31/01/2019

#தமிழ்_அயனோடு




சில உரையாடல்கள் மிகவும் சுவாரஸ்யமாகவும் பயனுள்ளதாகவும் அமைந்து விடுவது உண்டு. இன்று நான், தமிழ் மூன்றாமாண்டு படிக்கும் பாசத்திற்குரிய தம்பி அயனோடு சில தமிழ் வார்த்தைகளைப் பற்றியும் அதன் அர்த்தங்கள் காணும் முறைமையும் பேசிக்கொண்டிருந்தேன்.

இன்றைய உரையாடலில் வந்து விழுந்த சில தமிழ் வார்த்தைகளின் அர்த்தங்களை மறக்காமல் இருக்கவும், மற்றவர்களுக்கு அது போய்ச்சேர்ந்தால் பயனுள்ளதாக இருக்கும் என்ற எண்ணத்திலும் இங்கே சுருக்கமாகப் பகிர்கின்றேன்.

1. பொறுமை/ பொறாமை- அர்த்தங்கள்
***************************************
பொறுமை- பொறு(க்கும் தன்)மை
பொறாமை- பொறா(த தன்)மை

(தன்னிடம் திறமையும், ஊழ்வினை பற்றிய அறிவும் இல்லாதவனே மற்றவரின் வளர்ச்சி கண்டு பொறுக்க முடியாமல் பொறாமைப்படுவான்)

2. காமத்துப்பால் பிரிவுகள்- களவியல் & கற்பியல்
******************************************
களவியல்- களவு + இயல்

* களவு என்றால் திருட்டு என்று அர்த்தம் வரும்போது, அதை ஏன் வள்ளுவர் வைக்க வேண்டும். திருமணத்திற்கு முன் காதலிக்கும் பெண்ணை மற்றவர்கள் பார்க்காமல் தான் மட்டும் கண்ணிலேயே கள்ளத்தனமாக பார்த்து காதலிப்பது என்ற ரீதியில் வருவது. கள்ளப் பார்வை, கள்ளச்சிரிப்பு... அப்படி, ஒரு கவித்துவமாக உள்ளதைச் சொல்வது களவியல். (மனதைக் களவாடுதல் என்றும் கொள்ளலாம்)

கற்பியல்- கற்பு + இயல்

* திருமணத்திற்குப் பின் வரும் காதல். திருமண பந்தம் கற்ப நெறியில் கட்டப்பட்டதால் அதைக் குறித்து அந்த பந்தத்தில் வரும் காதலைக் கவித்துவமாய்ச் சொல்வது கற்பியல்

3. ஒப்புரவு அறிதல்
*******************
நான் எப்படி அந்த வார்த்தையை உடைக்கிறேன் என்றால்,

ஒப்பு + உறவு + அறிதல் = ஒப்புற(ர)வறிதல்

-நம்மோடு ஒத்த (இணையான) உறவை அறிதல்
-இன்னொரு விதமாக ஒப்பு என்பதை உப்பு என்று மாற்றினால், உப்பிட்ட உறவை மறக்காமல் அறிதல்.
-அந்த அதிகாரம் சொல்வது உதவி செய்தல்.
-உடையோனுக்கு உதவி செய்யும் மனப்பக்குவம் வந்தால்தான், யாரென்றே தெரியாதவருக்கு எதையும் எதிர்பார்க்காமல் உதவி செய்ய மனம் வரும் என்பதால் “ஈகை” என்ற அதிகாரம் ஓப்புரவறிதலுக்குப் பின்னர் வருகிறது.

—-நன்றி உறவுகளே—-

(பதிவு பயனுள்ளதாக இருந்தால் சொல்லுங்கள் உறவுகளே)

#தமிழ்_அயனோடு_தமிழ்
#தம்பி_உடையான்_எதற்கும்_அஞ்சான்

No comments: