15/09/2020

கர்நாடக இசை-2

 அன்புள்ளம் கொண்ட அனைவருக்கும் வணக்கம்,

இது"#கர்நாடக_இசை" பற்றிய எனது பார்வையிலான கட்டுரையின் தொடர்ச்சியாகும்.

நாம் போன கட்டுரையில், சுருதி(pitch) மற்றும் தாளம் (Rhythm) பற்றி பார்த்தோம்.
சுருதியிலிருந்து ஸ்வரமும் (சரிகமபதநி), ஸ்வரத்திலிருந்து இராகமும் (பாடல்) உண்டாகிறது சரி, இந்த சுருதி எங்கே இருந்து உருவாகின்றது என்பதை இக்கட்டுரையில் பார்ப்போம்.

சுருதி நாதத்தில் இருந்து உருவாகிறது. நாதம் என்றால் வேறு ஒன்றுமில்லை நம் வாயைத்திறந்தால் வரும் ஒலி. அ..ஆ... இவைகள். நாதமின்றி எந்த இசையும் இல்லை. அதை மனதில் வைத்தே நம் வள்ளுவரய்யாவும் அகரமின்றி எம்மொழியும் இல்லை என்கின்றார். வாயைத் திறந்தாலே வரும் அ என்ற ஓசையை அப்படி இப்படி மாற்றித்தான் அத்தனை எழுத்துக்களையும் பிறப்பிக்கின்றோம். ஆகவே தான் எழுத்துக்களின் மூலம் அகரம் என்கின்றார் வள்ளுவர். இங்கே...அதுவேதான் நாதமும் என்பதை நாம் உணரலாம்.

சரி நாதம் என்றால் அதுமட்டும் தானா?! இந்த நாதத்தை மேலும் இரண்டாகப் பிரிக்கின்றார்கள்‌.
1. ஆகத நாதம்.
2. அனாகத நாதம்.

ஆகத நாதம் என்றால் உயிரினங்கள் நேரடியாக எழுப்பும் ஒலியாகவோ (ப்ராணி சம்பவ நாதம் என்பர். குயில் கூவுதல் மற்றும் நாம் பாடுதல் போன்றவை), வீணை போன்ற பொருள்களில் இருந்து வரும் ஒலியாகவோ (அப்ராணி சம்பவ நாதம்) உயிருள்ள தாவரங்களில் இருந்து உருவான மூங்கில், நாதஸ்வரம் போன்ற கருவிகளில் இருந்து வரும் ஒலியாகவோ (உபய சம்பவ நாதம்) உள்ளவையாகும்.

அனாகத நாதம் என்றால்
மனிதனுடைய முயற்சியின்றி இயற்கையிலேயே கேட்கப்படும் நாதம். கடற்கரையில் வரும் அலை, மழையின் ஓசை... இப்படி இவற்றிலும் நாதம் உண்டு.
இப்படி எல்லாவற்றிலும் நாதம் உண்டு.

இப்போது சொல்லுங்கள்!
நாதம் வேறு... இசை வேறா? அல்லது
நாதம் வேறு.. இயற்கை வேறா?! எனில் இயற்கைதான்... இறையென்றால்
இசையும் இறைதானே........

அதனால்தான் இசையோடு இசைகையிலும்
இசையோடு இறையை அழைக்கையிலும் நம்மையே இழக்கின்றோம்போல...

✍️செ.இராசமாணிக்கம்

No comments: