எங்கே இல்லை காதல்?
அணுக்களின் காதலின்றி
அண்டம் தான் உண்டா? - இல்லை
ஆதாமின் காதலின்றி
அகிலம் தான் உண்டா?!
இரண்டு ஹைட்ரஜனை
இணைந்து காதலித்த
ஒற்றை ஆக்ஸிஜனின்
ஒய்யார குழந்தைதானே நீர்!
அப்பனின் ஆட்டத்தை
அன்றைக்கு அனுமதித்த
அம்மைக் காதலின்
இன்றைய சாட்சிதானே நீர்!
எங்கே இல்லை காதல்?
இதிகாசத்தில் இல்லா காதலா-இல்லை
இலக்கியத்தில் இல்லா காதலா?
ஒருத்திக்கு ஒருவனாய்
உரக்கச் சொன்னது
இராமாயணக் காதல்!
ஐவரை மணந்தாலும்
ஐந்தையும் அடக்கியது
மகாபாரதக் காதல்!
திருந்தி வந்தவனை
திரும்பவும் ஏற்றது
சிலப்பதிகாரக் காதல்!
ஆண்கள் இங்கிருக்க
ஆண்டவனைக் காதலித்தது
ஆண்டாளின் காதல்!
அகத்தின் திணையை
அடுக்கிச் சொன்னது
சங்ககாலக் காதல்!
அறத்தின் பொருளோடு
அகஇன்பம் சொன்னது
வள்ளுவரின் காதல்!
காதல் செய்- நீ
கம்பனைக் காதல் செய்
கற்பனை பெருகும்...
காதல் செய்
பாரதியைக் காதல் செய்
பாத்திறம் வளரும்..
காதல் செய்
கண்ணதாசனைக் காதல் செய்
கவித்திறம் மலரும்..
காதல் செய்
காதல் செய்- அது
சாதிய பேய்க்கு
சமாதி கட்டும்...
காதல் செய்
காதல் செய்- அது
இன மோதலுக்கு
இடையூறு செய்யும்..
காதல் செய்
காதல் செய்- அது
மத மனிதருக்கு
மனிதத்தைச் சொல்லும்..
காதல் செய்
காதல் செய்- தொடர்ந்து
காதல் செய்..
✍️செ. இராசா
தலைப்பு: மனைவி Kavitha Raja
PC: Imran Khan தம்பி
No comments:
Post a Comment