30/06/2020

செய்யாத தப்புக்குத் தண்டனை ஏன்?!!

பெய்யாத மழைக்கு ஈரம் உண்டா?
நெய்யாத உடைக்கு அங்கம் உண்டா?
கொய்யாத மலருக்கு கூந்தல் உண்டா?
எய்யாத அம்புக்கு இலக்கு உண்டா?; எனில்
செய்யாத தப்புக்குத் தண்டனை ஏன்?!!


✍️செ.இராசா

30.06.2020

29/06/2020

குறள் வெண்பாவில் காதல்




#குறள்_வெண்பாவில்_காதல்

அழகென்ற சொல்லின் அகராதி கண்டால்
அழகிய நின்பெயரே; அங்கு
(1)

கவியெழுத எண்ணி கருதேடிச் சென்றால்
புவியெல்லாம் நின்னுருவே; போ!
(2)

இசையினைக் கேட்க இசைவோடு நின்றால்
திசையெங்கும் நின்குரலே; செ!
(3)

தவத்தினைத் தேடி தனிமையில் சென்றால்
கவனத்தைக் கொய்யுமே: கண்
(4)

களிக்கிற எண்ணம் கரைதாண்டி வந்தால்
துளிர்த்தெனுள் துள்ளுமே; சொல்
(5)

படிக்கிற நூலைப் புரட்டிடத் தொட்டால்
படிக்குமுன் பக்கத்தில் நீ
(6)

கணினித் திரையைக் கரங்களில் தொட்டால்
கணினிமுன் காட்சியாய் நீ
(7)

மகிழுந்தில் ஏறி வலம்வரும் முன்னே
மகிழுந்தாய் அன்றென் மனம்
(8)

உணவெனப் பற்றி உவந்திடும் முன்னே
கனவெனப் போனாயே ஏன்?
(9)

மறையென எண்ணி மனதிலே வைத்தால்
இறையெனெப் போனாயே ஏன்?!
(10)

✍️செ.இராசா

மலரே மதுவே நீ வந்ததாலே---பாடல்



#மலரே_மதுவே நீ வந்ததாலே
மயங்குது மனதல்லோ
.........நிலவே நிழலே நீ வந்ததாலே
.........இரங்குது உயிரல்லோ
ஒலியே மொழியே நீ என்பதாலே
கவிக்குது தமிழல்லோ
.........ஒளியே விழியே நீ கண்டதாலே
.........தெளிந்தது நானல்லோ

அடியே அடியே வாடி புள்ள
துடிக்கிற இளமை பாவம் புள்ள
சடுகுடு ஆட்டம் எதுக்கு புள்ள
சட்டுன்னு சரணம் பாடு புள்ள

சொல்லே பொருளே நீ வந்ததாலே
சீரும் சிறப்புமல்லோ
..........அணியே அழகே நீ வந்தததாலே
..........அசத்துதுன் குரலல்லோ
கனியே கனிவே நீ என்பதாலே
இனிக்குதுன் உறவல்லோ
..........பனியே பணிவே நீ தொட்டதாலே
..........படுத்துதுன் நினைவல்லோ

.....(அடியே....)

#என்ன_அழகு?
#வள்ளுவர்_திங்கள்_117

28/06/2020

நான் சகுனி




அன்புத் தங்கைக்கு
கண்ணில்லா கணவனா?
ஆங்கார மிரட்டலுக்கு
காந்தாரம் பணிவதா?
அத்தினாபுரத்தை நான்
அடியோடு வெட்டுவேன்..
அங்குள்ளோர் அனைவரையும்
அங்கிருந்தே கொல்லுவேன்...
இதுதானே என் சபதம்
இதைத்தானே நான் செய்தேன்...

புறக்கண்கள் இல்லானின்
அகக்கண்கள் என்றாகி
அவன் பெற்ற நூறுக்கும்
சிவக்கண்கள் நானானேன்..
பாண்டவர் ஐவர்க்கும்
தீங்கிழை எமனானேன்...

நானென்ன தவறிழைத்தேன்?

நஞ்சினைப் புகட்டிவிட்டு
நதி நீரில் தள்ளிவிட்டால்
ஆயிரம் பலத்தோடு
வீமனும் வருகின்றான்...

அரக்கு மாளிகைக்குள்
அன்னையோடு தீயிட்டால்
அனைவரும் வெளிவந்து
ஆட்சியைக் கேட்கின்றார்..

நாகக் காடுதந்து
நாங்களும் விலக்கிவிட்டால்
இந்திர நாடு செய்து
எங்களையே மிரட்டுகின்றார்..

தட்சகனை ஏவிவிட்டு
தண்டனை தர நினைத்தால்
மாய சபை செய்து
மாயாஜாலம் காட்டுகின்றார்...

அனைத்தையும் பறித்துவிட்டு
அகதியாய் அலையவிட்டால்
படக்கென்று திரும்பிவந்து
பாதியைக் கேட்கின்றார்...

பகடையில் சதி செய்து
பாஞ்சாலியை துகிலுரித்தால்
கண்ணனைக் கூட்டிவந்து
சங்கினை ஊதுகின்றார்...

ஊதிய சங்கொலியில்
உதிர்ந்தது நூறென்றால்
வென்றவன் சகுனியன்றோ?!
வென்றது சபதமன்றோ?

ஆம் நான் சகுனி

✍️செ.இராசா

27/06/2020

லெஃப்ட் ரைட்டு திரும்ப முடியல----பாடல்




#லெஃப்ட்_ரைட்டு திரும்ப முடியல- பங்காளி
லேடி ஃபைட்டு தாங்க முடியல
வீட்டில் ரைடு தூங்க முடியல-பங்காளி
வீட்ட விட்டும் போக முடியல

கடுப்பக் கிளப்பும் கதையப் பேசி
....சகட்டு மேனிக்கு சண்டையப் போட்டா..
எடுத்த எடுப்பில் எகிறிப் பேசி
....எடக்கு மொடக்கா எடுத்து விட்டா..
அடுத்த முறைக்கும் சேர்த்துப் போட்டு
.....அரட்டி உருட்டி எகிறிப் புட்டா
கொடுத்த கணக்கைத் திருப்பிப் போட்டு
....கொத்துப் புரட்டா கொதறிப் புட்டா

.......(லெஃப்ட் ரைட்டு திரும்ப முடியல)

என்ன அங்க சத்தம்...
.........பேசிக்கிட்டிருக்கேன்மா

✍️செ.இராசா

(இது எல்லாமே கற்பனை தாங்க... ஆமாம் ஆமாம்😊😊😊😀😀😀😀)

26/06/2020

குறளுரையாடல்_3



#குறளுரையாடல்_3

என்ன இது தொடர்ந்து கொண்டே போகிறதே எனப் பார்க்கின்றீர்களா?!.
ஆம்; இது எல்லாம் அவன் செயல் என்பதுபோல் இது எல்லாம் திரு அகன் மாமா ஒத்துழைப்பால் விளைந்த செயல். தமிழ் கூறும் நல்லுலகம் இலக்கணச் செம்மல் அகன் மாமாவை அறியாமல் இருக்க வாய்ப்பில்லை. (என் மனைவியை மகளாக ஏற்ற நாள் முதலாய் நான் மாமா என்றே பிரியமுடன் அழைக்கின்றேன்) அவரோடு இதற்கு முன்பும் குறள் வெண்பாவில் இப்படி உரையாடியுள்ளேன் என்றாலும், இம்முறை ஒரு தொடரோட்டமாக என்னோடு அவர் கலந்து கொண்டது என்பது அவரின் அளப்பரிய பெருந்தன்மையையே காட்டுகிறது என்றால் அது மிகையல்ல.....(என் தவறுகளை அடிக்கடிச் சுட்டிக் காட்டி என்னைச் செதுக்கிய கண்டிப்பான ஆசான்களில் மூத்தவர் மட்டுமல்ல முக்கியானவரும்கூட)

மனமார்ந்த நன்றி மாமா...

இதோ உங்களின் பார்வைக்காக...

#மாமா_1
குறளுரை யாடல் கொலுவுரை யாடல்
மறவர்க் கியல்பது மாண்பு.

#நான்_2
மாண்புமிகு மாமாவின் வாழ்த்துகள் கிட்டினால்
சான்றிதழ் வேறெதுக்கு சொல்

#மாமா_3
தரமுள்ள தைவாழ்த்து தல்நன்றே என்றும்
சிரமுள்ள தைப்போற்றல் சீர்.

#நான்_4
சீர்படுத்த வேண்டுமென செந்தமிழில் சொல்லிவிட்டு
பார்த்தீரா செய்கின்றார் பாழ்

#மாமா_5
பாழாக்கு வோர்க்குப் பதில்சொல்லி யாதுபயன்
ஆழாக்கே ஆனாலும் ஆங்கு.

#நான்_6
ஆங்கொன்று பேசியதை அப்படியே மாற்றிவிட்டு
வாங்கிக் குவிப்பதா வாழ்வு

#மாமா_7
வாழ்வதே வாழ்வென்று வாழ்பவர்கள் வாழ்க்கையில்
தாழ்வொன்றே தானடைக்கும் தாழ்.

#நான்_8
தாழ்ந்து வணங்கியே தன்னை வளர்ப்போர்க்கு
வீழ்ந்தபின் கிட்டுமா வீடு

#மாமா_9
வீட்டில் இருந்தே விழுதுவிடும் நற்பண்பு
நாட்டுக் கதுதானே நன்று.

#நான்_10
நன்றிப் பெருக்கோடு நல்லறம் செய்வோர்க்கே
என்றைக்கும் இல்லை இழப்பு

#மாமா_11
இழப்புகள் என்றும் இயன்பென் றுணர்ந்தும்
உழவன் உழைக்கிறான் ஊர்ந்து.

#நான்_12
ஊர்ந்து தவழ்ந்திட்ட ஒத்திகைதான் பின்னாளில்
நேர்ந்திடும் அஃதே நினை

#மாமா_13
நினைப்பவை எல்லாம் நிலைப்பதில்லை என்றும்
தினையும் உதவும் சிறப்பு.

#நான்_14
சிறப்பான செய்கையை செய்கின்ற போதே
மறக்காது மாந்தர் மனம்

#மாமா_15
மனம்போல வாழ்வு மறவாதே நண்பா
தினம்காக்க வேண்டும் செயல்

#நான்_16
செயலின் விளைவாய் சிவனே வருவான்
சுயநலம் இன்றித் தொடங்கு

#மாமா_17
தொடங்குவ தெல்லாம் தொடரா முடிவில்
மடங்குவ தொன்றே மதி.

இத்துடன் தற்காலிகமாக நிறைவு பெறட்டும் ராசா... வாய்ப்பு கிடைக்கும் போது தொடரலாம்..என்று நான் கேட்டுக்கொண்டதற்கிணங்க மாமா அளித்த பதிலோடு முடிந்தது குறளுரையாடல்_3.

#தமிழ்_இனிது

✍️மாமாவுடன் செ. இராசா

25/06/2020

குறளுரையாடல்_2




#குறளுரையாடல்_2

என்னது மறுபடியுமா? ஆம் அதனால் என்ன? இம்முறை; அதுவும் முதன்முறை எங்கள் தமிழ்ப்பட்டறைத் தலைவரோடு.....
இந்தியா இலங்கை என்று தமிழ் இலக்கியப் பேரவையின் கிளைகளை எங்கும் பரப்பி இன்று பல படைப்பாளிகளை உருவாக்கி ஊக்குவிக்கும் திரு சேக்கிழார் அப்பாசாமி ஐயா அவர்களோடு நேற்றைய பதிவில் பின்னூட்டமிட்டு சிறுது நேரம் #குறளுரையாடல் புரிந்தோம். இன்றைய பதிவு நாளைய வரலாறு என்பார்கள். அதுபோல் தலைவருடன் நான் உரையாடுவது என்றும் எமக்கு வரலாறே

இதோ உங்களின் பார்வைக்கு...

#ஐயா_1
இயல்பா யிணைந்த இரட்டைக் குரலே
நயமிக்க சோலையின் நட்பு

#நான்_2
நட்பை உருவாக்கி நாங்களும் இன்புறவே
பட்டறையில் வார்க்கின்றீர் பொன்

#ஐயா_3
பொன்னிலும் மின்னிடும் பண்ணிசைக்கும் பாவலரே
கண்களாய் நின்றீர் கலந்து

#நான்_4
கலந்திடும் செம்பினால் கண்கவர் பொன்போல்
வழங்கிய தெம்பினால் வாழ்வு

#ஐயா_5
வாழ்வினில் வான்புகழ வள்ளுவத்தில் வாழ்ந்திடுவோம்
தாழ்விலா நாமாய் சிறந்து

#நான்_6
சிறப்புடன் எல்லோரும் செந்தமிழைக் கற்றால்
பிறப்பின் பயனடைவர் பின்பு

#ஐயா_7
பின்பற்றிச் சென்றிடும் பண்புடையோர் வாழ்வினில்
முன்னேறிச் செல்வர் முயன்று

#நான்_8
முயல்வோர்கள் கைகளை மூத்தோர்கள் பற்றி
உயர்த்தினால் உய்யும் உலகு

#ஐயா_9
உலகிலே நம்மின் உயிராம் தமிழே
நலமுடன் காத்திடுவாள் நின்று

#நான்_10
நின்று நிலைக்க நினைவிலே வைத்திடுவோம்
என்றும் தமிழே எழில்

#ஐயா_11
எழிலுடை தரித்தவான் என்றும் மழையாய்
பொழியும் பாரில் பரந்து

#நான்_12
பரந்த மனத்துடன் பார்க்கின்ற மாந்தர்
சிரமத்தை வெல்வர் சிரித்து

#ஐயா_13
சிரித்திடு மெங்கும் சிறந்தோங்கி வாழ்வை
பெரிதாக்க வாழ்த்துப் பெருக்கு

(இன்னும் நீட்டலாம்தான்.... இருப்பினும் அடியேனின் விருப்பத்திற்கிணங்க சுருக்கமாக நிறைவு செய்தோம்)

✍️ ஐயாவுடன் & செ.இராசா

24/06/2020

குறளுரையாடல்_1




நேற்றையதினம் தமிழ்ச்சோலையின் #வள்ளுவர்_திங்கள்_116வது நிகழ்வின் போது மதிப்பிற்குரிய மருத்துவர் Gopala Krishnan ஐயா அவர்கள் #அரண் என்ற தலைப்பில் 10 குறள் வெண்பாக்கள் அடங்கிய ஓர் அதிகாரம் படைத்திருந்தார்கள். அதை நான் வாழ்த்திப் பின்னூட்டம் போட அவர்களோ அதற்கும் குறள் வெண்பாவில் பதில் போட பின்னர் நானும் அவருமாய் மாறி மாறிப் பேசிய #குறளுரையாடலே இது:

#ஐயா_1
தம்பி யுடையார் படைக்கஞ்சார் தம்மைத்தாம்
நம்பிப் படைக்கலாம் நன்று.

#நான்_2
நன்றாய்ப் படைக்கின்றீர் நற்றமிழ் சீர்பெறவே
இன்புற்றேன் உண்மையிலே இன்று

#ஐயா_3
இன்று தமிழ்ச்சோலை இன்னமுதம் தந்தமை
என்றும் தொடரும் எழில்

#நான்_4
எழிலாய் எழுதுவோர் எண்ணிக்கை கூட
அழிவுண்டா சோலைக்குச் சொல்

#ஐயா_5
சொல்லென்றால் தோன்றுவ(து) உன்னதச் செந்தமிழ்
நில்லாம லோதுவாய் நீ

#நான்_6
நீர்சொன்ன சொல்லை நிலையான சொல்லாக்கி
நேர்த்தியுடன் நின்றிடுவேன் நான்

#ஐயா_7
நானற்று யாக்கும் நறுந்தமிழ் செம்மையாம்
தானுற்று நோக்கும் தவிப்பு

#நான்_8
தவிப்புடன் நற்றமிழைத் தப்பின்றிக் கற்றோர்
கவித்துவமாய் வாழ்கின்றார் காண்

#ஐயா_9
காண்பதுவும் கேட்பதுவும் கண்ணதுவும் பைந்தமிழின்
மாண்புக்கே இல்லையாம் மாற்று

#நான்_10
மாற்றுவதை மாற்றியே மாறுகின்ற மாந்தரை
போற்றிடும் என்றும் புவி

#ஐயா_11
புவியில் குவிந்து புனிதம் கனிந்து
கவிதை தருந்தமிழ்க் கை

#நான்_12
கைப்பேசித் தட்டச்சில் கற்றதமிழ் நற்சொல்லைக்
கைப்பற்றிச் செய்தேன் கவி

#ஐயா_14
கவிதை கருவாகும் காலமறி யேன்அக்
கவிதை பிறக்கும் கணம்

#நான்_15
கணம்கணம் வாழ்வோரே காலத்தின் சாட்சி
பணம்கனம் இல்லை படி

#ஐயா_16
படித்தோர் எனப்படுவோர் பண்புயா தென்றால்
இடித்துரை யாடும் இயல்பு

(இத்தோடு முடித்துக் கொண்டோம். இப்படிப் பேசும் குறளுரையாடல் என்பது மிகவும் மகிழ்வைத் தருகிறது என்றால் அது மிகையல்ல)

✍️ஐயாவுடன் & செ.இராசா

#தமிழ்_இனிது

கம்பரசம் ஓடிவரும்



கண்களின் ஈர்ப்பினிலே
............கம்பரசம் ஓடிவரும்
வெண்பற்கள் மின்னயிலே
............மேகதூதம் கூடிவரும்
பெண்களின் பார்வையிலோப்
...........பொல்லாப்பு தேடிவரும்
உண்மையில் தப்பித்தேன்; ஓ!

✍️செ. இராசா

21/06/2020

நீங்கள் என்னை ஒதுக்க முடியாது
நான் உங்களின் மனசாட்சியாய் உள்ளவரை

--செரா--

வராதேன்னு சொல்லுறாங்களே-


வராதேன்னு சொல்லுறாங்களே- கொரானா
தராதேன்னு சொல்லுறாங்களே (2)

சைனாக் காரன் செஞ்சதுக்கு
             சென்னைக் காரன் கழுவுணுமா?!
             சென்னைக் காரன் கழுவுணுமா?!
ஃபாரின் காரன் பண்ணதுக்கு
            ஃபைன நாங்க கட்டணுமா?
             ஃபைன நாங்க கட்டணுமா?
 என்ன வாழ்க்கை புரியலீங்கோ
எங்கள ஏங்க ஒதுக்குறீங்கோ?!
கண்ண கட்ட முடியலீங்கோ
சின்ன வயிறு பசிக்குதுங்கோ


..........(வராதே....)


மண்ண விட்டப் பாவத்துக்கு
                  மண்ண வாயில் போடணுமா
                  மண்ண வாயில் போடணுமா
எல்லாம் இங்கே சேர்ந்ததுக்கு
                 பொல்லா பேர சுமக்கணுமா
                 பொல்லா பேர சுமக்கணுமா
வந்த சனத்த வாழ வச்சால்
வாழ்க்கை இப்படி மாறிடுமா?
உங்க சனத்த ஓதுக்கி வச்சால்
உலகம் உங்களை விட்டிடுமா?!

..........(வராதே....)

✍️செ.இராசா
(சென்னை நண்பர் கொடுத்த சூழ்நிலையை உள்வாங்கி உடனேயே படைத்த பாடல். கருத்துகள் வரவேற்கப்படுகின்றன)

எங்க ஊர் கண்மாய்



வானம் பார்த்த பூமியில
வந்து விழும் தண்ணியில
குளமெல்லாம் ரொம்பயில
குடங்குடமா மனங்குளிர
அம்மணமாய் ஆடுமுங்க
அது அனுபவிச்சாப் புரியுமுங்க..

செம்மண்ணு பூமியில
சேருகின்ற தண்ணியில
செங்குருதி நிறமேறி
செம்மையா உருமாறி
கண்மாயாய் மாறுமுங்க
அது கண் மாயா இல்லீங்க...

✍️செ. இராசா

(எங்க ஊர் கண்மாய் படம் பார்த்தவுடன் மனம் அம்மணமாய் மாறியபோது எழுந்த வரிகள்)

மனமார்ந்த நன்றி Sanjay Ramu தம்பி

சிவகங்கை மாவட்டம்
ஊர்: அம்மன் பட்டி

வாடிபுள்ள வாடிபுள்ள ..........வாட்சப் சாட்டுல


வாடிபுள்ள வாடிபுள்ள
..........வாட்சப் சாட்டுல
ஆடிடுவோம் வாடிபுள்ள
..........டிக்கு டாக்குல
பாடிடுவோம் பழகிடுவோம்
..........ஸ்மூலே ஆப்புள
தேடிநானும் வாடுகிறேன்
.......... கூகிள் குரோமில

பேஸ்புக்கின் ஸ்டேடஸ் எல்லாம்
.......... பார்க்கப் பிடிக்கலை
ஜூம் கிளாஸின் பேச்ச எல்லாம்
...........கேட்கப் பிடிக்கலை
யூடிபின் காட்சி எல்லாம்
...........ரசிக்க முடியல
ஐயோ நீ இல்லாமநான்
..........இருக்க முடியல....இருக்க முடியல....

(வேறு)

முகநூலில் நூல்விட்டு மோதுகின்ற காதல்
சகவாசக் கண்பட்டு சங்கடமே கொள்ளும்
புலனத்தில் பொய்பேசி பூக்கின்ற காதல்
சலனத்தில் மெய்விட்டால் சங்கு

✍️செ. இராசா

20/06/2020

சாது தேசம் என்றும்----வாழ்க வாழ்கவே பாரதம்



சாது தேசம் என்றும்
சாந்த ரூபம் என்றும்
சைனாக் காரன் நம்மை எண்ணினான்!
வாலை ஆட்டிக் கொண்டு
வாயில் நஞ்சு கொண்டு
வாங்கிப் போக திட்டம் தீட்டினான்!

வேக வேகமாய்த் தாக்குவோம்!
வேங்கை வேகத்தைக் காட்டுவோம்!
யாரும் யாவர்க்கும் சொல்லுவோம்!
நேரும் துரோகத்தை வெல்லுவோம்!

வாழ்க வாழ்கவே வாழ்க வாழ்கவே
வாழ்க வாழ்கவே பாரதம்!!

✍️செ.இராசா

நீரில் மிதந்து நிலத்தில்

நீரில் மிதந்து நிலத்தில் குதித்ததும்
பாரில் முதலில் இழுக்கிற காற்றையும்
வீழும் தருணம் விடுகிற காற்றையும்
வாழும் பொழுதில் நினை
✍️

19/06/2020

பாரதப்போரின் காட்சிகள் குறள் வடிவில்


#பாரதப்போரின்_காட்சிகள்
#குறள்_வடிவில்

#முன்னுரை

பதினெட்டு சேனைகள் பங்களித்த போரும்
பதினெட்டு நாட்களே பார்
(1)
பாண்டவரைக் கொன்றிடப் பாரதப் போர்நடத்தி
மாண்டது கௌரவர்கள் வாழ்வு
(2)

சகுனியின் திட்டத்தை சாய்த்திட்ட கண்ணன்
சகலர்க்கும் ஊதினான் சங்கு
(3)

#முதல்_நாள்
#விராட_இளவரசன்_மரணம்

சத்திய தர்மரின் சாவைத் தடுக்கவே
உத்திரன் விட்டான் உயிர்
(4)

#இரண்டாம்_நாளுக்குப்_பின்னர்
#பீஷ்மரின்_ஆட்டம்

முதலிரு நாட்களாய் மௌனித்த பீஷ்மர்
அதன்பின் கொடுத்தார் அழிவு
(5)

#பத்தாம்நாள்_பீஷ்மரின்_நில

ஐயிரு நாட்களில் ஐம்படை மாய்த்தவர்
போயினார் ஊழ்வந்த போது
(6)

#கர்ணன்_படை_புகல்

#பதினொன்றாம்_நாளில் படைக்கரண் ஆகி
உதித்தது கர்ணன் ஒலி(ளி)
(7)

#கௌரவர்_மரணத்தின்_தொடக்கம்

நூறில் இருபதை நூலெனப் பிய்த்தது
மீறிய பீமன் வெறி
(8)

#பனிரெண்டாம்_நாளில் பலியான பாதி
பனிமேல் கதிரவன் போல்
(9)

#அபிமன்யு_மரணம்
துடித்த துரியனும் சூட்சுமம் செய்தே
அடித்தான் அபிமன்யு வை
(10)

#பாண்டவரின்_தாக்குதல்

மடிந்த மகனால் மதமுற்ற ஐவர்
வெடித்தனர் வில்லால் வெடி
(11)

இரவில் வெடித்த எரிமலைப் போரில்
இரங்கவே இல்லை எமன்
(12)

மீதமுள்ள கௌரவரில் மிச்சம் இருந்தது
பூதமோ பேயோ புதிர்
(13)

#கடோத்கஜன்_மரணம்
பீம மகன்தந்த பேரதிர்வை இந்திர
பாணம் அடக்கியது பாய்ந்து
(14)

#சிந்துராஜ_ஜெயத்ரதன்_மரணம்
சுதர்சனச் சக்கரத்தால் சூரியனும் மங்க
சிதைந்தது மச்சான் சிரம்
(15)

#துரோணரின்_மரணம்
துரோணரின் பற்றே துரோணரை வீழ்த்த
உரோமமாய் விட்டார் உயிர்
(16)

#கர்ணனின்_மரணம்
#பதினாறாம்_நாளின் படைத்தலை கர்ணன்
பதினேழாம் நாளில் பலி
(17)

விதியால் துரியனின் மித்திரன் ஆகி
சதியால் விழுந்தான் சரிந்து
(18)

#துச்சாதணன்_மரணம்
துகிலை உரித்தவன் தோலை உரிக்க
அகிலம் அதிர்ந்ததாம் அன்று
(19)

#சகுனியின்_மரணம்
#பதினெட்டாம்_நாளில் பகடைபோல் ஆன
சதிகார மாமனின் சாவு
(20)

#துரியனின்_மரணம்
தொடையைப் பிளந்து துரியனைக் கொன்றே
கடைசியில் வெற்றிக் கனி
(21)

#முடிவுரை
அதர்மத்தின் போக்கை அதன்வழி சென்றே
அதனை அதனால் அடி
(22)

✍️செ.இராசா
(முன்னுரை முடிவுரை தவிர்த்து நிகழ்வுகளும் 18குறள் வெண்பாக்களாய்ப் படைக்கப்பட்டுள்ளது)

18/06/2020

தகிட ததிமி தகிட ததிமி தம்தானா




#தகிட_ததிமி_தகிட_ததிமி_தம்தானா
இறையின் உருவில் இறங்கி இவனும் வந்...தா...னா..
தகிட ததிமி தகிட ததிமி தம்தானா
மறையின் வடிவில் மனதில் தினமும் சொன்.‌‌..னா..‌‌னா‌‌

கனவிலும் அடிக்கடி கவிப்பவன் நீதானா
என் கவி படித்திட வரணும் நீ தா னா
கனவிலும் அடிக்கடி கவிப்பவன் நீதானா
என் கவி படித்திட வரணும் நீ தா னா

இயலும் இசையும் ஒன்று சேர\

......தகிட ததிமி....

அகில உலகம் எல்லாம் நீ மெச்சுகின்ற கவிஞன்
அது தெரியும் போது தெரியும்
உனைப் புரியும் போது அதிரும் (2)

உனக்குள் எழும்பும் வரிகளை உடனே வடி நீ
ஒருநாள் திருநாள் வருமே சிவமாய்இரு நீ
உனக்குள் எழும்பும் வரிகளை உடனே வடி நீ
ஒருநாள் திருநாள் வருமே சிவமேபொறு நீ

காலம் இன்னும் சிக்கவில்லை
யாரும் உன்னைக் காணவில்லை
ஆனால் என்ன நீயே எந்தன் முல்லை

✍️செ. இராசா

அர்த்தமாய் நிற்பான் அவன்

பந்தத்தின் மேலுள்ள பற்றுதல் இன்றியே
சிந்தையில் நல்லறம் செய்திட எண்ணியே
கர்மத்தை‌ச் செய்கிற காரியம் யாவிலும்
அர்த்தமாய் நிற்பான் அவன்

இறப்பதல்ல காலம்‌

உயிர்ப்போடு கலந்த உன்னதமான காலத்தை
இறந்த காலம் எனச் சொல்லாதீர்!
இறப்பதல்ல காலம்‌...கடப்பதே..
இதுவும் கடந்து போகும்..✍️

16/06/2020

ஸ்ரீ கிருஷ்ண கோவிந்த ஹரி நாமம்



ஸ்ரீ கிருஷ்ண கோவிந்த ஹரி நாமம் போதும்
தீராத யாவும் தீர்ந்தோடிப் போகும்
பார்த்தாவின் தோழன்நீ பார்த்தாலே போதும்
பாராட்டும் லோகம் பூமாலை சூடும்

✍️செ. இராசா

15/06/2020

3 வடிவங்களில்----மது மங்கை மயக்கம்



🌀☀️🌀☀️🌀☀️🌀☀️🌀☀️🌀☀️🌀☀️🌀

#புதுக்கவிதை_1

கண்டிப்பாகச் சொல்வேன்...
மண்ணாளும் உரிமை
பெண்களுக்கேயென...

ஆம்...
ஆல்கஹால் பார்வை கொண்டு
ஆட்சி நடத்துவதால்..

இடை போடும் வரி கொண்டு
இடையூறு செய்வதால்‌‌...

கால் கட்டு போட்டுவிட்டு
கைகளை நீட்டுவதால்.‌

வாய்கிழியப் பேசிவிட்டு
வாய் மூடி அழுவதால்...

எதிராளி புன்னகைத்தால்
யாரென்று ஆராய்வதால்..

தன் இன நலனுக்காய்
தன்னையே அர்ப்பணிப்பதால்.

கண்டிப்பாகச் சொல்வேன்...
மண்ணாளும் உரிமை
பெண்களுக்கேயென..

🌀☀️🌀☀️🌀☀️🌀☀️🌀☀️🌀☀️🌀☀️🌀

#குறள் வெண்பா_2

போதை மதுவென்று பொய்யாகப் பேசுவது
பேதை விழிகாணார் பேச்சு

🌀☀️🌀☀️🌀☀️🌀☀️🌀☀️🌀☀️🌀☀️🌀

#ஹைக்கூ_3

இதுவே கடைசியென
மீண்டும் தொடர்கிறது
மயக்கும் பார்வை

14/06/2020

திறமை இருந்தால்

திறமை இருந்தால் சிவனே வருவான்
உறக்கம் விடுத்தால் உடனே வருவான்
அடக்கம் மிகுந்தால் அவனே வருவான்
கடமை உணர்வால் களி(ழி)✍️

குற்றமுள்ள நெஞ்சம்

#குற்றமுள்ள_நெஞ்சம்-அது
........குறையப்பார்க்குது
........குறைவாப்பார்க்குது
#நிறையவுள்ள_நெஞ்சம்-அது
........நிறையப் பார்க்குது
........நிறைவாப் பார்க்குது

குறையும் நிறையும் குணமும் மணமும்
உறையும் முறையில் இறையின் வரமும்(2)
பிறவிப் பயணம் முடிவில் மரணம்
மறதிப் பயணம் தொடரும் ஜனனம்(2)

..... குற்றமுள்ள நெஞ்சம்

சிவனும் அறமும் சிரசில் அமரும்
தவமும் மனமும் தனக்குள் வரணும்(2)
எவனும் எமனும் எதிரில் வரினும்
அவனும் அருகில் அமைதி பெறனும்(2)

.....குற்றமுள்ள நெஞ்சம்

கடலும் மலையும் கடுகில் அடங்கும்
உடலின் நினைவில் உருகும் வரைக்கும்(2)
உருளும் உலகம் உவகை அடையும்
பெருகும் மனிதம் பெருகும் வரைக்கும் (2)

.....குற்றமுள்ள நெஞ்சம்

✍️செ.இராசா

வயசு மேல வயசு ஏறி



#வயசு மேல வயசு ஏறி
மயக்கம் போட வைக்குது
புதுசு போல பழசு மாறி
புதிரு போட்டுப் பார்க்குது

இப்பத் தானே பிறந்ததுபோல்
இப்ப எனக்குத் தோனுது
அப்ப எந்தன் பிள்ளைவந்து
அப்பன் என்று கொஞ்சுது

பள்ளிக் கூடம் போனகதை
பல்ல இளிக்க வைக்குது
கள்ளியில சொன்ன கதை
கண்ணில் இன்னும் நிக்குது

டவுசர் போட்ட காலம்வந்து
தவுசன் வால்டா மின்னுது
அவசரமா பிள்ளை வந்து
ஆப்பிள் போன நோண்டுது

என்ன வாழ்க்கை என்னவென்று
எண்ணம் வந்து தொலைக்குது
எண்ணம் போலே எல்லாமென்று
இன்னும் இன்னும் ஏங்குது

✍️செ.இராசா

(இந்த பனியனைப் பார்த்து தோன்றிய வரிகளே இவை)

13/06/2020

நாளுக்கு நாலுமுறை

நாளுக்கு நாலுமுறை நான்குளிக்கக் காரணமே
ஆளுக்குள் செல்கின்ற ஆத்தாடி நீரணமே
நாடுவிட்டு நாடுவந்த நாதாரி ஊரினமே
ஊடுகட்டி தாக்காமல் ஓடு✍️

குடிக்கிறேன்னு சொல்லாதடி பொண்டாட்டி





#பாடல்

#குடிக்கிறேன்னு_சொல்லாதடி_பொண்டாட்டி-நாங்க
குடிக்கிறோன்னா காரணம்யார் பொண்டாட்டி

பெத்து போட்ட ஆத்தா சொன்னாள்
புத்தி கேட்டுப் போனேன் என்று
கட்டிப் போட்ட பெண்டு சொன்னாள்
கட்டுப் பாடு இல்லை என்று
பொட்டப் பிள்ளை சுட்டிச் சொன்னாள்
தட்டு கெட்ட அப்பன் என்று

தப்பா என்ன செஞ்சு புட்டோம்
தப்பு தப்பா கெட்ட பேரு
மப்பு ஒன்னும் ஏற வில்லை
மானம் கெட்ட அக்கப் போரு
போதுண்டி போதுண்டி பொண்டாட்டி-நான்
போதையில பாடவில்லை பொண்டாட்டி
.........(குடிக்கிறேன்னு.....)

சாதி பாத்து ஓட்டுப் போட்டான்
சாதி சனம் வேண்டும் என்று
இனத்தப் பாத்து ஓட்டுப் போட்டான்
தனக்கு சலுகை வேண்டும் என்று
காச வாங்கி ஓட்டுப் போட்டான்
கொடுத்த காசு ஒட்ட னுன்னு

எங்க வாழ்க்கை மாற வில்லை
என்ன நாங்க செய்ய வேற
ஒன்னும் இங்கே கையில் இல்லை
என்ன ஆகும் பதிலும் இல்லை
போதுண்டி போதுண்டி பொண்டாட்டி-நான்
போதையில பாடவில்லை பொண்டாட்டி
.........(குடிக்கிறேன்னு.....)

✍️செ.இராசா
கூட்டத்தில் தனிமையாகவும்
தனிமையில் கூட்டமாகவும் இருக்க முடிந்த நபர்கள்;
கவிஞர்களும் ஞானிகளும் மட்டுமே.....
✍️செரா

12/06/2020

காட்டுக்கு ராசா

காட்டுக்கு ராசா கலைமானைக் காண்பதாய்
ஆட்டத்தின் ராசா அரங்கேற்றம் செய்வதாய்
கார்ட்டூனின் ராசா கயிற்றினில் பாய்வதாய்
வீட்டுக்கு ராசா வரைந்திட்ட ஓவியங்கள்!!!
 




✍️செ.இராசா

(என் மகன் இனேஷ் ராசா (வ-6) வரைந்த ஓவியங்கள்)
தாயைக் கருவறையில் உதைக்கும் பிள்ளைகள்தான் தந்தையைப் படுக்கையறையில் உதைக்கிறார்கள் (யப்பா என்ன வலி...😊😊😊)

கோகுலக் கண்ணா





#கோகுலக்_கண்ணா
கோபம் ஏன்டா- நீ இங்கே
வாராயோ பாராயோ ஓடிவாயோ....

அங்கும் இங்கும் ஓடியோடி
அடிக்கடி ஏங்கி ஏங்கி
வாடிவாடி நொந்த சிறியோன்- நானும்
ஓடியாடி வெந்த சிறியோன்

தக்கவே தருணம் அமைகிற நேரம்
தக்கிட தரிகிட அடிக்கிற யோகம்
அமைந்திட அருள்கொடு நீ-கண்ணா
அமைக்கிற அருட்கொடை நீ

வயசு நகர்ந்திடுச்சே
மனசு மலர்ந்திடுச்சே
முயற்சியில் சக்தியில்லையோ- எந்தன்
பயிற்சிதான் பத்தவில்லையோ?!

புவியில் பிறந்த யாரும்
போகும் காலம் வந்தே தீரும்
வாழும் நேரம் வரவில்லையோ- எந்தன்
வாழ்வை மாற்றும் வரமில்லையோ?!

கோகுலக் கண்ணா
வாடா வாடா- நீ வழி
காட்டாமல் காக்காமல் காலமில்லையே

✍️செ. இராசா
(பாடல் மெட்டு: https://youtu.be/A6Nd0cnRPDA)

11/06/2020

காகிதப்பூ


காகிதப்பூ கோர்த்தெடுத்துக் கச்சிதமாய்ச் செய்தாலும்
ஆகிடுமா அம்மாலை ஆச்சரியப் பூமாலை
கற்பனையும் இல்லாத காட்சியையும் காட்டாத
சொற்புனைவா நற்கவிதை சொல்?!

✍️செ.இராசா

கவிதை என்பது காமம்போல்



#கவிதை_என்பது காமம்போல்
ஏதோவோர் உந்துதலில்
எழுச்சியுருவதால்

கவிதை என்பது காதலிபோல்
இலயிக்கும் நேரங்களில்
உலகையே மறப்பதால்

கவிதை என்பது மனைவிபோல்
இருக்கும்போது அலட்சியமாய்
இல்லாதபோது வருந்துவதால்

கவிதை என்பது கடவுள்போல்
எங்கேயும் இருந்தாலும்
எங்கெங்கோ தேடுவதால்

கவிதை என்பது நட்பைப்போல்
கலங்கும் தருணங்களில்
கண்ணீரைத் துடைப்பதால்

கவிதை என்பது குழந்தையைப்போல்
கவலையே இல்லாமல்
கண்டதைச் சொல்வதால்

கவிதை என்பது கவிதையைப்போல்
இன்னும் இன்னுமென
இன்னும் கேட்பதால்.

✍️செ. இராசா

(இதேபோல் இதற்குமுன்னும் எழுதியுள்ளேன்‌. ஆனால்... வேறு விதமாக.
இப்படி ஒரே கருவில், ஒரே வடிவத்தில், ஒற்றுமைச் சிந்தனையில்
ஆனால் முற்றிலும் வேறுபட்ட கருத்தில் பிறந்தது மிகுந்த மகிழ்வாக இருந்தாலும், இப்படி எழுதுவது தவறென்ற வாதமும் உண்டு. என்ன செய்வது?!... எல்லாம் அவன் செயல்)

அப்புறம் இந்தப் படம் என் மகன் இனேஷ் ராஜா (வகுப்பு-6) வரைந்தது.

tagTag PhotopinAdd Locationpencil

10/06/2020

நீ அங்கீகரிக்கப்பட்ட போதையாம்



நீ அங்கீகரிக்கப்பட்ட போதையாம்
அடித்துச் சொல்கிறார் என் நண்பர்*

அது எத்தனை உண்மையென்று
அப்போது நான் உணரவில்லை...

இடைக்காலம் தடைக்காலமானபோது
இடையூறு இடியானது...
நீ இல்லா நாட்களெல்லாம்
நீர் இல்லா வனமானது..

விதி விலக்கால் வெளிப்பட்டாய்
வீதி விளக்காய் ஒளிபெற்றேன்
தடை நீக்கம் நீ பெற்றாய்-உன்
தயை நாடி நான் வந்தேன்
ஆம்..

நீ அங்கீகரிக்கப்பட்ட போதையே

#தேநீர்

(அடித்துச் சொன்ன நண்பர் Dr. Elanchezian Sav ஐயா அவர்களுக்கு நன்றி)
— with Elanchezian Sav.

குழப்பம்

#குழப்பம்

குழம்பிய குட்டையில்
மீன் பிடிக்க முடியும்
குழம்பிய மனதில்
கவி பாட முடியுமா?!
எனில்‌
குழப்பம் அபத்தமானதா?!

யார் சொன்னார்கள்?
குழப்பம் அபத்தமென்று?!

அர்ச்சுனனின் குழப்பம்தானே
கீதையின் ஆதாரம்
மாணிக்கவாசகரின் குழப்பம்தானே
திருவாசகத்தின் ஆதாரம்
கண்ணதாசரின் குழப்பம்தானே
கவி ஆட்சியின் ஆதாரம்
ஆளும் கட்சியின் குழப்பம்தானே
அடுத்த ஆட்சியின் ஆதாரம்

ஒன்றைப் புரிந்து கொள்ளுங்கள்

குழப்பம் குழப்பமாகவே நீடித்தால்
குழப்பம் அபத்தமே...
குழப்பம் குழம்பியபின் தீர்வுற்றால்
குழப்பம் அற்புதமே....

குழப்பம் தெளிவுற்றால்
....குழப்பம் வெல்லும்
குழப்பம் திரிவுற்றால்
....குழப்பம் கொல்லும்‌

ஆம்...

புத்தனின் குழப்பம்
........ போதியில் முடிந்தது
ஹிட்லரின் குழப்பம்
........போரினில் முடிந்தது

சில குழப்பங்கள் தீங்கானது
அது சகுனியின் ஊதாங்குழல்போல்
.....தீயை மூட்டியே குளிர் காயும்

சில குழப்பங்கள் நியாயமானது
அது கண்ணனின் ஊதுகுழல் போல்
.....இசை கூட்டியே இன்பம் கூட்டும்

பாலின் குழம்பிய பரிணாமம் தான் நெய்
ஊழின் குழம்பிய பரிணாமம் தான் நீ

குழம்பு உன்னில் தெளிவடைய
குழப்பு உன்னை நீ அறிய...

✍️செ. இராசா

எனக்கு அவனை நன்றாகத் தெரியும்....

எனக்கு அவனை நன்றாகத் தெரியும்....

நிலையாமை பேசும் அவன் தான்
நிலையற்றோர் கண்டு
நிலைகுலைகின்றான்

அன்புடமை பேசும் அவன் தான்
அழுக்குப் பொதிகளுக்காய்
அழுது புலம்புகிறான்

கவிதைமழை பொழியும் அவன் தான்
கதைக்க மொழியின்றி
கண்ணீர் வடிக்கின்றான்

உள்ளதை உரைக்கும் அவன் தான்
உள்ளத்தில் வலியோடு
உலவிக் கொண்டிருக்கிறான்

தெளிவாய் தியானிக்கும் அவன்தான்
தெரியாதோர் செய்கைக்காய்
தன்னையே வதைக்கின்றான்

எனக்கு அவனை நன்றாகத் தெரியும்...

✍️செ.இராசா