05/02/2025

கும்மிப்பாட்டு

 

கும்மிப்பாட்டு

தன்னன்ன னாதின தன்னன்ன னாதின
தன்னன்ன னாதின தன்னானே....

பிறந்தகம்

என்னத்தச் சொல்லுவோம் எப்படிச் சொல்லுவோம்
.....எல்லாமே எங்களின் நேரமுங்கோ!

அன்பையும் காட்டுவோம் ஆளவும் செய்யுவோம்
...அப்பாவின் வீட்டுல தேவதைங்கோ!

முன்னுக்க மோதுவோம் பின்னுக்கப் பேசுவோம்
.....மூத்தக்கா மேலதான் பாசமுங்கோ!

என்னைக்குக் கட்டுனோம் இவ்வூரு வந்துட்டோம்
..இப்போது கும்மியக் கொட்டுறங்கோ!
(1)

புகுந்தகம்

தூக்கத்தப் போக்குவோம் சோத்தத்தான் ஆக்குவோம்
....சோர்வில்லா நாங்களே
சிங்கமுங்கோ!

ஏக்கத்தத் தள்ளுவோம் உள்ளதில் வாழுவோம்
......எள்ளையும் எண்ணையா மாத்துவங்கோ!

நோக்கத்தை வெல்லுவோம் வாட்டத்தைக் கொல்லுவோம்
..நூலையும் சங்கிலி ஆக்குவங்கோ

ஆக்கத்தைக் காட்டுவோம் ஆனதைச் செய்யுவோம்
....ஆனாலும் ஆடிட மாட்டமுங்கோ!
(2)

வந்த நாட்டில்

பட்டங்கள் வாங்குவோம் சட்டங்கள் செய்யுவோம்
....பாதையை நாங்களேப் போடுவங்கோ!

திட்டங்கள் போடுவோம் தீர்வையும் சொல்லுவோம்
....தேவைக்குத் தக்கன செய்யுவங்கோ!

நட்டங்கள் ஆயினும் லாபங்கள் ஆயினும்
...பற்றெல்லாம் எங்களுக் கில்லையுங்கோ!

வட்டத்தில் வாழுவோம் தேவைன்னா மீறுவோம்
...வையத்தில் பொண்ணுதான் உச்சமுங்கோ!
(3)

பெண்ணினம்

பிள்ளைங்க ஏறிட ஏணியா‌‌ மாறுவோம்
...பெண்ணினம் என்றுமே தெய்வமுங்கோ!

வெள்ளம்போல் மாறியே வேகமாப் பாயுவோம்
.... விண்ணிலும் மண்ணிலும் ஆளுறங்கோ!

வில்லுக்கு வில்லென சொல்லுக்கு சொல்லென
....மின்னலைப் போலவே வந்திடுங்கோ!

உள்ளுக்குள் பொங்கிடும் உண்மையைச் சொல்லிட
.... ஊருல நாங்களே போதுமுங்கோ!
(4)

கும்மியாட்டம்

கொட்டுங்க கொட்டுங்க கும்மியக் கொட்டுங்க
கொட்டுக்குத் தக்கனக் கொட்டுங்களே...

தட்டுங்க தட்டுங்க கைகளைத் தட்டுங்க
தன்னன்ன சொல்லியேத் தட்டுங்களே...

எட்டுங்க எட்டுங்க எல்லையை எட்டுங்க
எப்போதும் தொட்டிட எட்டுங்களே...

வெட்டுங்க வெட்டுங்க கெட்டதை வெட்டுங்க
வேண்டாத கெட்டத வெட்டுங்களே...
(5)

கத்தாரில்

கத்தாரு வந்தாலும் பண்பாடு காக்குறோம்
....கைகொட்டி கும்மியக் கொட்டிடுங்கோ!

பத்தோடு நாமொன்னா எப்போதும் நிக்காம
...பாருங்க கெத்தா நிக்கிறங்கோ!

புத்தாண்டு தைப்பொங்கல் எப்போது வந்தாலும்
..போர்க்கால வேகத்தில் கூடுவங்கோ!

தித்திக்கத் தித்தித்திக நட்பெல்லாம் ஒன்றாகி
... தீம்தக்க தீம்தக்க பாடுவங்கோ!
(6)

✍️செ.இராசா 

No comments: