02/04/2024

12TH FAIL

 



என்ன இது?
எதிர்மறைத் தலைப்பு
இப்படித்தான் யோசித்தேன்
இப்படம் பார்க்கும்முன்...
பார்த்தவுடன்தான் தெரிந்தது
இது வெறும் படமல்ல; பாடமென்று!

ஆம்..‌

DSP தேர்வுக்கும்
IPS தேர்வுக்குமே வேறுபாடு தெரியாத
ஓர் குக்கிராமத்து இளைஞன்
அதுவும் 12 ஆம் வகுப்பில்
ஒருமுறை தோல்வியடைந்த ஒருவன்
எப்படி டெல்லி வரை சென்று
IPS ஆகிறான் என்பதே கதை!

நீண்ட நாட்களுக்குப்பிறகு
நான் பார்த்த படங்களிலிலேயே
மிகவும் உருக்கமான படமென்றால்
நிச்சயமாக இதைத்தான் சொல்வேன்!

காரணம்..
படம் பார்ப்பவர்களும்
படத்தில் உள்ளவர்களும்
ஒன்றுதோனா எனத்தோன்றும் உணர்வை இப்படம் ஏற்படுத்தியதால்;

இப்படத்தில் எத்தனையோ காட்சிகள்
உயிரை உலுக்குகின்றன..
உதாரணமாக;

நேர்மைக்கு மதிப்பில்லையோ என
நொந்து நூடுல்ஸாகும் தந்தையை
தேற்றும் தமையனின் காட்சி...

கதவைச் சாத்திவிட்டு
பணத்தைக் கொடுத்தனுப்பும்
அந்த அப்பத்தாவின் காட்சி...

ஊரைவிட்டு ஊர்வந்து
பையைத் தொலைத்துவிட்டு
பரிதவிக்கும் காட்சி...

தன்மானத்திற்கும் பசிக்கும்
இடையில் போராடி
பசியே வெல்கின்ற காட்சி...

பரமபத அட்டையை வைத்து
IPS தேர்வு முறையை
அதிஅற்புதமாக விளக்கும் காட்சி

திரும்பி வந்த மகனுக்கு
தலையில் எண்ணெய் தேய்த்தவாறே
மாடுவித்த கதையை
மாற்றிப்பேசும் அம்மாவின் காட்சி..

தேர்வில் தோல்வியடைந்த வலியில்
தன்னைப்பற்றி கேட்காமல்
தன் காதலியைப்பற்றிக் கேட்ட
நண்பனைக் கேவலப்படுத்தும் காட்சி...

பொந்துபோன்ற அறையில்
மாவறைக்கும் வேலையும் பார்த்து
அதற்குள்ளேயே படிக்கும் காட்சி...

நேர்முகத் தேர்வில்
12ஆம் வகுப்புத் தோல்விபற்றி
மறைக்காமல் கூறுவதால்
அதனால் நேருகின்ற காட்சி...

இப்படி ஒவ்வொரு காட்சியாக விரிந்து
இது உண்மைக் கதையென்று
அனைவரையும் காட்டுகிற காட்சியை
என்னவென்று சொல்வேன்?!
ஆகா...ஆகா..
அதை அனுபவியுங்கள்
உங்களுக்கேப் புரியும்‌.

இதுபோல்
கதையம்சம் உள்ள படங்கள்
தமிழிலும் வரவேண்டும்‌தான்
என்ன செய்வது?!
இங்கே நாம எடுத்தா ஓடனுமே...?!!

✍️செ. இராசா

No comments: