
பொதுவாகவே
 பொறியியல் கல்லூரிகளில் முதலாமாண்டில் அனைத்துத் துறைகளுக்கும் பொதுப் 
பாடமாகத்தான் இருக்கும். ஆகவே இரண்டாமாண்டில்கூட  தன் துறையை 
மாற்றிக்கொள்ளும் வாய்ப்புகள் அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் இருந்தது. 
அப்படி இரசாயனத்துறை (Chemical) போகவேண்டும் என்ற எண்ணத்தில் 
சேர்ந்தவன்தான் மயிலாடுதுறை சேமங்கலத்தைச் சேர்ந்த உயிர் நண்பன் சுபாஷ். 
என்னிடம் ஏற்பட்ட நட்பின் காரணமாக கட்டிடவியல் துறையிலேயே தொடர்ந்தான். 
அப்படி நானும் அவனும் நண்பர்களாக மாறியபோது அடித்த லூட்டிகள்  கொஞ்சம் 
நஞ்சமல்ல. மாயவரத்தில் இருந்து வந்துபோய் படித்த அவனும்  எங்களின் நட்பால் 
எங்கள் விடுதியிலேயே தங்க ஆரம்பித்தான். அவனைக்கான அவர் அப்பா அடிக்கடி 
வந்துபோவார். நல்ல பாசக்கார அப்பா. நாங்கள் அவனிடம் என்னடா உங்க அப்பா ME 
படிக்கிறாரா என்று நக்கல் செய்வோம். அப்போதுதான் சிதம்பரத்தைச் சேர்ந்த 
மிகவும் கலகலப்பான இரவுடிசம் நிறைந்த செல்வக்குமார் என்ற நண்பன் 
அறிமுகமானான். பொதுவாகவே நண்பன் சுபாஷ் இருந்தாலே அங்கே நகைச்சுவைக்குப் 
பஞ்சம் இருக்காது. இப்போது செல்வாவும் கிடைத்ததால், சொல்லவும் வேண்டுமா?!
புதுவருடம்
 பிறந்த தருணம். விடுதியில் உள்ள மாணவர்கள் அனைவரும் குடித்துவிட்டு 
அல்லோகலம் செய்து கொண்டிருந்தார்கள். முதன்முதலில் நமக்கும் குடிக்க 
வேண்டும் என்ற எண்ணம் அன்றுதான் தோன்றியது (முன்பே ஊரில் ஒருமுறை சித்தப்பா
 ஒருவர் பனிரெண்டாம் வகுப்பு படித்தபோது ஒருவாய் குடிக்க கொடுத்த அனுபவமும்
 உண்டு). ஆனால் கையில் காசில்லாதபோது அந்தக்குறையை தீர்த்துவைத்தது நண்பன் 
செல்வாதான். எப்படியோ தன்னை அடமானம் வைத்தாவது பணம் புரட்டுவேன் என்று கூறி
 பீர் வாங்கிக்கொடுத்தான். நான் குடித்த அந்த முதல் முழு பீரின் போதை 
இருக்கிறதே... இன்னும் சுற்றுகிறது என்றால் பார்த்துக் கொள்ளுங்கள். அன்று 
அவன் எங்களுக்குக் கருணை காட்டியதுபோல் நாங்களும் பல பேர்களுக்கு 
பின்நாட்களில் கருணை காட்டியுள்ளோம் என்ற உண்மையைச் சொல்லித்தான் 
ஆகவேண்டும். பின் எங்கள் கூட்டணியில் காட்டுமன்னார்கோயில் சதீஸ் சந்தர், 
ஹீமுஷ்ணம் ஆண்டெனி,
சிதம்பரம் பிரதீஸ்குமார், கடலூர் செந்தில் என்று ஒவ்வொருவராக இணைந்தனர். 
இப்படி
 இணைந்த நட்புகளுக்குள் ஒரு தேர்தல் விளையாட்டொன்று கசப்பாக மாறிய 
சம்பவமும் உண்டு. எனக்கும் ஒரு நண்பருக்கும் இடையிலான அந்தத் தேர்தல் 
விளையாட்டில் மொத்தம் 15 பேர்கள் ஓட்டுப்போட வேண்டும் நான் அதிமுக என்றும்,
 அவன் திமுக என்றும்...யார் ஜெயிக்கிறார்கள் என்று பார்ப்போமென 
விளையாட்டாகத்தான் போட்டி வைத்தோம். ஆனால் அவன் அதை விளையாட்டாக எடுக்காமல்
 வேண்டுமென்றே ஏதேதோ செய்து வென்றது மட்டுமல்லாமல் அனைவருக்கும் 
ஆம்லெட்டெல்லாம் கொடுத்து வெற்றியைக் கொண்டாடினான். அதை என்னால் அன்று 
தாங்கமுடியவில்லை. கழிப்பறையில் சென்று அழுதேன். அவன் பிற்காலத்தில் என் 
உயிர் நண்பனாக மாறினாலும் அன்றைய தினமும் அதற்கடுத்த வருடமும் என் 
எதிரியாவே தெரிந்தான். அன்றைய நிகழ்வானது என் மனதில் பசுமரத்தாணிபோல் 
பதிந்து, எப்படியும் அக்கல்லூரியில் நான் யாரென்று நிரூபிக்க வேண்டுமென்று 
கங்கனம் கட்ட அந்நிகழ்வே காரணமாக இருந்தது. பின்னர் கல்லூரியில் நிறைய 
சாதிக்கவும் தூண்டுகோலாக இருந்தது.
சொல்கிறேன்....
செ. இராசா
26/03/2021
அனுபவப் பதிவு-15---கல்லூரி அனுபவம்---விளையாட்டு வினையான கதை---கட்டுரை
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment