15/01/2019

“#புதிய_மேகதூதம்”


#சிறை_செல்லுதல்
****************
வச்ச கடனுக்கு
வயக்காட்ட வித்ததுல
கொஞ்சம் காசெடுத்து
கண்ணாலம் செஞ்சுக்கிட்டு

சொச்ச கடனடைக்க
சொந்த ஊர விட்டுப்புட்டு
அழு(த்)த மனதோடு
அயல்நாடு போகையில

யாரோ கொடுத்தான்னு
யாதோ வாங்கிவர
தடையான பொருளால
தண்டனை கிடைச்சதுல

கண்ட கனவெல்லாம்
கானலாய்ப் போன கதை- இது
கண்ட காட்சியொன்று
கவிதையாய் மலர்ந்த கதை

#சிறையில்_கண்ட_காட்சி
************************
உதவி செய்யப்போயி
உள்ளுக்குள் போனதுல
வந்த சிறைக்குள்ள
வருமான வழியின்றி
மனையாள் நினைவோடு
மனசுக்குள் வலியோடு
நாலு வருசங்களும்
நரகமாப் போயிடுச்சு..

இன்னும் இரு மாசம்
இப்படியே போனாக்க
இந்த சிறை வாழ்க்கை
இனிமேலும் இல்லையினு
கொஞ்சம் மகிழ்வோடு
எண்ணுகிற வேளையில
சன்னல் கம்பிக்குள்- அவன்
கண்ட ஓர் காட்சி!
துயர வாழ்விற்கு
துணையான மருந்தாச்சி!

#அன்புக்_காதலிக்கு
******************
மழையில்லா தேசத்தில்
மழை மேகம் வந்ததுல
மனசுக்குள் மத்தாப்பு
மல்லிகையா மணம் வீச
அன்புக் காதலிக்கு
அவன் விடும் தூது இது...

#மேக_நண்பனிடம்_தூது
**********************
நண்பா...நண்பா என் நண்பா..
வானில் போகும் என் நண்பா..
கருணையில் பொழியும் என் நண்பா
கவலையைப் போக்கிட வா நண்பா

வினையின் பயனால் உள்வந்து
மனையை இழந்து வாடுகின்றேன்
உனைப்போல் உதவிய காரணத்தால்
எனையே இன்று தேடுகின்றேன்...

நீயெனைக் கண்ட சேதியினை
நீயென் மனைவிக்கு சொல்வாயா?!
செல்லும் வழியினைச் சொல்லுகிறேன்
சொல்வது போல்நீ செல்வாயா?!!

#வளைகுடாப்_பயணம்
*******************
கத்தார் நாட்டின் கடல்பிறந்து
முத்தாய்த் தெரிகிற என் தோழா..
கொஞ்ச தூரமே நீ சென்றால்
இந்த நாட்டினைக் கடந்திடலாம்..

மண்ணில் உயர்ந்த கட்டிடத்தை
விண்ணில் இருந்தே தொடுவதற்கு
பதுக்க பதுக்க நகர்ந்தாலே
பர்ஜ்துபாய் நகரம் வந்துவிடும்...

அங்கே கொஞ்சம் உறங்கிவிட்டு
அடுத்த நாளில் எழுந்திடுவாய்...
அறக்க பறக்கச் செல்வோர்மேல்
அன்புத் தூரல் பெய்திடுவாய்...

அரபிக் கடலின் முகம்பார்த்து
அன்பாய் நீரினைப் பருகிவிட்டு
இந்திய நாட்டின் வாசலினை
இதமாய் நீயும் அடைந்திடுவாய்

#இந்தியப்_பயணம்
*****************
காந்தி பிறந்த பூமியிலே
சாந்தி இருக்கிற நகரினிலே
சாரலைக் கொஞ்சம் தூறிவிட்டு
காவிரித் தாயைக் கண்டிடுவாய்..

குடகு மலையின் உச்சியிலே
குணத்தில் கர்ணனாய் நீ இருந்து
கருணையைக் கொஞ்சம் காட்டிவிட்டு
கர்நாடகம் கடந்து வந்திடுவாய்...

மலையிலும் அழகாய் இருக்கின்ற
மலையாள மகளிரைக் காணுகையில்
மனதிலே சஞ்சலம் வந்திடலாம்..
மதியிலே கவனம் கொண்டிடுவாய்..

#தமிழகப்_பயணம்
****************
அங்கே இருந்து நீ சென்றால்
அடுத்து வருவது தமிழகமே..
அம்மா..அய்யா....கோஷங்கள்
அங்கே உனக்குக் கேட்டிடுமே..

நஞ்சை புஞ்சை வைத்திருந்து
நஞ்சை உண்கிற நண்பர்களின்
நெஞ்சை நீயும் நன்கறிந்து
நெஞ்சில் ஈரம் காட்டிடுவாய்..

தஞ்சைக் கோவிலில் தங்கிவிட்டு
தந்தை சிவனைத் தொழுதுவிட்டு
நாகூர் தர்கா வழியினிலே
மாதா கோவிலும் சென்றிடுவாய்

மதத்தில் சிக்கிய மனிதர்களின்
மனிதத்தைக் காட்டிடும் மகத்துவத்தை
தருகிற தீர்த்தத்தைத் தந்துவிட்டு
திசையினை மாற்றியே வந்திடுவாய்!

#சிவகங்கையை_அடைதல்
*************************
உன்னை அதிகம் காணாத
செம்மை பூமியில் வாழ்கின்ற
எந்தன் மனைவியை நீ கண்டு
எந்தன் சோகம் சொல்லிடுவாய்...

சிவன்மேல் பொழிந்த நீரினைப்போல்
சிவகங்கை மண்ணில் நீயிறங்கி
சிந்தையில் நிறைந்த காதலியின்
சிவந்த கண்களைத் துடைத்திடுவாய்..

✍️செ. இராசா

(காளிதாசரின் மேகதூதம் ஏற்படுத்திய தாக்கத்தில் விளைந்த கற்பனைக் கவிதை இது. ஏதேனும் தவறு இருந்தால் மன்னிக்கவும்)


#புதிய_மேகதூதம்
#NewMeghadutam
(கதைச்சுருக்கம்:
வெளிநாடு வரும் ஒருவன், விமானத்தில் வரும்போது யாருக்கோ உதவி செய்யப்போக அதனால் மாட்டிக்கொண்டு, நான்கு வருட சிறை வாழ்க்கையை அனுபவித்து, அது முடியும் தருணத்தில் சன்னலில் கண்ட மேகத்தைப் பார்த்து தன் காதலிக்கு தூது செல்ல விண்ணப்பிக்கிறான்)

என் குரலில்....

You Tube Link
👇👇👇👇👇👇
https://youtu.be/hqz5WHdYSPc

No comments: