25/06/2020

குறளுரையாடல்_2




#குறளுரையாடல்_2

என்னது மறுபடியுமா? ஆம் அதனால் என்ன? இம்முறை; அதுவும் முதன்முறை எங்கள் தமிழ்ப்பட்டறைத் தலைவரோடு.....
இந்தியா இலங்கை என்று தமிழ் இலக்கியப் பேரவையின் கிளைகளை எங்கும் பரப்பி இன்று பல படைப்பாளிகளை உருவாக்கி ஊக்குவிக்கும் திரு சேக்கிழார் அப்பாசாமி ஐயா அவர்களோடு நேற்றைய பதிவில் பின்னூட்டமிட்டு சிறுது நேரம் #குறளுரையாடல் புரிந்தோம். இன்றைய பதிவு நாளைய வரலாறு என்பார்கள். அதுபோல் தலைவருடன் நான் உரையாடுவது என்றும் எமக்கு வரலாறே

இதோ உங்களின் பார்வைக்கு...

#ஐயா_1
இயல்பா யிணைந்த இரட்டைக் குரலே
நயமிக்க சோலையின் நட்பு

#நான்_2
நட்பை உருவாக்கி நாங்களும் இன்புறவே
பட்டறையில் வார்க்கின்றீர் பொன்

#ஐயா_3
பொன்னிலும் மின்னிடும் பண்ணிசைக்கும் பாவலரே
கண்களாய் நின்றீர் கலந்து

#நான்_4
கலந்திடும் செம்பினால் கண்கவர் பொன்போல்
வழங்கிய தெம்பினால் வாழ்வு

#ஐயா_5
வாழ்வினில் வான்புகழ வள்ளுவத்தில் வாழ்ந்திடுவோம்
தாழ்விலா நாமாய் சிறந்து

#நான்_6
சிறப்புடன் எல்லோரும் செந்தமிழைக் கற்றால்
பிறப்பின் பயனடைவர் பின்பு

#ஐயா_7
பின்பற்றிச் சென்றிடும் பண்புடையோர் வாழ்வினில்
முன்னேறிச் செல்வர் முயன்று

#நான்_8
முயல்வோர்கள் கைகளை மூத்தோர்கள் பற்றி
உயர்த்தினால் உய்யும் உலகு

#ஐயா_9
உலகிலே நம்மின் உயிராம் தமிழே
நலமுடன் காத்திடுவாள் நின்று

#நான்_10
நின்று நிலைக்க நினைவிலே வைத்திடுவோம்
என்றும் தமிழே எழில்

#ஐயா_11
எழிலுடை தரித்தவான் என்றும் மழையாய்
பொழியும் பாரில் பரந்து

#நான்_12
பரந்த மனத்துடன் பார்க்கின்ற மாந்தர்
சிரமத்தை வெல்வர் சிரித்து

#ஐயா_13
சிரித்திடு மெங்கும் சிறந்தோங்கி வாழ்வை
பெரிதாக்க வாழ்த்துப் பெருக்கு

(இன்னும் நீட்டலாம்தான்.... இருப்பினும் அடியேனின் விருப்பத்திற்கிணங்க சுருக்கமாக நிறைவு செய்தோம்)

✍️ ஐயாவுடன் & செ.இராசா

No comments: