08/04/2025

இன்றைய தினம் என் மகனுக்கு

 


இன்றைய தினம் என் மகனுக்கு ஒரு முக்கியமான அற்புதமான நூலைப் பரிசளித்தேன். கண்டிப்பாக இந்த நூல் உன் வாழ்க்கையை மாற்றும் நூல் என்றும், இது நான் உனக்கு உன் வாழ்க்கைக்குத் தரும் மிக முக்கியமான பொக்கிஷம் என்றும் கருத வேண்டுமென்று கூறி வழங்கினேன்.
அவனும் ஆர்வத்தோடு வாங்கிப் படித்தது மட்டுமன்றி அவர் அம்மாவிற்கும் ஒவ்வொரு வரியாக மொழிபெயர்ப்பு செய்ததுகண்டு மிகவும் மனமகிழ்ச்சி அடைகிறேன்.

கண்டிப்பாகத் தமிழில் திருக்குறள் உட்பட எவ்வளவோ நல்ல நூல்கள் இருந்தாலும் அவரவர் வழியில் சென்றே புத்தக விருப்பத்தை ஏற்படுத்த வேண்டும் என்பதால் நான் மிகவும் விரும்பும் ராபின் சர்மா எழுதிய Who will cry when you die? என்ற அற்புதமான நூலைக் கொடுத்து படிக்க வைக்கும் முயற்சியில் வெற்றிபெற்றதாகவே உணர்கிறேன்.

பசங்க....பாடப் புத்தகத்தைத் தாண்டி படிக்க வேண்டும். அதுவும் வெளி உலகத்தை வாழ்க்கையைப் படிக்க வேண்டும். இந்தப் பட்டயப் படிப்பெல்லாம் வெறும் பணம் சம்பாதிக்க மட்டுமே. இலக்கியத் தேடல் கொண்ட படிப்பே வாழ்வை ருசிக்க வைக்கும், அதுவே சக மனிதனின் உணர்வுகளைத் தெளிவாகக் கடத்தும், அதுவே உற்ற தோழனாகக் கடைசிவரை வழிநடத்தும். அதுவே உண்மையான படிப்பு என்று ஆணித்தரமாக நம்புபவன் நான். அதை இந்தப் பசங்களுக்குப் புரிய வைக்க உண்மையில் எவ்வளவு பாடுபட வேண்டியிருக்கிறது. இருப்பினும் தொடங்குவோம்....நம்மில் இருந்தே...

✍️செ. இராசா

#robinsharma
#robinsharmaquotes
#robinsharmabook
#ineshraja
#Rajamanickam 

07/04/2025

பனமட்ட நண்பர் திரு. ராஜா அவர்களுக்காக

 

இருப்பதை வைத்தே
.....இனிதாய்ப் படைத்துத்
தருகின்ற யாவும்
......தரமாய்த்- தரும்நீங்கள்
பல்லாண்டு பல்லாண்டு
......பார்புகழப் பல்லாண்டு
நல்லபடி வாழயெம்
......வாழ்த்து!

பற்கள் இருந்தாலும்

 

ற்கள் இருந்தாலும்
பதம் பார்ப்பதில்லை....

அழுத்தி உழுதாலும்
தடம் காண்பதில்லை...

வகுப்பு எடுத்தாலும்
இரம்பம் போடுவதில்லை...

எப்படி சீவினாலும்
துண்டாக்குவதில்லை....

ஆனால்...

பற்கள் போனால்தான்
மதிப்பை இழக்கிறது
இந்தச் சீப்பு!

06/04/2025

கண்ணைக் காக்கும் இமைபோல

 

கண்ணைக் காக்கும் இமைபோல
.....கனியைத் தாங்கும் மரம்போல
மண்ணில் மாறும் நீர்போல
.....மலரால் வீசும் மணம்போல
விண்ணில் மின்னும் மீன்போல
.....விடிந்தால் தோன்றும் கதிர்போல
பெண்ணின் பெருமை காப்பீரே
.....பெரும்புகழ் பெற்று வாழ்வீரே!
✍️செ. இராசா

05/04/2025

நீ இருந்தால்

 

நீ இருந்தால்
இல்லையென்று எதுவும் இல்லை.‌...
நீ இல்லாதிருந்தால்
எல்லாம் இருந்தும் எதுவும் இல்லை.‌....✍️

03/04/2025

அன்பைத்தர என்றும் முனைபவன்

 

அன்பைத்தர என்றும் முனைபவன்
....அம்மன்வரம் என்றே நினைப்பவன்
........அன்னைத்தமிழ் ஒன்றால் வளர்பவன் தெரிவானோ?!
சென்னைத்தமிழ் கற்றே வருபவன்
..செம்மண்வள மண்ணில் பிறந்தவன்
.....சென்றானுயர் என்றே வியந்திட வருவோனோ?!
இன்னல்தரும் நட்பைக் கடந்தவன்
....எங்கும்பலர் காணத் தெளிந்தவன்
......இன்னும்ஒளி கிட்டா திருப்பது சரிதானோ?!
தன்னுள்தனை நன்றாய் அறிந்தவன்
....தம்மைத்தர என்றும் துணிந்தவன்
......தன்மெய்ப்புகழ் எங்கும் தெரிந்திட அருள்வாயோ?!
✍️செ. இராசா

கண்ணு முன்னே நிக்கும் சாமி

 

பல்லவி
கண்ணு முன்னே நிக்கும் சாமி
தாயப்போல உண்டா காமி
அன்பை அள்ளித் தந்த சாமிடா...

அன்னம் ஊட்டி வளர்த்த சாமி
அம்மாபோல எங்க காமி?
உன்னை என்னை பெத்த சாமிடா...

அம்மா அம்மா அம்மா
எங்க சாமி அம்மா
சும்மா சும்மா சும்மா
நீ இல்லா வாழ்க்கை சொம்மா

ஏய்...
அம்மான்னா வேற யாருடா?!
அம்மான்னா சாமிதானடா(2)

சரணம்_1
தப்புசெஞ்சு வந்தபோதும்
தயவுகாட்டும் தாயைப்போல
எத்தனையோ சொந்தமிருந்தும்
என்னைக்குமே ஈடே இல்லை...

ஊரைச்சுத்தி வந்தபோதும்
ஒட்டிப்போன வயிரப்பார்த்தா
அச்சச்சோன்னு பதறிப்போகும்
அம்மாபோல பந்தம் இல்லை...

என்ன தவம் செஞ்சுப்புட்டோம்
உன்னிடத்தில் பிள்ளையாக..
என்ன இனி செய்யப்போறோம்
பெத்தகடன் பூர்த்தியாக...

அம்மா அம்மா அம்மா
எங்க சாமி அம்மா
சும்மா சும்மா சும்மா
நீ இல்லா வாழ்க்கை சொம்மா

ஏய்...
அம்மான்னா வேற யாருடா?!
அம்மான்னா சாமிதானடா(2)

சரணம்_2
சின்னப்புள்ள பெரியபுள்ள
பாகுபாடு பார்த்ததில்ல
கண்ணுக்கள்ள பாப்பாபோல
கண்ணவிட்டு போவதில்லை

தன்னலமே இருந்திடாத
தாயைப்போல யாருமில்லை
செஞ்சதுக்கு செய்யனும்னா
என்னைக்குமே ஆவதில்லை

நல்ல தேதோ செஞ்சிருக்கோம்
உன்னிடத்தில் பிள்ளையாக..
என்ன இனி செய்யப்போறோம்
பெத்தகடன் பூர்த்தியாக...

அம்மா அம்மா அம்மா
எங்க சாமி அம்மா
சும்மா சும்மா சும்மா
நீ இல்லா வாழ்க்கை சொம்மா

ஏய்...
அம்மான்னா வேற யாருடா?!
அம்மான்னா சாமிதானடா(2)

✍️செ. இராசா

02/04/2025

வாய அடக்காம

 

வாய அடக்காம
.......வாயு புகுந்திடுச்சா?
சாய முடியாம
.......சாஞ்சாலும்- ஓயலையா?!
கொஞ்சம் பெருங்காயம்
......கூட்டிய நீரருந்தப்
பஞ்சாப் பறந்துவிடும்
......பார்!
✍️செ. இராசா

குளிரானவன் வெயிலானவன்

 

குளிரானவன் வெயிலானவன்
...குணமானவன் அவனே!
ஒளியானவன் இருளானவன்
....உணர்வானவன் அவனே!
துளிரானவன் சருகானவன்
....தொடரானவன் அவனே!
வளியானவன் வெளியானவன்
.....வழியானவன் சிவனே!
அழகானவன் அணுவானவன்
....விரிவானவன் அவனே!
கிழமானவன் இளதானவன்
...நிலையானவன் அவனே!
பழமானவன் பனியானவன்
...கணிவானவன் அவனே!
முழுதானவன் தெரியாதவன்
... அழியாதவன் சிவனே!
✍️செ. இராசா

01/04/2025

டீ..டீ...டீ சாய்...சாய்

 

டீ..டீ...டீ
சாய்...சாய்.. சாய் என்னும்
இந்தக் குரல்களின் பின்னால்தான்
எத்தனை வலிகள்?
எத்தனை வரலாறுகள்?
எத்தனை பசிகள்?
எத்தனை வியாபாரங்கள்?
எத்தனை அதிகாரங்கள்?
எத்தனை அடிமைத்தனங்கள்?
ஆம்...

யோசித்துப் பாருங்கள்?
சீனாவில் உதயமாகி
ஜப்பானில் வளர்ந்து
ஐரோப்பாவில் புகுந்து
இன்று உலகலாவிய கிளைபரப்பிய
இந்தத் தேநீர் இருக்கிறதே...
இதில் இருப்பது
தேயிலையின் சாறுமட்டுமா?
இல்லை இல்லை...
பலபேரின் இரத்தமும்தான்..

இதற்காகத்தானே
சைனாவில் ஓபியப் போர் நடந்தது?
இதற்காகத்தானே
அமெரிக்கா சுய எழுச்சி பெற்றது?

இங்கே...
உதக மண்டலம் மட்டுமா
தேயிலை மண்டலமானது?!

இலங்கை
மலேசியாவென
ஆங்கிலேயர்கள் ஆண்டதால்
சாயும் சகவாசம் கொண்டது!!
நம் நாவும் சாய்வாசம் உண்டது!

ஒரு காலத்தில்
உயர்தரப்புக்கே உரிய
ஒய்யார பானமிது...
இன்றோ
உணவில்லா தரப்பிற்கும்
உற்சாக பானமிது...

ஒரு காலத்தில்
சண்டையிட்டுப் பெற்ற
சரித்திர பானமிது..
இன்றோ
சண்டையைத் தவிர்க்கும்
சமத்துவ பானமிது..

ஆமாம்...
டீக்கடை பெஞ்ச் என்பதென்ன?
இக்கால வாட்சப் குழுபோல்
அக்கால வாயப் குழுக்கள்தானே..

இனியும்...
டீ...மாஸ்டரை
டீ மாஸ்டர்தானே என்று
எள்ளி நகைக்காதீர்
யாருக்குத் தெரியும்?
அதில் இன்னொரு மோடியும்
இருக்கலாம்....
இல்லை பில்கேட்ஷே சந்திக்கும்
சாய்வாலாவும் இருக்கலாம்..

உங்களுக்குத் தெரியுமா?

ஆளுநரின் தேநீர் விருந்தை
ஆளுங்கட்சிகள் புறக்கணிப்பது: அவர்களுக்கு
சர்க்கரைநோய் இருப்பதால் அல்ல
சர்க்காரிய மாடலால்...

பெண்வீட்டாரின் தேநீர் விருந்தை
மாப்பிள்ளை வீட்டார் ருசிப்பது: வெறும்
டீ பார்ட்டி செய்வதற்காக அல்ல
டீல் பார்ட்னர் கிடைப்பதால்...
உண்மைதான்....
தேநீரை வைத்தே
விருந்து நடந்தாலும்
இங்கே
தேநீர் இரண்டாம்பட்சமே

ஆனால்...
காசே இல்லாத வேலையில்
தேநீர்தான் முதலாம்பட்சமே..
இல்லை...
முதலாம் பட்சனமே..

ஆம்...
தேநீர்..
ஏழைகளுக்கு விருந்து
ஓட்டுநர்களுக்கு மருந்து
கவிஞர்களுக்கு அபின்
கலைஞர்களுக்கு ஒயின்
விளையாடுபவர்க்கு பூஸ்ட்
வெறுப்பவர்க்கு வேஸ்ட்

ஜென் தியானம்போல்
டீ தியானமும் பேர்போனதாம்...
இனியும்
டீயை வெறும்
டீ யென்று எண்ணாமல்
டீயோடு ஒன்றுங்கள்...

டீ... களைப்பை நீக்க மட்டுமல்ல
டீ... கரையவும்தான்....

✍️செ. இராசா