04/09/2020

குறளுரையாடல்-8 --------------முரண்

 


#குறளுரையாடல்_8
#மருத்துவர்_ஐயாவுடன்
#குறள்_வெண்பாவில்
#தொடர்_உரையாடல்_பகுதி

#முரண்

#ஐயா_1
முரணிலா இல்லறம் முட்டா இணையாம்
முரணே அறமாய் முயல்

#நான்_2
முயன்றபின் தோற்றாலும் முன்னேற்றம் தானே
முயலாமை வேண்டாம் முயல்

#ஐயா_3
முயற்சி எனப்படும் முன்செய் பயிற்சி
அயர்ச்சி சிறிதின்றி ஆற்று

#நான்_4
ஆற்றுகின்ற நற்செய்கை அல்லலாய்ப் போகுமெனில்
ஆற்றியவுன் ஊழாய் அறி

#ஐயா_5
அறிவுடைமை என்பதுவும் அல்லல் பொழுதில்
நெறிதவறா வாழ்வாம் நெறி

#நான்_6
நெறிமுறையாய் வாழ்வோர்க்கு நேருகின்ற துன்பம்
தெறிகெட்டுப் போகும் தெளி

#ஐயா_7
தெளிந்தபின் பொய்கை தெரிவிக்கும் வெள்ளம்
பளிங்குபோல் தூயவுள்ளம் பார்

#நான்_8
பார்க்காத ஒன்றினைப் பார்த்ததுபோல் பேசுவோரைச்
சேர்க்காமல் வாழ்ந்தால் சிறப்பு

#ஐயா_9
சிறப்பாக வாழ சினத்தை விடுத்தல்
மறந்தும் மறவா மறம்

#நான்_10
மறம்கொண்டு வெல்வோரும் மாயத்தான் வேண்டும்
அறம்கொண்டு மாய்தல் அழகு

#ஐயா_11
அழகென்றால் நல்லொழுக்கம் அன்புடன் சொற்கேள்
பழகிக்கொள் நன்றாம்பண் பாடு

#நான்_12
பாடுவது வாசகம் பார்ப்பது காமகம்
தேடுவது யாதோ சிலர்

#ஐயா_13
சிலருக்குச் சிந்தனை சீர்மிகு செம்மை
சிலருக்குச் செய்கை சிறப்பு

#நான்_14
சிறப்பாகச் செந்தமிழைச் செப்புகிறார் பாரீர்
பிறர்நாட்டில் வாழும் தமிழ்

#ஐயா_15
தமிழேநல் கைவழி தானெழுதும் நானும்
உமியேநெல் லல்ல உணர்

#நான்_16
உணர்ந்தால் எவரும் உயரம் தொடலாம்
உணரார் உயர்ந்திடல் ஊழ்

#ஐயா_17
ஊழதை வெல்ல உணர்வுடன் சேவைசெய்
ஆழமில்லை வாழ்கடலும் ஆழ்

#நான்_18
ஆழ்மனம் வேண்டிடும் அத்தனையும் கிட்டுவதால்
பாழ்மனம் உள்ளதெனில் பாழ்

#ஐயா_19
பாழடைந்த வீட்டில் பலத்துடன் வித்தெழுதல்
வீழவீழ ஆற்றலுறும் வீறு

#நான்_20
வீறுகொண்ட வீரனின் வேகத்தைப் போலிங்கு
சீறுகின்றார் ஊடகத்தில் சேர்ந்து

✍️மருத்துவர் ஐயாவுடன் & நான்

#முரண்

No comments: