18/09/2020

ஐனநாயக தற்கொலை

 


நீட்டி முழக்காமல்
நினைத்ததெல்லாம் சொல்லாமல்
ஈட்டி தைப்பதுபோல்
எழுதிவைத்த வள்ளுவன்போல்
நேர்த்தி குறையாமல்
நிற்கின்ற படைப்புகளை
வார்த்த அன்பர்களை
வாழ்த்துவதும் கடமையன்றோ?!!
 
இணைய வகுப்பாலே
இடராகும் பிள்ளைகளின்
இதயவலி சொல்லும்
இயல்பான படைப்பாக
#குணாஜீ படைத்துள்ள
குறும்படம் கண்டபோது
கண்ணீர் வெள்ளத்தால்
செந்நீரும் சுட்டதய்யா..
 
தேநீர் கடையென்றும்
தேசத்தின் குரல் தானே.
தேசியத் தலைவரும்
தேநீரின் பரல் தானே..
வானொலி பின்புலத்தில்
காணாளியின் முதல் காட்சி..
அதுவே சொல்கிறது
அழுத்தமான பதிவென்று...
 
பத்துக்குப் பத்தடியில்
பத்தாத நெருக்கடியில்
ஒத்தை ஆளாக
உழைக்கின்ற உதயனுக்கு
ஆணும் பெண்ணுமாய்
அழகான பிள்ளைகள்..
அரசாங்கப் பள்ளியிலும்
ஆங்கிலப் பள்ளியிலுமாய்
வசதிக்கு ஒன்றும்
வசதியை மீறியுமாய்
படிக்க வைக்கின்றார்
படியேறும் ஆசையிலே....!!!
 
கொரானா ஊரடங்கின்
கொடுமைகளின் நீட்சியாய்
இணைய வகுப்பென்று
இறங்கிந்த சோதனையால்
கைப்பேசி இல்லாமல்
கடன் வாங்கித் தந்தாலும்
பாடம் புரியாமல்
பலியான பிள்ளை கண்டு
தலையில் அடிக்கின்றார்..
தலையெழுத்தை எண்ணியே...!!!
 
 
மும்மொழி திணிப்பைப்போல்
மும்முரமாய்த் திணிக்கின்ற
நீட்டையும் சொல்லிவிட்டு
நீட்டாமல் முடிக்கின்றார்...
உணர்ந்ததால் உரைக்கின்றேன்
உண்மையில் நற்படைப்பே....!!!
 
 
தற்கொலைச் சாவுகளை
தடுக்கின்ற வழிவேண்டும்!
முற்போக்குச் சிந்தனையில்
முனைப்போடு முயலவேண்டும்!
 
நக்கீரர் சொன்னாலும்
நல்லதை எடுக்க வேண்டும்!
தப்பான கொள்கைகளை
தயவுகூர்ந்து விட வேண்டும்!
 
 
அவர் இவர் எனச்சொல்லி
எவரையும் பிரிக்கவில்லை!
நடித்த அனைவருமே
நன்றாகச் செய்துள்ளீர்!
நடு சென்டர் தளமே(ற்)றி
நச்சென்று உரைத்துள்ளீர்!
 சமூகத்தின் குரலோடு
சாட்டையடி தந்துள்ளீர்!
 
அனைவருக்கும் மனமார்ந்த வாழ்த்துகள்!
✍️செ.இராசா
படம் பார்க்க;

No comments: