26/01/2019

பாரிமலைக் கொடி



ஏற்கனவே அறிந்த கதை
எல்லோர்க்கும் தெரிந்த கதை
முல்லைக்குத் தேர் கொடுத்த
வள்ளல் மன்னன் பாரி கதை...

இப்படித்தான் நான் நினைத்தேன்
இக்கதையும் இருக்குமென்று...
என் நினைப்பு பொய்த்த கதை
எழுதுகின்றேன் இக்கவியில்..

பாரி மலையில் கொடியா?!

தலைப்பைக் கண்டவுடன்
தவறுபோல் தோன்றியது...
பிறகு தான் புரிந்தது
பிழையான புரிதல் என்று..

நான் எனும் மண்குடத்தை
நானிங்கே என்னுகையில்
நாணத்தில் தலை கவிழ்ந்து
நங்கைபோல் நகைக்கின்றேன்

கவி அரசர் எழுதிவைத்த
கதையும் கவிதை அன்றோ?!
தலைப்பும் கவிதை அன்றோ?!

சோழநாட்டில் பிறந்து
பாரிநாட்டில் படர்ந்த
பருவக்கொடியின் கதை இது

பாரிக்கு அழைப்பு
****************
ஆடிவரும் காவிரியை
ஆடியிலே காண வேண்டி
பாரியினை அழைத்தானே
பண்புள்ள சோழ மன்னன்..

அன்பான இரு மக்கள்
அங்கவையும் சங்கவையும்
தந்தையின் சொல்படியே
தாமும் உடன் சென்றனரே..

வானுயர்ந்த வள்ளலோடு
வானவரையன் தளபதியும்
கோனுயர்ந்த நாடு காண
கோட்டைவிட்டு போனாரே...

சோழ நாடு
***********
சோழ நாடு சோறுடைத்து
சோடையில்லா வாழ்வுடைத்து
காணுமிடம் அத்தனையும்
கண்கொள்ளா வளமுடைத்து..

பசுமையினைக் கண்டவாறே
பாரிவள்ளல் சென்றடைய
கோடி மக்கள் கூடியதில்
கோமகனும் ஆடிவிட்டான்..

வந்தவரை வரவேற்று
தங்கிடவே வழிசெய்து
செங்காணன் தளபதியின்
செல்லத் தங்கை கதலியினை
உதவிடவே ஆணையிட்டான்...
உளமகிழ்ந்த சோழ மன்னன்

ஆற்றில் வெள்ளம்
*****************
ஆடிப் பெருக்கு காண
கூடுகின்ற கூட்டத்தை
பாரியின் பிள்ளைகளோ
வாய் பிளந்து பார்க்கையிலே..
பாரியின் தளபதியோ
பாய்ந்துவிட்டான் ஆற்றினிலே..

குளிக்க நினைத்தவனை
புரட்டியது ஆற்று வெள்ளம்...
உதவிட முயன்றோரை
உருட்டியது பெரு வெள்ளம்..
என்ன நடக்குமென்று
எவருக்கும் புரியவில்லை..

காவிரி பெண்ணென்றால்
கதலியும் பெண்தானே...
பெண்ணை அடக்குவது
பெண்ணாலே முடியுமென்று
கதலியும் பாய்ந்துவிட்டாள்- அவன்
காதலியாய் மாறிவிட்டாள்!

கதலியின் மண வாழ்வு
**********************
கரை சேர்ந்த இருவரையும்
கரம் சேர்த்தார் மன்னர்கள்...

பிறந்த நாட்டு மண்ணை விட்டு
புகுந்த நாட்டில் புகுந்தவளை
தன் பிள்ளைபோல் எண்ணி
மன்னரும் மனம் மகிழ்ந்தார்..

அழகிய ஆண் மகனை
அன்போடு பெற்றெடுத்து
கதலியின் கொஞ்சலிலே
காலங்கள் ஓடியதில்
ஏழு வருடங்களும்
எப்படியோ ஓடிவிட
என்ன காரணமோ
ஏழரை வந்துவிட்டான்....

படையெடுப்பு
**************
காரணம் ஒன்றுமில்லை
காழ்ப்புணர்ச்சி மட்டும்தான்...

படையும் செல்வமும்
பக்கத்தில் இருந்தாலும்
கொடையின் பெயராலே
கொடியாண்ட பாரியின்மேல்...
மூன்று வேந்தர்களும்
மூர்க்கமாய் முடிவெடுத்து
செங்காணன் தலைமையிலே
செலுத்திவிட்டார் பெரும் படையை..

பாரியின் அச்சம்
****************
தன் வலிமை பெரிதென்று
தலைக்கனமாய் எண்ணாமல்
என்ன செய்தவதென்று
எண்ணுகின்ற வேலையிலே
தளபதி வந்து நின்றான்
தனக்கான கடமையெண்ணி...

நன்மை செய்ததற்கு
நடப்பது இது தானா?!
என்ன நடந்தாலும்
எதிர்த்திடுவோம் எனச்சொல்லி
பிரியமான மகள்களுக்கு
பிரியா விடை கொடுத்தான்..

கதலியின் வீரம்
***************
பாரி நாட்டுத் தளபதியாய்
பாசமிகு தன் கணவன்..
மூவேந்தர் தளபதியாய்
முன் நிற்கும் தன் அண்ணன்..
இரண்டுக்கு இடைவெளியில்
இருக்கின்றாள் கதலி இங்கே...

கணவன் இறந்த சேதி
காதில் வந்து வீழ்ந்தவுடன்
உடனே கொதித்தெழுந்தாள்..
உடை வாளை உருகிவிட்டாள்...

ஆறே வயாதான
அன்பு மகன் கைகளிலே
வாளைக் கொடுத்தனுப்பி
வாஞ்சையோடு வாடி நின்றாள்...

மகனும் இறந்தவுடன்
மங்கையும் தயாரானாள்...
மன்னன்பாரி ஓடி வந்து
மண்டியிட்டு தடுத்து விட்டான்..

கதலியின் முடிவு
***************
வஞ்சக வலைவீசி
மன்னனையும் மாய்த்து விட
அனைத்து மகளிர்களும்
அங்கேயே தீமூட்டி
அக்னிச் சுடருக்கு
அனைவருமே இரையானார்...
அன்னைக் கதலியும்
அன்றைக்கே இறையானார்...

✍️செ. இராசா

முன்னர் எழுதிய பாரி கவிதை இங்கே

https://www.facebook.com/100000445910230/posts/2270330326325142/

No comments: