06/06/2020

அதிசயம் ஆனால் உண்மை 2

#அதிசயம்_ஆனால்_உண்மை_2

(முந்தைய பதிவு இங்கே

https://m.facebook.com/story.php?story_fbid=3384494704908693&id=100000445910230&sfnsn=mo)

நம் உடம்பில் உயிர் இருந்தால்தானே நம்மால் அங்கும் இங்கும் உலவ முடியும். வெறும் மெய் மட்டும் உலவ முடியுமா?!; அதுபோல்‌ நம் தமிழ்மொழியில் உள்ள எழுத்துக்களைப் பாருங்களேன்‌. மெய்யில் உயிர் சேர்ந்தவுடன் உயிர் மெய்யாய் உலவுகிறது. வெறும் மெய் இயங்கவில்லையே. ஆனால் மெய்யில்லாமல் உயிர் இயங்குவதைக் கவனித்தீர்களா? அதை நாம் பிறகு ஆராய்வோம். இப்போது மெய் பற்றி மட்டும் ஆராய்வோம். ஏனெனில் அது மெய்யாக இருப்பதால்‌......(ஆகா... கொஞ்சம் பொறுத்துக்குங்க..😊😊😊🙏🙏)

மெய்யெழுத்துகள் மூன்று வகைகள் என்று நாம் அனைவரும் அறிவோம். அதாவது,
1. வல்லினம்- க் ச் ட் த் ப் ற்
2. மெல்லினம்- ங் ஞ் ண் ந் ம் ன்
3. இடையினம்- ய் ர் ல் வ் ழ் ள்

இதில் என்ன புதிது என்றுதானே கேட்க வருகின்றீர்கள். இதோ...‌‌சொல்கிறேன்.

ஒரு மொழி ஆராய்ச்சியாளர் சொல்கிறார்: அப்போது உள்ள அனைத்துத் தமிழ் இலக்கியங்களையும் இப்போதுள்ள அனைத்து நூல்கள், தினசரிகள்.....என அனைத்தையும் எடுத்து கணினியில் அதற்காக வடிவமைக்கப்பட்ட ஒரு செயலியில் போட்டால் அப்போது முதல் இப்போது வரை வல்லினம் மிகுதியாகவும் மெல்லினம் குறைவாகவும் இடையினம் இடையிலுமே பயன்படுத்தி வருகிறோம் என்பதை உறுதிப்படுத்துகிறார்‌.

அதுமட்டுமல்ல... மெல்லினம் மென்மையான பெண்களின் வர்ணனைகளுக்கும், வல்லினம் அல்லது இடையினம் ஆண்களின் வர்ணனைக்கும் அதிகமாக கையாண்டுள்ளார்கள்.

இதோ கம்பனில் இருந்து சில எடுத்துக்காட்டுகள்

1. இது சூர்ப்பனகைக்கு (ஞ் வரும் மெல்லினம்)

பஞ்சிஒளிர் விஞ்சுகுளிர் பல்லவம் அனுங்க
செஞ்செவிய கஞ்சம்நிகர் சீறடியள் ஆகி...

2. இது சீதைக்கு (ன் வரும் மெல்லினம்)

பொன்னின் ஒளி பூவின் வெறி சாந்து பொதி சீதம்
மின்னின் எழில் அன்னவள்தன் மேனிஒளி மான...

3. நம்ம இராமனுக்கு (ய் வரும் இடையினம்)

வெய்யோன் ஒளி தன் மேனியின்
விரி சோதியின் மறைய,
பொய்யே எனும் இடையாளொடும்,
இளையானொடும் போனான் -
‘மையோ, மரகதமோ, மறி
கடலோ, மழை முகிலோ,
ஐயோ, இவன் வடிவு!’ என்பது ஓர்
அழியா அழகு உடையான்

4. இது இராவணனுக்கு (ல். வரும் இடையினம்)

“கல்லுண்டு மரமுண்(டு)ஏ ழைக்
கடலோன்றும், கடந்தேம்என் னும்
சொல்லுண்டே, இவனைவெல் லும்
தோற்றத்(து)ஓர் கூற்றம்உண் டோ!

5. கோபத்தின் போதும் வீரத்தின் போதும் வல்லினம் இயல்பாகவே வரும் ‌பாடல்கள் நிறைய உண்டு. ஆனால் கண்டிப்பாக மெல்லினம் வராது.
இதோ இராவணனின் சினக் குறிப்பு சொல்லும் ஒரு பாடல்

நகை பிறக்கின்ற வாயன், நாக்கொடு கடை வாய்நக்கப்
புகை பிறக்கின்ற மூக்கன், பொறி பிறக்கின்ற கண்ணன்...

சரி... சினிமா பாடல்கள் இல்லையா? ஏன் இல்லை இதோ...

1. வெற்றிக் கொடி கட்டு பகைவரை... (வ- வீரம்)
2. வெற்றி நிச்சயம் உன்..(வ-வீரம்)
3. என்னவென்று சொல்வதம்மா (மெ-வர்ணனை))
4. அன்பே அன்பே கொல்லாதே (மெ-காதல்)
5. கட்டிப்பிடி கட்டிப்பிடிடா (மெல்லினம் வல்லினமாக பாடியது)
6. உன்னை நினைச்சேன்... (மெ-சோகம்)

..... இப்படி சொல்லிக் கொண்டே போகலாம்.
இதில் விதிவிலக்கும் இருக்கலாம். ஆனால் பெரும்பாலும் மெல்லினம் வரும் தொடைகள் பெண் வர்ணனை, காதல், சோகம்.... என்ற உணர்வுகளுக்கே வருகிறது.

இதுவும் தமிழில் ஆச்சரியம்தானே

✍️செ. இராசா

...தொடரும்

(அடுத்த பதிவுக்கு இங்கே:

https://m.facebook.com/story.php?story_fbid=3388619981162832&id=100000445910230&sfnsn=mo)

No comments: