30/04/2024

இலக்கு நோக்கிப் போகையில....

இலக்கு நோக்கிப் போகையில
இழப்பு ரொம்ப இருக்குது- ஆனால்
இறுதிவரைப் போகும் போதே
இறைவன் மகிமைப் புரியுது

கடனவுடன வாங்கி வாங்கி
வாழும் வாழ்க்கை எதுக்குங்க?
கடமைகள உதறி ஒதுங்கி
வாழ்ந்து என்ன இலாபங்க?

ஒரேவீட்டில் வாழும் போதும்
உறவில் எதுக்கு பிணக்குங்க?
ஒரேமண்ணில் வீழும் போது
வருவ தென்ன சொல்லுங்க?

✍️செ. இராசா

29/04/2024

பொண்டாட்டி வெண்பாக்கள்



கேள்வி
பொண்டாட்டி போன்செஞ்சா பொய்பொய்யாச் சொல்றீரே
உண்மையில்நீர் ஆம்பளையா ஓய்!
(1)
 

பதில்கள்
கல்யாணம் பண்ணாம கண்டபடி பேசாதே
சொல்லிப் புரியாது சூடு!
(2)

என்னங்க என்றவுடன்..என்னடி என்றழைத்தால்
என்னகுரல் மாறுதென்பாள் இங்கு!
(3)

என்னங்க என்றாலும் இம்மென நின்றாலோ
என்னசரக் கென்பாள் இடித்து!
(4)

நின்னாலும் குத்தம்பாள் நேருக்கு நேர்நின்று
சொன்னாலும் குத்தம்பாள் சூழ்ந்து!
(5)

எப்போதோ சொன்னதை இப்போதும் சொல்லிடுவா
எப்போதும் சொல்லிடுவா இங்கு!
(6)

எவ்வளவு செஞ்சாலும் என்னத்த செஞ்சேம்பாள்
அவ்வளவே வாழ்க்கை அறி!
(7)

வாழ்க்கையே போச்சும்பாள்... வாய்கிழிய பேசிடுவாள்
தாழ்ந்துதான் போவீர் தனித்து!
(8)

ஊரே வியந்தாலும் உன்பேச்சக் கேட்காமல்
நேரே மொழிந்திடுவாள் நின்று!
(9)
 

தீர்வு
ஆனாலும் தப்பில்லை அப்படித்தான் இல்வாழ்க்கை
தேனாகும் பின்நாளில் சேர்ந்து!
(10)

✍️செ. இராசா

25/04/2024

எந்தன் தேவதையே.......

பல்லவி
எந்தன் தேவதையே- என்
நெஞ்சில் தீமலையே
கொஞ்சம் பாரெனையே- அடி
கொட்டும் மாமழையே..

காதல் தீயைப் பற்றவிட்டு
காட்சிப் பிழையென சொல்வாயோ?!
மாயை நோயில் சிக்கவைத்து
மருந்தைப் பூட்டி வைப்பாயோ?

என்ன இது...என்ன இது?
எண்ணமெல்லாம் உன் நினைவே...
வந்து விடு...வந்து விடு..
மின்னிடலாம் வா(ன்) நிலவே....


சரணம்
மனதை வாட்டும் மாலையே
காதல் உந்தன் தோழியா?!
உயிரை நீக்கும் காலனே?
நீயும் கூட நண்பனா?!

தானே நானே புலம்புறேன்
எனக்கு ஒன்னும் புரியலை
தேடி தேடித் திரியிறேன்
உனக்கு மட்டும் தெரியலை

காதல் படுத்துற பாடிருக்கே- ஐயோ
கானல் நீருக்குள்ள மீனைப்போல..
காதல் கொடுக்குற பாட்டிருக்கே- அது
நாளும் நிக்குமந்த வானைப்போல...

வந்துவிடு பெண்ணே வந்துவிடு
தந்துவிடு உன்னைத் தந்துவிடு
உன்னோடு நானாக
என்னோடு நீயாக ஒன்றிப் போகலாம்......

✍️செ. இராசா

24/04/2024

கஞ்சி -3



 


பழைய கஞ்சிதான்
அதிகமாய் இருக்கிறது
விலை
(1)
 
கெஞ்சியன்று கேட்டாலும் கேட்காத நாமதான்
கஞ்சிதிங்க தாரோம்பார் காசு!
(2)
 
உணவாயினும் மருந்தாகவே
.....உருவாக்கியே உண்டோம்!
மணம்யாவிலும் விருந்தாகவே
......வகைகூட்டியே தந்தோம்!
பணம்தேடியே பலகாலமாய்
........பலவூர்பல சென்றே
கணம்யாவிலும் நினைவாலினி
.......கதைத்தேஉண வுண்போம்!
(3)
 
✍️செ. இராசா

22/04/2024

பிறப்பிலே தாழ்ந்தவர் எவருமே இல்லை

 பிறப்பிலே தாழ்ந்தவர்
.....எவருமே இல்லை!
இறப்பினை வென்றவர்
.....இதுவரை இல்லை!
உறவினர் யாவரும்
.....உதவுதல் இல்லை
உறவுபோல் நட்புகள்
....உதறுவ தில்லை!

கடவுளைக் கண்டவர்
....கதைப்பதே இல்லை!
கடவுளை மறுப்பவர்
....கதைப்பது தொல்லை!
கடமையைச் செய்பவர்
....கலங்குவ தில்லை!
கடமையைத் தவிர்ப்பவர்
....கணக்கிடப் பிள்ளை!

✍️செ. இராசா

19/04/2024

மன்னிப்பு வெண்பாக்கள்

பிறர்செய்த குற்றம் பெருந்துயர் தந்தால்
மறத்தல்தான் மாற்று(ம்) மருந்து!
(1)

அறியாப் பிழைபொறுத்த ஆண்டவரை எண்ணி
அறியார் பிழைபொறுப்பீர் ஆய்ந்து!
(2)

தூக்கிச் சுமப்பதினால் துன்பம் விளையுமெனில்
தூக்கி எறிதல் சுகம்!
(3)

மன்னிக்கும் போதெல்லாம் மாமனிதர் ஆவதினால்
மன்னிக்கக் கற்பீர் மகிழ்ந்து!
(4)

பொறுமையின் எல்லையாய் போட்டதார் கோடு?
பொறுத்தார்க்கே கிட்டும் புகழ்
(5)

சினத்தோடு கொட்டும் சிலபல சொற்கள்
மனதிற்குள் சென்றால் வடு
(6)

சினமும் கவலையும் சிக்கலைக் கூட்டி
மனிதநிலை தாழ்த்தும் வலிந்து
(7)

வினைப்பதிவு போனதென்று விட்டுவிட்டு வந்தால்
அனைத்தையும் பார்ப்பான் அவன்
(8)

என்ன முயன்றும் இயலவில்லை என்றானால்
நெஞ்சார வாழ்த்துங்கள் நேர்ந்து!
(9)

சட்டத்தை முன்வைத்து தண்டனை தந்தாலும்
இட்டமுடன் மன்னிப்பீர் ஏற்று!
(10)

✍️செ. இராசா


18/04/2024

அடிக்கும் பறையொலி

 


அடிக்கும் பறையொலி
துடிக்கும் துடும்பொலி
வெடிக்கும் விசிலொலி கேளு- நீ
வெடிக்கும் விசிலொலி கேளு- ஏய்

அரங்கமே அதிருது பாரு- நாம்
அடிச்சது புது வரலாறு- இந்த
அகிலமே அசருது பாரு- நாம்
படைச்சது புது வரலாறு...

✍️செ. இராசா

10/04/2024

பிறந்தநாள் வாழ்த்துகள்

 


மெய்ஞானம் பெற்றிங்கே
....மேன்மேலும் வாழ்ந்திடவும்
பொய்மாயை இல்லாமல்
....போகட்டும்- மெய்யருளால்
சுற்றத்தார் சூழ
....சுகம்பல கூடியிங்கே
நற்றமிழ்போல் வாழயெம்
.....வாழ்த்து!
 
✍️செ. இராசா
 
இனிய மனமார்ந்த பிறந்தநாள் வாழ்த்துகள் தம்பி 🎉

09/04/2024

மன்னிப்பு

அஃறிணைக்குத் திரும்பாமல்
உயர்திணைக்கே உயர்த்தும்
ஏணிப்படி..

சினத்தால் சிதையாமல்
சிரிப்பால் ஆற்றிவிடும்
மருந்து..‌

கவலையெனப் பதறாமல்
கழிந்ததென அமைதிதரும்
கழிவு..

வஞ்சத்தை வளரவிடாமல்
நஞ்சென அறுத்தெறியும்
கத்தி..

சிலுவையில் அறைந்தாலும்
பாவிகளுக்காய் வருந்தும்
கடவுள்..

ஆம்...
மன்னித்துப்பார்
நீயும் கடவுளாவாய்....!!!

✍️செ. இராசா

06/04/2024

காத்திருந்து கச்சிதமாய்

 


 

காத்திருந்து கச்சிதமாய்க்
......கவ்வுகின்ற கொக்கைப்போல்
நேர்த்தியுடன் காத்திருந்தால்
......வெற்றிபெறல்- சாத்தியமே
எண்ணுகின்ற எண்ணம்போல்
......எல்லாமும் கிட்டுவதால்
திண்ணமுடன் ஒன்றியதைத்
......தேடு

✍️செ. இராசா

05/04/2024

பதறுது பதறுது மனசு

 பல்லவி
பதறுது பதறுது மனசு.....இந்தப்
பனியிலும் எரியுது உசுரு...
கதறுது கதறுது இரவு‌....எந்தன்
கனவிலும் கதறுது உலகு..
.....இதுயென்ன மாயை
.....யார்செய்யும் வேலை
.....தெரியலை தெரியலை எனக்கு!
.....புதுவித போதை.
.....போகின்ற பாதை
.....புரியலை புரியலை கணக்கு!

பதறுது பதறுது மனசு.....இந்தப்
பனியிலும் எரியுது உசுரு...
கதறுது கதறுது இரவு‌....எந்தன்
கனவிலும் கதறுது உலகு..
 

சரணம்-1
மனிதர்கள் மட்டும் வாழ்ந்திடவா
புவியினை இறைவன் படைத்துள்ளான்...
மிருகமும் பறவையும் அழிந்திடவா
மனிதனுள் சுயநலம் விதைத்துள்ளான்...

இயற்கையின் சங்கிலி உடைந்திடும் என்றால் எப்படி உலகம் மீண்டிடுமோ?
முயற்சியின் பாதையில் தடைவரும்
என்றால் எப்படி இதயம் தாங்கிடுமோ?

பதறுது பதறுது மனசு.....இந்தப்
பனியிலும் எரியுது உசுரு...
கதறுது கதறுது இரவு‌....எந்தன்
கனவிலும் கதறுது உலகு..
 

சரணம்_2
தக்கனப் பிழைக்கும் தத்துவமே
டார்வினின் தியரி என்கின்றார்!
இக்கணம் இருக்கும் உயிரினத்தை
இவர்களே இன்னும் அழிக்கின்றார்!

காட்டினுள் கட்டிடம் புகுந்திடும் என்றால்
மிருகங்கள் எப்படி வாழ்ந்திடுமோ?
ஏட்டினில் சோறென எழுதுவோம்
என்றால்
பசிப்பிணி இங்கே பறந்திடுமோ?

பதறுது பதறுது மனசு.....இந்தப்
பனியிலும் எரியுது உசுரு...
கதறுது கதறுது இரவு‌....எந்தன்
கனவிலும் கதறுது உலகு..

✍️செ. இராசா

திருமாவளவன் பாடல்

பல்லவி
பாதையை வகுத்தவரு
திருமா அண்ணன் பண்புல ஜெயிச்சவரு!
சாதனை படைச்சவரு
திருமா அண்ணன் சமத்துவம் விதைச்சவரு!

அனைவரும் சரிசமங்க
உண்மை இதை;
உலகமே உணரணுங்க...
உரிமைக்குக் குரல்கொடுங்க
ஒற்றுமையில்;
வெல்வது சுலபமுங்க...
 

சரணம்-1
அண்ணன் ஏதும் கேட்டா; ஆளும்
அரசும் மதிப்பு கொடுக்கும்..
உண்மை மாத்தி சொன்னா; அண்ணன்
மீசை முறுக்கில் அடங்கும்..

அடிமைத் தளையை ஒட்ட
அறுக்க நினைக்கும் எங்க
திருமா அண்ணன் வாழ்க!
பொறுமைக் கலையைக் கற்ற
போதி தர்மன் எங்கள்
அரிமா இவரு தாங்க!

நம்ம அண்ணல் போட்ட பாதை
அது அண்ணன் போகும் பாதை (2)
 

சரணம்-2
கல்விப் புரட்சி செய்ய: நல்ல
திட்டம் இங்கே வேணும்
நல்ல வழியைக் காட்ட; நாமும்
மேல ஏறி வரணும்...(2)

தமிழை ஒதுக்க எண்ணி
வினைகள் புரிய எண்ணும்
கூட்டம் ஒடுங்க வேணும்!
நிமிர்ந்த நடையில் நின்று
நினைவில் தெளிவு கொண்டு
வென்று காட்ட வேணும்

நம்ம அண்ணல் போட்ட பாதை
அது அண்ணன் போகும் பாதை (2)

✍️செ. இராசா

04/04/2024

HAIKU-5

 

கட்டிட உயரம்
கூடிக்கொண்டே போகிறது
நெருக்கடி
(1)
 
குழும எண்ணிக்கை
கூடிக்கொண்டே போகிறது
பிணக்கு
(2)
 
கவியரங்க மேடை
கூடிக்கொண்டே போகிறது
இரைச்சல்
(3)
 
அரசியல் மேடை
கூடிக்கொண்டே போகிறது
அநாகரிகம்
(4)
 
தேர்தல் பிரச்சாரம்
கூடிக்கொண்டே போகிறது
செலவு
(5)
 
✍️செ. இராசா

02/04/2024

12TH FAIL

 



என்ன இது?
எதிர்மறைத் தலைப்பு
இப்படித்தான் யோசித்தேன்
இப்படம் பார்க்கும்முன்...
பார்த்தவுடன்தான் தெரிந்தது
இது வெறும் படமல்ல; பாடமென்று!

ஆம்..‌

DSP தேர்வுக்கும்
IPS தேர்வுக்குமே வேறுபாடு தெரியாத
ஓர் குக்கிராமத்து இளைஞன்
அதுவும் 12 ஆம் வகுப்பில்
ஒருமுறை தோல்வியடைந்த ஒருவன்
எப்படி டெல்லி வரை சென்று
IPS ஆகிறான் என்பதே கதை!

நீண்ட நாட்களுக்குப்பிறகு
நான் பார்த்த படங்களிலிலேயே
மிகவும் உருக்கமான படமென்றால்
நிச்சயமாக இதைத்தான் சொல்வேன்!

காரணம்..
படம் பார்ப்பவர்களும்
படத்தில் உள்ளவர்களும்
ஒன்றுதோனா எனத்தோன்றும் உணர்வை இப்படம் ஏற்படுத்தியதால்;

இப்படத்தில் எத்தனையோ காட்சிகள்
உயிரை உலுக்குகின்றன..
உதாரணமாக;

நேர்மைக்கு மதிப்பில்லையோ என
நொந்து நூடுல்ஸாகும் தந்தையை
தேற்றும் தமையனின் காட்சி...

கதவைச் சாத்திவிட்டு
பணத்தைக் கொடுத்தனுப்பும்
அந்த அப்பத்தாவின் காட்சி...

ஊரைவிட்டு ஊர்வந்து
பையைத் தொலைத்துவிட்டு
பரிதவிக்கும் காட்சி...

தன்மானத்திற்கும் பசிக்கும்
இடையில் போராடி
பசியே வெல்கின்ற காட்சி...

பரமபத அட்டையை வைத்து
IPS தேர்வு முறையை
அதிஅற்புதமாக விளக்கும் காட்சி

திரும்பி வந்த மகனுக்கு
தலையில் எண்ணெய் தேய்த்தவாறே
மாடுவித்த கதையை
மாற்றிப்பேசும் அம்மாவின் காட்சி..

தேர்வில் தோல்வியடைந்த வலியில்
தன்னைப்பற்றி கேட்காமல்
தன் காதலியைப்பற்றிக் கேட்ட
நண்பனைக் கேவலப்படுத்தும் காட்சி...

பொந்துபோன்ற அறையில்
மாவறைக்கும் வேலையும் பார்த்து
அதற்குள்ளேயே படிக்கும் காட்சி...

நேர்முகத் தேர்வில்
12ஆம் வகுப்புத் தோல்விபற்றி
மறைக்காமல் கூறுவதால்
அதனால் நேருகின்ற காட்சி...

இப்படி ஒவ்வொரு காட்சியாக விரிந்து
இது உண்மைக் கதையென்று
அனைவரையும் காட்டுகிற காட்சியை
என்னவென்று சொல்வேன்?!
ஆகா...ஆகா..
அதை அனுபவியுங்கள்
உங்களுக்கேப் புரியும்‌.

இதுபோல்
கதையம்சம் உள்ள படங்கள்
தமிழிலும் வரவேண்டும்‌தான்
என்ன செய்வது?!
இங்கே நாம எடுத்தா ஓடனுமே...?!!

✍️செ. இராசா

திரு. OPS ஐயாவிற்கான பிரச்சாரப் பாடல்


பல்லவி
தென்நாட்டுப் பெருமைகாக்கும்
தன்மானத் தமிழருங்க
அம்மாவின் ஆசிபெற்ற
உண்மையான தலைவருங்க...
அன்பால ஆட்சிசெஞ்ச
மக்களோட முதல்வருங்க..
நம்நாட்டுப் பெருமைகாக்க
நாமவோட்டுப் போடனுங்க...

உரிமைக்குக் குரல்கொடுக்கும் தலைவரு- ஐயா
ஓபிஎஸ்ஸூ ஜல்லிக்கட்டு நாயகரு!

யாரு யாரு யாரு இங்கே ஜெயிக்கிறது யாரு...
வேற யாரு நம்ம ஐயா
ஓபிஎஸு பாரு...

யாரு யாரு யாரு சின்னம் ஜெயிக்குமுனு கூறு...
தாறு மாறு வெற்றிதரும்
பலாப்பழம் பாரு..

உங்கள் சின்னம் பலாப்பழம்
எங்கள் சின்னம் பலாப்பழம்
வெல்லும் சின்னம் பலாப்பழம்
நமது சின்னம் பலாப்பழம்

சரணம்-1
பாரதப் பிரதமரின் பாசமான நட்பவச்சு
பாலையா இருக்குமிந்த மண்ணைமீட்க வாராரு

மீனவ உறவுகளின் வேதனையப் புரியவச்சு
நேசக் கரங்கொடுக்க பன்னீரய்யா வாராரு

சூழ்ச்சி வலைபின்னி சூதுகவ்வி இருந்தாலும்
வீழ்ச்சி அடையாம வீறுகொண்டு வாராரு

அம்மா மனசுபோல ஆட்சியில இருந்தபோதும்
அன்பால் அரவணைச்ச பன்னீரய்யா
வாராரு ...

யாரு யாரு யாரு இங்கே ஜெயிக்கிறது யாரு...
வேற யாரு நம்ம ஐயா
ஓபிஎஸு பாரு...

யாரு யாரு யாரு சின்னம் ஜெயிக்குமுனு கூறு...
தாறு மாறு வெற்றிதரும்
பலாப்பழம் பாரு..

உங்கள் சின்னம் பலாப்பழம்
எங்கள் சின்னம் பலாப்பழம்
வெல்லும் சின்னம் பலாப்பழம்
நமது சின்னம் பலாப்பழம்...
 

சரணம்-2
தாரை வார்த்துதந்த தமிழ்நாட்டின் கட்சத்தீவ
தானைத் தலைவர் தானே மீட்டெடுக்கப் போராரு ...

தண்ணீர் பிரச்சினைய சுத்தமாகத் தீர்த்துவைக்க
தங்கத் தலைவர் இங்கே எழுச்சி கொண்டு வாராரு ...

தொகுதி முழுவதுமே சுற்றிவரும்
தலைவரோட
தகுதி அறியாம ஒதுக்கிவச்ச எதிரிகளை
...
கொட்டம் அடங்கும்படி கூறுகின்ற தேர்தலுல
நட்டம் நமக்கில்லை நடக்குறதப் பாருங்க...

யாரு யாரு யாரு இங்கே ஜெயிக்கிறது யாரு...
வேற யாரு நம்ம ஐயா
ஓபிஎஸு பாரு...

யாரு யாரு யாரு சின்னம் ஜெயிக்குமுனு கூறு...
தாறு மாறு வெற்றிதரும்
பலாப்பழம் பாரு..

உங்கள் சின்னம் பலாப்பழம்
எங்கள் சின்னம் பலாப்பழம்
வெல்லும் சின்னம் பலாப்பழம்
நமது சின்னம் பலாப்பழம்...

01/04/2024

Who will cry when you die?----இறக்கையில் யாரழுவார்


 

இறக்கையில் யாரழுவார்
.....என்கின்ற நூலை
இறக்கும்முன் வாசியுங்கள்
.....என்பேன்- மறவாதீர்!
ஆங்கிலநூல் ஆனாலும்
.....ஐநூறில் பாதிதான்
வாங்குங்கள் கட்டாயம்
.....வந்து!

✍️செ. இராசா
நூல்: Who will cry when you die? 

ஆசிரியர்: Robinsharma 

விலை: #235