இன்றைய என் மகனின் #பிறந்தநாளை முன்னிட்டு இந்த வருடம் அவருக்கு நான் தரும் பரிசு #ஆத்திசூடி #உயிர்வருக்க #விளக்கக் #குறள்வெண்பாக்கள்
(பிற்காலத்தில் புரிந்து கொள்வார் என்ற நம்பிக்கையில்...)
#ஆத்திசூடி_விளக்கம்
#குறள்_வெண்பாக்களில்
1. #அறம்_செய_விரும்பு
அறச்செயல் யாதென ஆராய்ந்து நீயும்
நிறைவுடன் செய்ய நினை
2. #ஆறுவது_சினம்
கோபத்தின் வேகத்தைக் கொன்றிட்டால்
உன்னுள்ளே
கோபத்தீ மாறும் குளிர்ந்து
3. #இயல்வது_கரவேல்
கொடுக்க முடிந்தது கொஞ்சம் எனினும்
கொடுப்பாய் அதுவே கொடை
4. #ஈவது_விலக்கேல்
உடையோர்க்குச் செய்யும் உதவியை யாரும்
தடையிட எண்ணினால் தப்பு
5. #உடையது_விளம்பேல்
உன்னிடம் உள்ளதை ஊருக்கே சொல்வது
நன்மை அளிக்காது நம்பு
6. #ஊக்கமது_கைவிடேல்
தூக்கி விடுவோர்கள் தூக்கிவிடா விட்டாலும்
ஊக்கத்தை உன்னுள்ளே ஊட்டு
7. #எண்_எழுத்து_இகழேல்
எண்ணிக்கை சொல்கிற எண்கணிதம் போலவே
எண்ணத்தைச் சொல்லும் எழுத்து
8. #ஏற்பது_இகழ்ச்சி
எப்படி என்றாலும் என்ன நடந்தாலும்
எப்போதும் பிச்சை அவம்
9. #ஐயம்_இட்டு_உண்
பசியிலே நிற்போரைப் பார்த்திட நேர்ந்தால்
பசிக்குணவு போட்டுப் புசி
10. #ஒப்புரவு_ஒழுகு
உலகத்தின் போக்கினை உண்ணிப்பாய் ஆய்ந்து
நலமுறச் செய்வாய் வினை
11. #ஓதுவது_ஒழியேல்
புத்தகமே எப்போதும் புத்துயிரை நல்குவதால்
புத்தகத்துள் நாளும் புகு
12. #ஔவியம்_பேசல்
கறாராகச் சொல்கிறேன் கட்டாயம் வேண்டாம்
பொறாமைத்தீ வந்தால் பொசுக்கு
செ.இராசா
#இனிய_பிறந்தநாள்_வாழ்த்துகள்_மகனே
No comments:
Post a Comment