“#யாரோ_தூண்டிவிட்டார்- எனை
யாரோ தூண்டிவிட்டார்”
இது என்னவள் சிதறிய வார்த்தை
என் சிந்தையைக் கிளறிய வார்த்தை
தூண்டில் விடுதல் தவறுதான்
தூண்டி விடுதல் தவறா?
தூண்டிவிடா விளக்கு
தூர்ந்துவிடாதா?!
தூண்டிவிடா ஞானம்
துவண்டுவிடாதா?!
தூண்டப்படும் ஊக்கம்தானே
தாங்கிநிற்கும் தூணாகிறது?!
தூண்டப்படும் சிந்தைதானே
தூக்கிவிடும் நண்பனாகிறது
ஆனால்,
தூண்டிவிடும் ஆசை பற்றாகிறதே;
தூண்டிவிடும் வெறுப்பு சினமாகிறதே;
தூண்டிவிடும் சினம் தீயாகிறதே;
தூண்டிவிடும் சபலம் தீதாகிறதே; எனில்
தூண்டிவிடுதல் தவறுதானே?
யார் யாரைத் தூண்டினார்கள்?!
ஆதாமைத் தூண்டியது ஏவாலெனில்
ஏவாலைத் தூண்டியது சைத்தானல்லவா?
துரியனைத் தூண்டியது சகுனியெனில்
சகுனியைத் தூண்டியது பீஷ்மரல்லவா?
இராவணனைத் தூண்டியது சூர்ப்பனகையெனில்
சூர்ப்பனகையை தூண்டியது இலக்குவனல்லவா?!
இங்கே கிருஷ்ணன் தூண்டினால் சரி
சகுனி தூண்டினால் தவறா?!
இங்கே யார் தூண்டினால் சரி?
யார் தூண்டினால் தவறு?
தூண்டுதல் நபரைப் பொருத்ததா...இல்லை
விளைவைப் பொருத்ததா?!!
அணுவில் தூண்டப்படும்
அசாத்திய ஆற்றல்
அழிக்கும் வெடிகுண்டாய் மாற்றினால்
அது தீதாகிறது
சிந்தையில் தூண்டப்படும்
எண்ண அலைகள்
மனிதனை மகாத்மாவாய் மாற்றினால்
அது நன்றாகிறது
ஆம் தூண்டுதல் விளைவைப் பொருத்ததே...
இருக்கிற ஒன்றுதானே தூண்டப்படும்
இல்லாத ஒன்று எப்படி தூண்டப்படும்?
எரியும் விளக்கைப் பொருத்தே
திரியைத் தூண்ட முடியும்...
எண்ணத்தின் திணிவைப் பொருத்தே
எவரையும் தூண்ட முடியும்...
ஊசி அனுமதித்தால்தானே
நூல் நுழைய முடியும்
எண்ணம் அனுமதித்தால்தானே
எதையும் மாற்ற முடியும்..
தூண்டி விடுவோம்
நல்ல எண்ணங்களை மட்டும்
தூண்ட அனுமதிப்போம்
நல்ல சொற்களை மட்டும்
✍️செ. இராசா
தலைப்பு: #தூண்டி_விடுதல்
தூண்டி விட்டவர்: Kavitha Raja
தூக்கி விட்டவர்: அண்ணா விக்டர்தாஸ் கவிதைகள்
No comments:
Post a Comment