19/09/2020

பிழை

 #பிழை

எத்தனை பிழைகள்?

ஒற்றுப்பிழை
அச்சுப்பிழை
காட்சிப்பிழை
கருத்துப்பிழை
கணிதப்பிழை
கருவிப்பிழை
எழுத்துப்பிழை
இலக்கணப்பிழை
இப்படி...
எத்தனை பிழைகள்?

பிழைகள் செய்யா
பிள்ளைகள் உண்டா?
பிள்ளைகளாய் இல்லாத
பெற்றோர்தான் உண்டா?

தெரிந்தே செய்த
விருப்பப் பிழைதானே
அந்த ஆதி மனிதன்....

அவனோடு படைத்த
அடுத்த பிழைதானே
அந்த ஆதி மனுஷி..

பிறகு பிழை என்றால்
யார் செய்த பிழை?

இராமன் செய்த பிழைக்கு
கூனி செய்த பிழை ஈடாகாதுதான்
அதற்காக..
ஐயனின் பிழை சரியாகுமா?
ஆம்...
வாலிக்கு இழைத்த பிழை
வாதத்தால் சரியென்பீர்...
சீதைக்கு இழைத்த பிழை
சிந்தித்தால் யாதென்பீர்?!!

எங்கே பிழையில்லை?

கடலின் நீலம்
வானின் பிரதிபலிப்பே என்றபோது
இல்லை பிழையென்கிறதே
இராமன் விளைவு

தமிழின் ஆழம்
குறைவென்று சொன்னபோது
இல்லை பிழையென்கிறதே
கீழடி நாகரிகம்..

எங்கே பிழையில்லை?

சில பிழைகள் தோற்றப் பிழைகள்..
வானும் மண்ணும் சந்திப்பதுபோல...
சில பிழைகள் தேற்றப் பிழைகள்..
சூரியன்தான் பூமியை சுற்றுகிறது என்பதுபோல..

சில பிழைகள் திருத்தப் பிழைகள்
அறிவில் ஓடும் அறியாமைபோல
சில பிழைகள் திருந்தாப் பிழைகள்..
அறிந்ததாய் நினைக்கும் (ஆ)நாத்திகம்போல...

ஒன்றைப் புரிந்து கொள்ளுங்கள்

பிழைகள் என்றும் தவறல்ல
அவை நமக்கு வழிகாட்டியாக இருந்தால்..
பிழைகள் என்றும் தவறுதான்
அவையே சரியென வாதாடிக்கொண்டிருந்தால்.

--செ. இராசா

No comments: