அன்புத் தங்கைக்கு
கண்ணில்லா கணவனா?
ஆங்கார மிரட்டலுக்கு
காந்தாரம் பணிவதா?
அத்தினாபுரத்தை நான்
அடியோடு வெட்டுவேன்..
அங்குள்ளோர் அனைவரையும்
அங்கிருந்தே கொல்லுவேன்...
இதுதானே என் சபதம்
இதைத்தானே நான் செய்தேன்...
புறக்கண்கள் இல்லானின்
அகக்கண்கள் என்றாகி
அவன் பெற்ற நூறுக்கும்
சிவக்கண்கள் நானானேன்..
பாண்டவர் ஐவர்க்கும்
தீங்கிழை எமனானேன்...
நானென்ன தவறிழைத்தேன்?
நஞ்சினைப் புகட்டிவிட்டு
நதி நீரில் தள்ளிவிட்டால்
ஆயிரம் பலத்தோடு
வீமனும் வருகின்றான்...
அரக்கு மாளிகைக்குள்
அன்னையோடு தீயிட்டால்
அனைவரும் வெளிவந்து
ஆட்சியைக் கேட்கின்றார்..
நாகக் காடுதந்து
நாங்களும் விலக்கிவிட்டால்
இந்திர நாடு செய்து
எங்களையே மிரட்டுகின்றார்..
தட்சகனை ஏவிவிட்டு
தண்டனை தர நினைத்தால்
மாய சபை செய்து
மாயாஜாலம் காட்டுகின்றார்...
அனைத்தையும் பறித்துவிட்டு
அகதியாய் அலையவிட்டால்
படக்கென்று திரும்பிவந்து
பாதியைக் கேட்கின்றார்...
பகடையில் சதி செய்து
பாஞ்சாலியை துகிலுரித்தால்
கண்ணனைக் கூட்டிவந்து
சங்கினை ஊதுகின்றார்...
ஊதிய சங்கொலியில்
உதிர்ந்தது நூறென்றால்
வென்றவன் சகுனியன்றோ?!
வென்றது சபதமன்றோ?
ஆம் நான் சகுனி
✍️செ.இராசா
No comments:
Post a Comment