30/04/2025

ஒருநாளிலை ஒருநாளிலே

 

ஒருநாளிலை ஒருநாளிலே
...உயர்வாய்ப்படி என்றே
திருவாய்மொழி மொழியாகவே
...தெளிவாயுரை நன்றே...
முருகா:அருள் தருவாயென
...முறையாய்த்தொழ இன்றே
வருவானவன் தருவானவன்
....முயல்வாய்; அடி சென்றே...
✍️செ. இராசா

28/04/2025

என்ன சொல்லி என்ன ஆக

 

என்ன சொல்லி என்ன ஆக
...என்று நோக வேண்டுமா?
இன்னல் தந்த எதிரி இங்கே
...இல்லை என்றே வேண்டுமா?
இன்னும் இன்னும் இன்னும் என்றே
....என்றும் தொடர வேண்டுமா?
இன்பம் சூழ இன்னல் மாய
.....எங்கும் மாற வேண்டுமா?
✍️செ. இராசா

25/04/2025

கலை வேறு கலைஞன் வேறல்ல

 

கத்தாரில் எத்தனையோ தமிழ் அமைப்புகள் இருந்தாலும் ஒரு விடயம் மட்டும் நன்றாகப் புரிகிறது. இங்கே அமைப்பு ரீதியாக இருந்தால் மட்டுமே முறையான அழைப்பு வருகிறது. இல்லையேல் நீங்கள் என்னதான் திறமையானவர்களாக இருந்தாலும் ஒன்று ஓரங்கட்டப் படுவீர்கள் இல்லையேல் அழைப்பே வந்தாலும் நமக்கான மதிப்பை அங்கே எதிர்பார்க்க முடியாது.

கவிதை எழுதுபவனெல்லாம் கவிஞனல்ல, கவிதையாக வாழ்பவனே கவிஞன் என்ற பாரதியின் வரிகளுக்கிணங்க உண்மையை உரக்கச் சொன்னாலும் ஓரங்கட்டப்படுகிறோமோ என்கிற ஐயமும் எழாமல் இல்லை.
இருப்பினும் எம்குரல் ஒலித்துக் கொண்டேதான் இருக்கும் எப்போதும் போலவே...

இங்கே கலை வேறு கலைஞன் வேறல்ல. கலையை மதிப்பவன் கட்டாயம் கலைஞனையும் மதிப்பான். அப்படி மதியாத இடத்தில் ஒரு கலைஞன் இருந்தால் அது அவன் கலைக்குச் செய்யும் அவமதிப்பே என்பதை உணர்ந்து, சில அமைப்பு ரீதியான நிகழ்வுகளில் கலந்து கொள்வதை என்று நாம் தவிர்க்கிறோமோ அன்றே அவர்களும் திருந்துவார்கள் என்பதை நாம் உணர வேண்டும் மக்களே... இல்லையேல்....கடைசிவரைக்கும் அவர்களுக்காய்க் கைதட்டும் ஒரு அங்கத்தினராக மட்டுமே இருக்க வேண்டியதுதான்.

நன்றி!

செ. இராசமாணிக்கம்

20/04/2025

வெங்காயம்

 

சர்க்கரை இல்லாத் தேநீர் தந்தாய்
இன்னும் இனிக்கிறதே...! என்றேன்..
நல்ல நகைச்'சுவை என்கிறாய்..

வெறும் கஞ்சிதான் உள்ளதென்றாய்
தொட்டுக்க என்ன? என்றேன்..
சிரித்தபடி அருகே வந்தாய்...
என்னாச்சு என்றேன்..
இந்தா... வெங்காயம் என்கிறாய்

✍️செ. இராசா

19/04/2025

மறுமலர்ச்சி என்றகட்சி

 

மறுமலர்ச்சி என்றகட்சி
......மாநிலத்தில் கண்டு
மறுமலர்ச்சி என்றாலே
.....மாற்றமெனச் சொல்லி
மறுபடியும் மாறிநின்று
.....மாறிநின்று நன்றாய்
மறுமலர்ச்சி கண்டவர்க்கெம்
..... வாழ்த்து!

✍️செ. இராசா

மரியாதைப் பத்து --------------- குறள் வெண்பாக்கள்


கரிகூட வைரமாகும் காலத்தால் ஆனால்
கரிக்கில்லை அம்மதிப்பு காண்!
(1)

அறியார் அறியார் அரிதான தொன்றை
அறிவார் அறிஞர் அகன்று
(2)

காலத்தால் பேசாமல் காலமுற்றால் பேசுவது
ஞாலத்தின் போக்கோ நவில்
(3)

மதிக்கின்ற பேரை மதிக்கின்ற மாண்பே
மதிப்பாகும் என்றும் மதி
(4)

மதியாதார் கூட மதித்திட வேண்டின்
மதிப்போடு நிற்பாய் வளர்ந்து
(5)

இகழ்ந்தின்று பார்க்கும் இளந்தாரி கூட்டம்
புகழ்ந்திட வைப்பாய்ப் புரிந்து!
(6)

வாய்ப்பு வருமென்று நாட்களைப் போக்காமல்
வாய்ப்பை உருவாக்கி வா
(7)

முயற்சித்த பின்னுமா முன்னேற்றம் இல்லை?
வியப்பில்லை எல்லாம் வினை
(8)



கற்கண்டும் கல்லும் கழுதைக்குக் கல்லே
அற்பர்க்கும் அஃதே அறி!
(9)

மதியாரை எண்ணி மனம்நோகும் காலம்
மதிப்பாகா தென்றே மற!
(10)

✍️செ.‌இராசா

15/04/2025

தனக்கென நினைப்பவர் தரித்திடும் எல்லை!

 

தனக்கென நினைப்பவர்
...தரித்திடும் எல்லை!
மனம்நிறை வடைந்தவர்
...மனத்தினில் இல்லை!
எனக்கென இனியெனில்
....இடர்வரும் தொல்லை!
நினைந்திட அவர்க்கது
.....நிலைப்பது.. இல்லை!
பணம்பணம் பணமென
.....பதறிடும் தொல்லை
கணம்கணம் கணங்களைக்
....கடப்பவர்க் கில்லை
சுணங்கிட வைக்கிறச்
.....சூழலின் தொல்லை
குணம்குறை கடந்தவர்
.....குடிகளில் இல்லை!

அத்தனைக் குளிரையும் அடக்கிவிடுகிறாய்

 


அத்தனைக் குளிரையும்
அடக்கிவிடுகிறாய்
ஒற்றைக் குவளைக்குள்...

✍️செ.‌ இராசா


14/04/2025

இனிய புத்தாண்டு நல்வாழ்த்துகள்

 

தித்திக்கும் செந்தமிழால்
.......சிந்தை மலர்ந்திடவே
எத்திக்கும் சென்றடைவீர்
.......ஏற்றமுற - முத்தமிழ்போல்
இத்தரையில் நீங்காமல்
......எப்போதும் வாழ்ந்திடவே
சித்திரையில் வாழ்த்துகிறேன்
.......சேர்ந்து!
✍️செ. இராசா
இனிய புத்தாண்டு நல்வாழ்த்துகள்!!!
வாழ்க வளமுடன்!

10/04/2025

பிறந்தநாள் வாழ்த்துகள் தம்பி

 

மெய்ஞானம் பெற்றிங்கே
....மேன்மேலும் வாழ்ந்திடவே
பொய்மாயை இல்லாமல்
....போகட்டும்- மெய்யருளால்
சுற்றத்தார் சூழ
....சுகம்பல கூடியிங்கே
நற்றமிழ்போல் வாழயெம்
.....வாழ்த்து!
✍️செ. இராசா
🎉இனிய மனமார்ந்த பிறந்தநாள் வாழ்த்துகள் தம்பி

09/04/2025

கவலை- பற்றிக் கவியெழுத முனைந்தேன்.

 

கவலை- பற்றிக்
கவியெழுத முனைந்தேன்...
ச்செ....
கவிதையே வரவில்லை
கவலைதான் வந்தது!
ச்சும்மா...எழுத ஆரம்பித்தேன்
கவலை பறந்தது...
கவிதை பிறந்தது...
இதோ..
✍️செ. இராசா

08/04/2025

இன்றைய தினம் என் மகனுக்கு

 


இன்றைய தினம் என் மகனுக்கு ஒரு முக்கியமான அற்புதமான நூலைப் பரிசளித்தேன். கண்டிப்பாக இந்த நூல் உன் வாழ்க்கையை மாற்றும் நூல் என்றும், இது நான் உனக்கு உன் வாழ்க்கைக்குத் தரும் மிக முக்கியமான பொக்கிஷம் என்றும் கருத வேண்டுமென்று கூறி வழங்கினேன்.
அவனும் ஆர்வத்தோடு வாங்கிப் படித்தது மட்டுமன்றி அவர் அம்மாவிற்கும் ஒவ்வொரு வரியாக மொழிபெயர்ப்பு செய்ததுகண்டு மிகவும் மனமகிழ்ச்சி அடைகிறேன்.

கண்டிப்பாகத் தமிழில் திருக்குறள் உட்பட எவ்வளவோ நல்ல நூல்கள் இருந்தாலும் அவரவர் வழியில் சென்றே புத்தக விருப்பத்தை ஏற்படுத்த வேண்டும் என்பதால் நான் மிகவும் விரும்பும் ராபின் சர்மா எழுதிய Who will cry when you die? என்ற அற்புதமான நூலைக் கொடுத்து படிக்க வைக்கும் முயற்சியில் வெற்றிபெற்றதாகவே உணர்கிறேன்.

பசங்க....பாடப் புத்தகத்தைத் தாண்டி படிக்க வேண்டும். அதுவும் வெளி உலகத்தை வாழ்க்கையைப் படிக்க வேண்டும். இந்தப் பட்டயப் படிப்பெல்லாம் வெறும் பணம் சம்பாதிக்க மட்டுமே. இலக்கியத் தேடல் கொண்ட படிப்பே வாழ்வை ருசிக்க வைக்கும், அதுவே சக மனிதனின் உணர்வுகளைத் தெளிவாகக் கடத்தும், அதுவே உற்ற தோழனாகக் கடைசிவரை வழிநடத்தும். அதுவே உண்மையான படிப்பு என்று ஆணித்தரமாக நம்புபவன் நான். அதை இந்தப் பசங்களுக்குப் புரிய வைக்க உண்மையில் எவ்வளவு பாடுபட வேண்டியிருக்கிறது. இருப்பினும் தொடங்குவோம்....நம்மில் இருந்தே...

✍️செ. இராசா

#robinsharma
#robinsharmaquotes
#robinsharmabook
#ineshraja
#Rajamanickam 

07/04/2025

பனமட்ட நண்பர் திரு. ராஜா அவர்களுக்காக

 

இருப்பதை வைத்தே
.....இனிதாய்ப் படைத்துத்
தருகின்ற யாவும்
......தரமாய்த்- தரும்நீங்கள்
பல்லாண்டு பல்லாண்டு
......பார்புகழப் பல்லாண்டு
நல்லபடி வாழயெம்
......வாழ்த்து!

பற்கள் இருந்தாலும்

 

ற்கள் இருந்தாலும்
பதம் பார்ப்பதில்லை....

அழுத்தி உழுதாலும்
தடம் காண்பதில்லை...

வகுப்பு எடுத்தாலும்
இரம்பம் போடுவதில்லை...

எப்படி சீவினாலும்
துண்டாக்குவதில்லை....

ஆனால்...

பற்கள் போனால்தான்
மதிப்பை இழக்கிறது
இந்தச் சீப்பு!

06/04/2025

கண்ணைக் காக்கும் இமைபோல

 

கண்ணைக் காக்கும் இமைபோல
.....கனியைத் தாங்கும் மரம்போல
மண்ணில் மாறும் நீர்போல
.....மலரால் வீசும் மணம்போல
விண்ணில் மின்னும் மீன்போல
.....விடிந்தால் தோன்றும் கதிர்போல
பெண்ணின் பெருமை காப்பீரே
.....பெரும்புகழ் பெற்று வாழ்வீரே!
✍️செ. இராசா

05/04/2025

நீ இருந்தால்

 

நீ இருந்தால்
இல்லையென்று எதுவும் இல்லை.‌...
நீ இல்லாதிருந்தால்
எல்லாம் இருந்தும் எதுவும் இல்லை.‌....✍️

03/04/2025

அன்பைத்தர என்றும் முனைபவன்

 

அன்பைத்தர என்றும் முனைபவன்
....அம்மன்வரம் என்றே நினைப்பவன்
........அன்னைத்தமிழ் ஒன்றால் வளர்பவன் தெரிவானோ?!
சென்னைத்தமிழ் கற்றே வருபவன்
..செம்மண்வள மண்ணில் பிறந்தவன்
.....சென்றானுயர் என்றே வியந்திட வருவோனோ?!
இன்னல்தரும் நட்பைக் கடந்தவன்
....எங்கும்பலர் காணத் தெளிந்தவன்
......இன்னும்ஒளி கிட்டா திருப்பது சரிதானோ?!
தன்னுள்தனை நன்றாய் அறிந்தவன்
....தம்மைத்தர என்றும் துணிந்தவன்
......தன்மெய்ப்புகழ் எங்கும் தெரிந்திட அருள்வாயோ?!
✍️செ. இராசா

கண்ணு முன்னே நிக்கும் சாமி

 

பல்லவி
கண்ணு முன்னே நிக்கும் சாமி
தாயப்போல உண்டா காமி
அன்பை அள்ளித் தந்த சாமிடா...

அன்னம் ஊட்டி வளர்த்த சாமி
அம்மாபோல எங்க காமி?
உன்னை என்னை பெத்த சாமிடா...

அம்மா அம்மா அம்மா
எங்க சாமி அம்மா
சும்மா சும்மா சும்மா
நீ இல்லா வாழ்க்கை சொம்மா

ஏய்...
அம்மான்னா வேற யாருடா?!
அம்மான்னா சாமிதானடா(2)

சரணம்_1
தப்புசெஞ்சு வந்தபோதும்
தயவுகாட்டும் தாயைப்போல
எத்தனையோ சொந்தமிருந்தும்
என்னைக்குமே ஈடே இல்லை...

ஊரைச்சுத்தி வந்தபோதும்
ஒட்டிப்போன வயிரப்பார்த்தா
அச்சச்சோன்னு பதறிப்போகும்
அம்மாபோல பந்தம் இல்லை...

என்ன தவம் செஞ்சுப்புட்டோம்
உன்னிடத்தில் பிள்ளையாக..
என்ன இனி செய்யப்போறோம்
பெத்தகடன் பூர்த்தியாக...

அம்மா அம்மா அம்மா
எங்க சாமி அம்மா
சும்மா சும்மா சும்மா
நீ இல்லா வாழ்க்கை சொம்மா

ஏய்...
அம்மான்னா வேற யாருடா?!
அம்மான்னா சாமிதானடா(2)

சரணம்_2
சின்னப்புள்ள பெரியபுள்ள
பாகுபாடு பார்த்ததில்ல
கண்ணுக்கள்ள பாப்பாபோல
கண்ணவிட்டு போவதில்லை

தன்னலமே இருந்திடாத
தாயைப்போல யாருமில்லை
செஞ்சதுக்கு செய்யனும்னா
என்னைக்குமே ஆவதில்லை

நல்ல தேதோ செஞ்சிருக்கோம்
உன்னிடத்தில் பிள்ளையாக..
என்ன இனி செய்யப்போறோம்
பெத்தகடன் பூர்த்தியாக...

அம்மா அம்மா அம்மா
எங்க சாமி அம்மா
சும்மா சும்மா சும்மா
நீ இல்லா வாழ்க்கை சொம்மா

ஏய்...
அம்மான்னா வேற யாருடா?!
அம்மான்னா சாமிதானடா(2)

✍️செ. இராசா