலாளர் என்னை லாரியில் ஏற்றிவிட்டார் மிகுந்த மன வலியோடு பயணித்தேன். அதற்கெல்லாம் காரணம் இல்லாமல் இல்லை. முதலாளியிடம் எனக்கான மதிப்பு மரியாதை கூடியதால் பலரும் என்மேல் காழ்ப்புணர்ச்சியுடன் இருந்தனர். அதன் விளைவாக சம்பள விஷயமாக நான் சொன்ன வார்த்தையைத் திரித்து முதலாளியிடம் கூறியுள்ளார்கள். அவரும் என்னைத் தவறாக நினைத்துவிட்டார்போலும். ஊருக்குப் போவதாக இருந்தால் போய்விடச்சொன்னார். இருப்பினும் நேரில் வந்தவுடன் பேசலாம் என்று காத்திருந்தேன். தீவிரவாதிகளுக்குப் பணம் கொடுக்கிறார் என்று அரசாங்கம் சந்தேகப்பட்டு அவரைத் தேடியதுபோல...அவர் ஒரு மாதம் கழித்துதான் வந்தார். நான் ஒரு ஒரு மணி நேரம் என்னை எப்படி எப்படி அவமானப் படுத்தினார்கள் என்பதைக் டைரியில் குறித்து வைத்து ஆதாரத்துடன் விளக்கினேன். அவரும் புரிந்து கொண்டார். அன்றுமுதல் என் மதிப்பு மிகப்பெரிய அளவில் உயர்ந்தது. ஆம். அதுவரைக்கும் பில்லிணியம் சிமெண்ட ஃபேக்டரி மட்டும் பார்த்த நான் அன்றுமுதல் முதலாளியின் முக்கிய நபராக மாறினேன். பழைய இரும்புத் தொழிற்சாலைக்குச் சென்று பார்த்து வரச்சொன்னார். நான் எங்கு சென்றாலும் அங்கே எனக்கான அறை வைக்கச் சொன்னார். போகுமிடமெல்லாம் எனக்கான மரியாதையே தனிதான். என் முதலாளியோடு பிறந்தவர்கள் நான்குபேர். நான்கு பேரும் நான்கு வேலைகளாய் பகிர்ந்து பார்க்கிறார்கள். மூத்தவர் சில்லாங்கில் இருந்து கணக்கு வழக்கு, இரண்டாமவர் என் முதலாளி கள வேலை, மூன்றாமவர் கவுகாத்தி மற்றும் பங்களாதேஷ் பார்டரில் உள்ள டுப்ரி என்ற இடத்தில் வரி மற்றும் வியாபாரம், நான்காமவர்...பாவம் அவர் கொஞ்சம் அடாவடி என்பதால் பெங்களூரில் அவர் மாமனார் வீட்டில் இருந்து அகர்பத்தி கம்பெனி பார்க்கிறார். இந்த நால்வரில் என் முதலாளிக்கே மதிப்பதிகம் என்பதால் எனக்கும் அப்படியே. அவரின் மனைவியான பாபிஜியே என்னிடம்தான் முதலாளி எங்கேயென்று கேட்பார் என்றால் பார்த்துக்கொள்ளுங்களேன். 
 
டம்ராவில் இருந்து இன்னும் சற்று தள்ளி காரோ இன மக்கள் வாழும் மந்திபத்தர் என்ற இடத்தில் என் முதலாளி பழைய கைவிடப்பட்ட ரிப்ராக்டரி பிரிக்ஸ் என்ற ஆலை ஒன்றை விலைக்கு வாங்கி என்னை அங்கேயும் பார்க்க முடியுமா என்றார். கண்டிப்பாக பார்க்கிறேன்‌ என்றேன். அங்கே போய் ஒரே இடத்தில் மூன்று ஆலைகள் அமைத்துக்கொடுத்தேன். ஒன்று ஜல்லி அரைக்கும் கிரஷர், அடுத்து ரிப்ராக்டரி செங்கல் செய்யும் ஆலை மூன்றாவது சுண்ணாம்பு கற்களைச் சுட்டு பெட்டியில் அடைத்து விற்கும் பழைய ஆலையை புதுப்பித்தல். இதில் சுண்ணாம்பு தொழிற்சாலை மட்டும் தோல்வியடைந்துவிட்டது. இந்த ஆலைகளையெல்லாம் கட்ட மட்டும் செய்யவில்லை இயக்கவும் கற்றுக்கொண்டேன். காரணம் இங்கே வருபவர்கள் சில நாட்களில் ஓடிவிடுவார்கள் அல்லது தாதாகிரிகளின் தொந்ததரவால் ஓட்டிவிடப்படுவார்கள். என்னை வெளியில் போகும் இடங்களிளெல்லாம் மிரட்டல் விட்டார்கள். ஒருமுறை இராணுவத்தினர் உள்ளே வந்தனர். அதில் கேப்டனாக வந்தவர் நம்ம தமிழ் ஆள். நல்ல உயரமாக விஷால்போல் இருந்தார். என்னைப் பார்த்தவுடன் தமிழ் என்றவுடன் ஆச்சரியப்பட்டார். அதே சமயத்தில் அங்கே உள்ள நிலைமையறிந்து என் மேல் அனுதாபம் கொண்டார். அவர் என்ன சொன்னார் தெரியுமா?!
 
....தொடரும்
 
✍️செ.இராசா

No comments: