11/06/2020

கவிதை என்பது காமம்போல்



#கவிதை_என்பது காமம்போல்
ஏதோவோர் உந்துதலில்
எழுச்சியுருவதால்

கவிதை என்பது காதலிபோல்
இலயிக்கும் நேரங்களில்
உலகையே மறப்பதால்

கவிதை என்பது மனைவிபோல்
இருக்கும்போது அலட்சியமாய்
இல்லாதபோது வருந்துவதால்

கவிதை என்பது கடவுள்போல்
எங்கேயும் இருந்தாலும்
எங்கெங்கோ தேடுவதால்

கவிதை என்பது நட்பைப்போல்
கலங்கும் தருணங்களில்
கண்ணீரைத் துடைப்பதால்

கவிதை என்பது குழந்தையைப்போல்
கவலையே இல்லாமல்
கண்டதைச் சொல்வதால்

கவிதை என்பது கவிதையைப்போல்
இன்னும் இன்னுமென
இன்னும் கேட்பதால்.

✍️செ. இராசா

(இதேபோல் இதற்குமுன்னும் எழுதியுள்ளேன்‌. ஆனால்... வேறு விதமாக.
இப்படி ஒரே கருவில், ஒரே வடிவத்தில், ஒற்றுமைச் சிந்தனையில்
ஆனால் முற்றிலும் வேறுபட்ட கருத்தில் பிறந்தது மிகுந்த மகிழ்வாக இருந்தாலும், இப்படி எழுதுவது தவறென்ற வாதமும் உண்டு. என்ன செய்வது?!... எல்லாம் அவன் செயல்)

அப்புறம் இந்தப் படம் என் மகன் இனேஷ் ராஜா (வகுப்பு-6) வரைந்தது.

tagTag PhotopinAdd Locationpencil

No comments: