29/07/2022

இடைவெளி



காலத்தை மட்டுமல்ல
தூரத்தையும் கூறுபோடும் காரணியே
இந்த இடைவெளி...

இங்கே...
இடைவெளியே இல்லாமல்
எதுதான் சாத்தியம்?

பகலின் இடைவெளிதானே இரவு!
உழைப்பின் இடைவெளிதானே உறக்கம்!
உயிரின் இடைவெளிதானே மரணம்!

வார்த்தைகளின் இடைவெளியில்தானே
வாக்கியங்கள்....
வாய்ப்புகளின் இடைவெளியில்தானே
வாரிசுகள்....

வாரக் கடைசி என்பதென்ன?
இரண்டு வாரங்களுக்கான இடைவெளிதானே..
மாதக் கடைசி என்பதென்ன?
சம்பள நாளுக்கான இடைவெளிதானே..

உண்மையில்...
இடைவெளி மட்டுமல்ல
இடை-வெளிகூட அழகானதே...
ஆம்.....

தண்டவாள இடைவெளி என்பது
தடம்புரளாமல் இருக்கவே...
தாளலய இடைவெளி என்பது
இசைமீறாமல் இருக்கவே..

இடைவெளியே இல்லாமல்
எதுவுமே இல்லைதான்...
ஆனாலும்...
காதலில் இடைவெளி வலிக்கிறதே..
நட்பில் இடைவெளி வெடிக்கிறதே..
உறவில் இடைவெளி கசக்கிறதே...
கவியில் இடைவெளி கனக்கிறதே..

இடைவெளி துன்பம்தான்
ஆனால்..
இடைவெளியே இல்லாமல்
இன்பமும் இல்லை‌....

எனில்....
நாமும் விடுவோம்
ஒரு சிறு இடைவெளி

27/07/2022

கடவுளின் நாக்கு

 





கவிஞனின் வாக்குக் கடவுளின் நாக்கு
கவிஞனின் வாழ்த்து கடவுளின் அன்பு
கவிஞனின் சாபம் கடவுளின் கோபம்
கவிஞனின் ரூபம் கடவுளின் பிம்பம்
கவிஞனின் ராகம் கடவுளின் நாதம்
கவிஞனின் சோகம் கடவுளின் தூக்கம்
கவிஞனின் கூர்மை கடவுளின் ஓர்மை
கவிஞனின் நேர்மை கடவுளின் தன்மை
கவிஞனுள் நன்றாகக் காண்!
 
✍️செ. இராசா
 
(எம் குருநாதர் மாகவிஞர் திரு. விக்டர்தாஸ் கவிதைகள் அண்ணா அவர்கள் எம்மை வாழ்த்தி 2018ல் ஓர் அணிந்துரை வழங்கி வாழ்த்திய வரிகள் மெய்யான தருணமிது.
இனிய மனமார்ந்த நன்றி அண்ணா 🙏🙏🙏)

26/07/2022

தேநீர்

 


கொதிக்கின்ற போதே
லபக்கென்று பற்றி
கூப்பிய இதழ்களால்
கொஞ்சமாய் உறிஞ்சி
நாநீர் சங்கமிக்க
நாமேல் உறவாடி
உள்ளே அனுமதித்தால்
உள்ளம் சிலிர்க்கிறதே...

25/07/2022

அம்மா

 



தாயைப்போல பிள்ளை இருக்கும்
நூலைப்போல சேலை இருக்கும்
சொன்னாங்க பெரியவுங்க நேத்து....
 
அன்னைபோல அன்பிருக்கும்
உன்னைபோல உலகிருக்கும்
எல்லார்க்கும் சொல்லுங்க இதையும் சேர்த்து- நீங்க
எல்லார்க்கும் சொல்லுங்க இதையும் சேர்த்து
 
எங்கெங்கோ கோவிலிருக்கு
எத்தனையோ சாமியிருக்கு
பெத்தசாமி எங்கயிருக்கு சொல்லு?- நீயும்
மத்தசாமி எல்லாத்தையும் தள்ளு- அந்த
ஒத்தசாமி முன்னாடிப்போய் நில்லு!
 
தூக்குச் சட்டியில என்ன இருக்கோ கட்டிவிட்டு
விடியக் காலையில எங்களை எல்லாம் அனுப்பிவப்பா...
கூரை வீட்டுக்குள்ள மிஞ்சிப்போனா என்ன இருக்கும்
எங்களைப் படிக்கவக்க தன்னுசுரைத் தந்துநிப்பா...
கூப்பிட்ட குரலுக்கங்கே ஓடி வருவா
கூப்பிட்ட குரலுக்கங்கே ஓடி வருவா
சாப்பிட நினைக்குமுன்னே சோறு தருவா...
 
ஒக்கூர் சந்தையில என்ன இருக்கோ வாங்கிக்கிட்டு
மருத வண்டியில கருக்கலிலே வந்திடுவா
ஊத்து தண்ணியெடுக்க கொள்ளதூரம் போயிவந்து...
எங்களை வளர்த்தெடுக்க என்னென்னமோ செஞ்சுதருவா..
கோட்டைக் கருப்பன்போல ஓடி வருவா
கோட்டைக் கருப்பன்போல ஓடி வருவா
சாட்டை இல்லாமலே நல்லாத் தருவா....

 
✍️செ. இராசா

ஔவைத் திங்கள்-001------------- தலைப்பு---அம்மா----தாயிற் சிறந்தொரு கோயிலுமில்லை

 

அம்மா எனும்போதே ஆத்மாவில் பூச்சொரிந்தால்
அம்மாவின் அன்பே அது!
(1)
 
அம்மா அருகிருந்தால் ஆலயமும் தேவைமில்லை
அம்மாதான் வாழும் அணங்கு!
(2)
 
உண்ட உணவுபற்றி ஓயாமல் கேட்கின்ற
அன்பின் உருவே அவள்.
(3)
 
தப்பான பிள்ளைத் தறிகெட்டு போனபின்னும்
அப்போதும் ஈவாள் அவள்
(4)
 
மகனின் அழைப்பை மனதிற்குள் எண்ணி
நகரும் கணத்திலவள் வாழ்வு
(5)
 
உதிரத்தைப் பாலாக்கி ஊட்டிவிட்ட தாயை
மதியாதார்க் கில்லை மதிப்பு
(6)
 
தாரத்தின் முன்பாக தாயை வதைப்பவன்
சீரங்கம் போனாலும் சீக்கு
(7)
 
பெண்களுக்கே உள்ள பெரும்பேறு யாதென்றால்
உண்மையில் தாய்மை உணர்வு
(8)
 
அன்பும் கருணையும் ஆத்மாவின் உள்ளிருந்தால்
அன்னைபோல் ஆகலாம் நீ
(9)
 
கண்முன்னே வாழும் கடவுளைக் காணாமல்
விண்வெளிக்கேப் போனாலும் வீண்
(10)
 
✍️செ. இராசா

24/07/2022

கற்றதமிழ்

 



கற்றதமிழ் பற்றியெனைக்
......கைதூக்கி விட்டதினால்
நற்றமிழின் நாயகனாய்
.......நல்விருது- பெற்றநாளில்
மற்றபணி வந்ததினால்
.......நானங்கே இல்லையென்றக்
குற்றச்சொல் நீக்கியதுன் கூட்டு!
 
✍️செ. இராசா
 
( நேற்று Dinesh Ramakrishnan நண்பரிடமிருந்து எமக்கான விருதைப் பெற்றுக்கொண்டேன். இனிய மனமார்ந்த நன்றி 💐🙏🙏)
விருதுக்கான காணொளி👉
👉

23/07/2022

தழைக்கும் வரமொன்று ........தா!

பொய்யேதும் இல்லாமல்
.......போகும் இடமெல்லாம்
செய்வதைச் செய்கின்றேன்
........தெய்வமே-மெய்யாய்
உழைக்கின்ற எம்மை
.........உயரத்தில் வைத்துத்
தழைக்கும் வரமொன்று
........தா!

இரு விமான நிலையங்கள்

 


 
போகும்போதும் வரும்போதும் நல்ல முறையில் வரவேற்பும் வாழ்த்துகளும் வழங்கிய அனைவருக்கும் இனிய மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன். அன்பின் எல்லை விரிந்துகொண்டே போவதில்தான் எத்தனை மகிழ்ச்சி என்பதை அனுபவப்பூர்வமாக உணர்கிறேன் உறவுகளே...நன்றி நன்றி!
 
இலங்கையில் இத்தனை பிரச்சினைகள் நடக்கிறதே அவர்களின் விமான சேவை எப்படி இருக்குமோ என்ற சந்தேகம் அனைவருக்குமே தற்சமயம் உள்ளது. ஆனால், பாருங்கள் எந்த மாற்றமும் இல்லாமல், மிகச் சிறப்பான முறையில் கவனிக்கின்றார்கள். சாப்பாடு, தேநீர், குளம்பி மற்றும் இதர பானங்கள் வரை எந்தக் குறைபாடும் இல்லாமல் விமானமும் விமான நிலையமும் வழக்கம்போலவே வெகு சிறப்பாகச் செயல்படுகிறது. கழிப்பறையும் தூய்மையாக உள்ளது. ஒரு நாடே கொந்தளிக்கும் போதும், தலைவர்கள் ஸ்திரத்தன்மை இல்லாதபோதும், அங்குள்ள ஊழியர்களின் பங்களிப்பு வியக்க வைக்கிறது. ஆக...ஒரு நாட்டில் தலைவரே இல்லாதபோதும், கட்டமைப்பு சரியாக இருந்தால் மற்றவை தானாக நடக்கும் என்பதற்கு இலங்கை ஓர் சாட்சியாய் உள்ளது.
 
உலகக்கோப்பை 2022 நடக்க இருப்பதால், கத்தாரின் விமான நிலைய சேவைகள் வியக்க வைக்கும் அளவில் உள்ளது. கத்தார் அடையாள அட்டை உள்ளவர்கள் வரிசையில் நிற்க வேண்டாம். தானியங்கி சேவைக்கு சென்று பாஸ்போர்டை (கடவுச்சீட்டு) அதில் வைத்தால் போதும், ஒரு கதவு தானாக திறக்கும், அடுத்து முகத்தைப் படம்பிடித்துக் கொண்டபின், அடுத்த கதவு திறக்கும். வேறு யாருமே இருக்க மாட்டார்கள். அடுத்து நமக்கான பெட்டி வரும் நகர்வு மேடைக்குச் சென்றால், அதி விரைவில் வருவதுபோல் அமைத்துள்ளார்கள். அங்கே இருவர் பெட்டிகளை சரியாக அடுக்க நியமித்துள்ளார்கள். அடுத்து பெட்டியை எடுத்துக் கொண்டு வெளியே சென்றால், கதவைக் கடக்கும்போது சப்தம் வரும் சமிக்ஞை வந்தால் மட்டுமே பரிசோதனை. இல்லையேல் போய்க்கொண்டே இருக்கலாம். ப்பா...செம்மல்ல. அதாவது, நீங்க ஒரு நாட்டிற்குள் நுழைகின்றீர்கள், அனைத்தும் சரியாக இருக்கும் பட்சத்தில் உங்களை யாருமே எதுவுமே கேட்பதில்லையென்றால், எப்படி இருக்கும். நவீன விஞ்ஞான உலகத்தில் அனைத்தையும் சாத்தியமாக்கும் கத்தார் விமான நிலைய சேவை உண்மையிலேயே வியக்க வைக்கிறது உறவுகளே...
 
✍️செ. இராசா

22/07/2022

வரதா ----- Montage Song

 

கனா நனா எது தெரியவில்லை?
...தினம் புரியவில்லை
வேகமாய்ப் போகும்
வினா விடை எது விளங்கவில்லை
..மனம் பதறவில்லை
காரணம் ஏனோ?!!
இந் நிமிடங்களும் தருணங்களும் வாழ்கிறதாலே...
கணம்கணமும் கனமின்றியே நகர்கிறதாலே......ஓ..ஓ.
 
Dream or real, we dont know
Struggle or easy, we don't know
So what? do it, we are now
live in moment, we have now.....
yes yes yes..you are right..(2)
 
முதல் முறை பெறும் பெரு விருதுபோலே
.....தினம் காணும்போது என்னுள்
........கவி ராகங்கள் பூ பூக்கும்
நிறை குறை நிஜம் நிழல் கடந்துயாவும்
.....உனைக் காணும்போது நெஞ்சில்
.........புது யோகங்கள் எனதாகும்
ஒரு பார்வை அது போதும்
.....எனக்கான ஆயுள் பல கூடும்...
 
eyes or lightning? we don't know
love or friendship? we dont know
So what? keep it, we are one
live in moment, we are in
yes yes yes..we are right..(2)
 
திடீர் திடீர் திடீர் திடீரென்றே
....வந்துபோகும் போனின் ஓசை
.......புது வேகத்தில் திசை மாற்றும்
குளுக் குளுக் குளுக் குளுக்கென்றே
......குறும்போடு கொஞ்சும் பாஷை
........ஒரு நேரத்தில் தடம் மாறும்
தனி ஓரம் அது தேடும்
.....அதற்கான தூரம் அது பாயும்
 
love or lust? they don't know
friend or trend? they don't know
Oh god? give hand, forgive them
we want them, we want them
yes yes yes, have to fight 
 
✍️செ.‌இராசா

18/07/2022

ஆவுடையார் கோவில்

 



உருவ வழிபாட்டில் உண்மையில்லை என்போர்
...உருவச் சிலையெல்லாம் வேண்டாமே என்பர்!
அருவ வழிபாட்டில் ஆழத்தைக் கண்டோர்
....அருவம் உயர்வென்றே அஃதையே ஏற்பர்!
அருவ உருவத்தை அறியாத பேரோ
..அதையும் சிலையென்றே ஆயாமல் சொல்வர்!
அருவம் உருவம் அருவுருவம் யாவும்
அனைத்தும் சிவமென்றே கண்டவரும் யாரோ?
 
✍️செ. இராசா
 
சைவத்தை முழுமையாகப் புரிந்தவர்கள்கூட சில விடயங்களை சரிசெய்ய முற்படுவதில்லை. நம் சைவத்தில் மட்டும்தான் இறைவனுக்கு மனித வடிவம் கொடுத்து உருவமாகவும், எந்த உருவமும் அல்லாத அருவ வடிவத்திலும், அதேபோல் உருவத்திலும் சேராத அருவத்திலும் சேராத வடிவமான லிங்க வடிவிலும் சிவத்தை வழிபடுகிறோம். 
 
திருவாசகம் எழுதப்பெற்ற தளமான ஆவுடையார் கோவிலில் இறைவனும் இறைவியும் அருவ வடிவத்தில்தான் உள்ளனர். பெயர்கூட பாருங்கள் ஆத்மநாதர், யோகாம்பாள் என்றே உள்ளது. அருவம் எங்கும் பரவியுள்ளதால் தீபாராதனை மற்று விழுந்து கும்பிடுவதெல்லாம் கிடையாது. இப்படியெல்லாம் இருந்த அருவ வழிபாட்டை இடையில் வந்த யாரோ சிலர் சிவ லிங்கத்தை நிறுவியுள்ளார்கள். இதை இன்று மீண்டும் அங்குள்ள பூசாரிமூலம் உறுதிப்படுத்திக்கொண்டேன். தத்துவார்த்தமான உண்மைகளைப் புரிந்து கொள்ள முடியாதவர்களால்தான் இப்படி நடந்துவிடுகிறது. கருத்தை உணர்ந்து கடவுளை வழிபட்டால் உண்மையில் மெய்ஞானம் மெய்சிலிர்க்க வைக்கும்.
 
சிவம் transformer என்றால் சக்தி அதில் ஓடும் energy. பெயர் பொருத்தம்கூடப் பாருங்கள் சக்தி- ஆற்றல்- power- energy......etc 
 
எல்லாப் பொருள்களும் பார்வைக்கு சிவனே என்றுதான் உள்ளது. ஆனால் அதனுள் எலெக்ட்ரான் புரோட்டான் நியூட்ரான் என்று உள்ளே ஆற்றல் (சக்தி) ஓடிக்கொண்டிருக்கிறது. அந்த ஆற்றலின் வடிவம்தான் நடராஜ தத்துவம். இப்படித்தாங்க நாம் சைவத்தைப் புரிந்து கொள்ள வேண்டும்‌.
 
ஓம் நமசிவாய!!!
 
✍️செ. இராசா 
 
(இடம்: ஆவுடையார் கோவில்)

மோதிரம்

 



ஆடம்பர அணிகலனாய்;
ஆட்சியாளர்களின் முத்திரையாய்;
இருமன ஒப்பந்தமாய்;
திருமணச் சின்னமாய்;
அழகியல் ஆபரணமாய்;
அவரவர் நம்பிக்கையாய்;
நான்காம் விரலேறும் மோதிரங்கள்
ஏன் நான்காம் விரலேறுகிறது தெரியுமா?!
 
ஆம்....
அங்கேதான் இதய நரம்புள்ளதாம்
ஆராய்ச்சி சொல்கிறது...
ஓ‌..
அதனால்தான் இராமனே அனுமனிடம்
சீதையிடம் காண்பிக்க வேண்டி
மோதிரம் கொடுத்தானோ?!
 
அவ்வளவு ஏன்?
எகிப்திய கல்லறை முதல்
எல்லாக் கல்லறைகளிலும்
ஏராளமாய்க் கிட்டியதும்
இந்த மோதிரங்கள் தானாம்...
 
விரகர் இருவர் புகழ்ந்திட
விரல்நிறைய மோதிரத்தோடு சென்றால்
உரைப்போரின் கவியை நன்றென்பராம்
உலகியல் கூறும் ஔவையின் உரையிது...
 
உண்மையோ? பொய்யோ?
எல்லா மதத்தினரும்
ஏற்றுக்கொண்ட அணிகலனென்றால்
இந்த மோதிரம் மட்டுமே...
 
அதுமட்டுமா?
"குட்டு பட்டாலும்
மோதிரக்கையால் குட்டுப்படவாம்"
தகுதியைத் தீர்மானிக்கும் பழமொழி இது
எனில்....
எத்தனை தகுதி வாய்ந்தது இந்த மோதிரம்.
 
உண்மைதான்....
இருப்பவன் வெள்ளி மோதிரம் போட்டாலும்
பிளாட்டினமா என்னும் உலகு
இல்லாதவன் பிளாட்டினமே போட்டாலும்
அதை ஏற்கவாப் போகிறது?
 
இங்கே
மோதிரங்கள் வெறும் ஆபரணங்கள் அல்ல..
பல சமயங்களில்
தன்னையே அடமானமாக்கி; நம்
தன்மானம் காக்கும் நண்பர்கள்...
 
எனில்,
அணியுங்கள் மோதிரம்
ஆபரணமாய் இருக்கும்
ஆபத்திலும் உதவும்..
 
✍️செ. இராசா

17/07/2022

மனிதர்களைப் படிக்கிறேன்-1 --------- ஓலா ஓட்டுநர்

 


நாம் சந்திக்கும் ஒவ்வொரு மனிதர்களும் நமக்கு ஒவ்வொரு பாடத்தைப் புகுத்திவிட்டுத்தான் போகிறார்கள். நாம்தான் அதை எங்கேயும் ஆவணப்படுத்தாமலே கடந்துவிடுகிறோம். அந்தவகையில், நான் சந்தித்த புதிய நபர்களின் சுவாரஸ்யமான விடயங்களைப் பற்றிய பதிவே இது.
 
கடந்த ஜூலை 7 ஆம் தேதி, சென்னையில், அண்ணா நகரில் இருந்து நீலாங்கரை செல்ல ஓலாவில் சிறிய மகிழுந்து ஒன்றை வாடகைக்கு எடுத்தேன். அழைத்த மூன்று நிமிடங்களில் மகிழுந்து வந்துவிட்டது. அந்த ஓட்டுநரின் பேச்சை வைத்தே நீங்கள் மதுரை பக்கமா என்றேன்? ஆமாம் சார்... அருப்புக்கோட்டை என்றார். அதன்பிறகு நான் என்னைப்பற்றி அறிமுகப்படுத்திவிட்டு அவரைப்பற்றி கேட்டேன். அவரின் வாழ்க்கை வெகு சுவாரஸ்யமாக இருந்தது. 
 
அதாவது, அவர் முன்பு அருப்புக்கோட்டையில்தான் வாகனங்கள் வைத்து டிராவல்ஸ் நடத்தியுள்ளார். அனைவரின் எதிர்ப்போடு கூடிய காதல் திருமணமாம். தன் சொந்த உழைப்பாலேயே, வீடு கட்டி மனைவி மக்களோடு வாழ்ந்து வந்துள்ளார். தொழிலில் ஏற்பட்ட நட்டத்தில் அனைத்து வாகனங்களையும் விற்றுவிட்டு ஒரே மகிழுந்தோடு மனைவி மக்களோடு சென்னை கிளம்பிவந்து, தனக்காக ஒரு வாரமாக வீடு தேடியுள்ளார். ஒன்றும் சரியாகக் கிடைக்கவில்லை. உடனே, தன் மனைவி மக்களை அருப்புக்கோட்டையிலேயே விட்டுவிட்டு, தான் மட்டும் மகிழுந்தோடு வந்து தன்னை ஓலாவில் இணைத்துக்கொண்டு, அறையே எடுக்காமல், தன் மகிழுந்திலேயே வாழ்கிறார். காலையில் வரும் முதல் சவாரியே விமான நிலையம்தானாம். அங்கே உள்ள கழிப்பறை மற்றும் குளியலறைக்கு 20 ரூபாய் கொடுத்து காலைக்கடனை முடித்து விட்டு, தன் முதல் சவாரியைத் தொடர்ந்து, இரவு தூக்கம் வரும் வரை ஓட்டுகிறார். பின் வண்டியை ஓரம் கட்டிவிட்டு வண்டியிலேயே தூங்கிவிடுகிறார்.
 
இரவில் காவல்துறை அதிகாரிகளின் தொந்தரவு இருக்காதா? என்றேன். இருக்காமலா அவர்களுக்குத் தேவையானதை கொடுத்தால் போதுமென்றார். இப்போதெல்லாம் கூகிள் பேயில் தனக்கான கையூட்டை 100ரூ அல்லது 150ரூ என்று வாங்கிக் கொள்கிறார்களாம். இப்படி வாழ்ககையை சமாளித்துக்கொண்டு 30 நாட்கள் வாகனம் ஓட்டுகிறார். பின் தன் வண்டியை தன் ஊர்க்காரரின் பணிமனையில் (ஒர்க்ஷாப்பில்) நிறுத்திவிட்டு 10 நாட்கள் கட்டாய விடுப்பில் தன் மனைவி மக்களோடு வாழ்கிறார். அதாவது 30:10 என்ற விகிதத்தில் பல வருடங்களாக தன் வாழ்க்கையை மிகவும் மகிழ்ச்சியாக நடத்தி வருகிறார்.
 
வெளிநாட்டில் தொழில் புரியும் மலையாளிகள் அப்படித்தான் 6 மாதம் வேலை 6 மாதம் ஓய்வென்று வாழ்வார்கள். அதுபோலவே இவரும் தன் வாழ்வை வேறு விகிதத்தில் அமைத்துக் கொண்டு அறையே எடுக்காமல் வேலை பார்ப்பது மிகுந்த ஆச்சரியம் அளிக்கிறது. ஓலாவில் உள்ள அனைத்து நுட்பங்களையும் அறிந்து வைத்துள்ளதால், இவருக்கு மட்டும் வண்டி நிற்காமல் ஓடுகிறதாம். இடையிடையே இவரிடம்தான் பலரும் ஆலோசனை கேட்கிறார்கள். அவர்கள் அனைவருமே எதேச்சையாக அறிமுகமானவர்களே. அனைவரிடமும் நட்பு பாராட்டி தானும் வாழ்ந்து பிறரையும் வாழ வைக்கும் இவரின் குணம் எம்மை வெகுவாக ஈர்த்தது. அவரின் பெயர் எனக்கு ஞாபகத்தில் இல்லையாயினும் அவரின் வாழ்வியல் என் மனதை விட்டுப்போகவில்லை உறவுகளே.
கொஞ்சம் யோசித்துப் பாருங்கள்.... யாருக்குத்தான் கஷ்டமில்லை. ஆயினும் நம் வாழ்விற்கான சூத்திரத்தை நாமே கண்டறிந்தால், அந்த நண்பரைப்போல் நம் வாழ்வும் மகிழ்ச்சியாக அமையாதா என்ன?!
 
✍️செ. இராசா

விடுமுறை நாட்கள்
குறைந்து கொண்டே வருகிறது
கையிருப்பு

காதலர்களின் சொர்க்கபுரி

 


மலைகளின் இளவரசி மட்டுமா அது...
காதலர்களின் சொர்க்கபுரியும்தான்...
என்ன சொன்னேன்
காதலர்கள் என்றா?
மன்னிக்கவும்.....
காதலர்கள்போல் உள்ள..என்று மாற்றலாம்.
 
அங்கேதான்
வயிற்றை அமுக்கி
பிட்டம் தூக்கிய வாகனங்கள்
எத்தனை எத்தனை?
 
எவன் கண்டுபிடித்ததோ?
அதில் முன்னும் பின்னுமாய்
இந்தச் சிட்டுக்கள்‌..
யாருக்கும் பயமில்லை...
யாருக்கும் வெட்கமில்லை...
இவர்கள் செய்யும் அட்டூழியத்தை
அவர்கள் தங்கும் அறைகளே அறியும்....
பாவம்....
அவர்களின் பெற்றோர்கள்தான்
இன்னும் நம்புகிறார்கள்...
தன் பிள்ளைகள்
தப்பே செய்யாதென்று....
 
ஆமாம்...
நாம் எங்கேப் போகிறோம்?
 
✍️செ. இராசா

16/07/2022

கட்டுரை-5 --- எளிய முறையில் உடம்பைக் குறைப்பது எப்படி?

 

கலோரி என்றால் என்னவென்று ஏற்கனவே பார்த்துவிட்டோம். ஆதலால், கூடிய உடம்பை எப்படிக் குறைக்கலாமென்று இனி பார்ப்போம்.
 
அதாவது நம் உடம்பில் அளவுக்கதிகமாக கொழுப்பு கூடியுள்ளதால், அதைக் குறைக்க இனி நாம் என்ன செய்யவேண்டுமென்று இப்பதிவில் பார்க்கலாம்.
சராசரியாக ஒரு ஆண் 2300 கலோரி எடுக்கலாமென்று இருக்கும்போது நாம் 1500 கலோரி மட்டுமே எடுத்தால் என்னாகும் தெரியுமா? நம் உடம்பில் ஏற்கனவே கூடுதலாக இருந்த கொழுப்பில் இருந்து (2300-1500=800) 800 கலோரி அளவிலான கொழுப்பு கரைய ஆரம்பித்துவிடும். எனில் 1000 கலோரி மட்டும் எடுத்தால் மேலும் கூடுதலாக 1300கலோரி கரையும்தானே என்று நீங்கள் கேட்கலாம். ஆனால், அது ஆபத்தாகிவிடும். காரணம், கண்ணாபின்னாவென்று சாப்பிட்டு வளர்ந்த உடம்பு, திடீரென்று உணவுப் பற்றாக்குறைக்கு உட்பட்டால் என்னாகும் தெரியுமா? அவ்வளவுதான்..... பின்விளைவுகள் கடுமையாக இருக்கும். ஆக, குறைந்தபட்ச அளவான 1500 கலோரியாவது எடுப்போம். உடம்பைக் குறைத்தபின்னர், மீண்டும் 2300 கலோரி எடுக்க வேண்டும் என்பதையும் இங்கே மறக்க வேண்டாம்.
 
அதெல்லாம் சரி....1500 கலோரி எப்படி எடுக்க முடியும்...ஒரு மாதிரி உணவுப்பட்டியல் பார்ப்போமா?
 
(நல்லா ஞாபகம் வைத்துக் கொள்ளுங்கள், இது உடம்பைக் குறைக்கும் அட்டவணை மட்டுமே...உடம்பைக் குறைத்த பிறகு 2300 கலோரி கட்டாயம் எடுக்க வேண்டும். சரியா?!)
 
1500 கலோரிக்கான பட்டியல் இதோ;
 
காலை
 
4 இட்லி (70) - 280 கலோரி
சட்னி (2 tbsp) - 50 கலோரி
 
மதியம்
 
200 gm சோறு - 260 கலோரி
150 gm சாம்பார்- 210 கலோரி
100 gm காய்கறி- 60 கலோரி
 
இரவு
 
4 சப்பாத்தி (100) - 400 கலோரி
100gm குருமா - 125 கலோரி
 
இடையில்
 
2-டீ (Black tea + 1 tbsp sugar) - 60 கலோரி
கேரட் அல்லது வெள்ளரி சாலட்-55 கலோரி
ஆக, மொத்தம் 1500 கலோரி....
 
உண்மையில் கஷ்டம் தாங்க.... ஆனால் என்ன செய்வது, ஒவ்வொரு வினைக்கும் சமமான எதிர்வினை உண்டுதானே? நாம்தானே அதிகக் கொழும்பைச் சேர்த்தோம். அப்ப..‌நாம்தானே குறைக்க வேண்டும்?
சரி ..உடற்பயிற்சி செய்தால் கூடுதலாக சாப்பிடலாம்தானே?.. அதுபற்றியும் பார்ப்போம் வாங்க...
 
...தொடரும்
 
 
✍️செ. இராசா

15/07/2022

காமராசர் பத்து ---- குறள் வெண்பாக்கள்

 

கற்கக் கசடறக் கல்வியைப் போதிக்க
நற்செயல் செய்தவரே நீர்!
(1)
 
உணவோடு சேர்ந்தே உயர்கல்வி தந்த
குணவானில் நீரென்றும் குன்று!
(2)
 
கள்ளுக் கடைதிறந்த காவலர்கள் மத்தியில்
பள்ளிக் கொடைதந்தீர் பார்த்து!
(3)
 
படிக்காத மேதைதந்த பல்நோக்குத் திட்டம்
படித்தோரைத் தந்ததன்று பார்!
(4)
 
உன்பள்ளி மாணவனால் உன்னையே தோற்கடித்தோம்
என்னாச்சு? வாடுகிறோம் இன்று!
(5)
 
நீர்தந்த திட்டத்தால் நிம்மதியாய் வாழ்ந்தோமே
நீர்போல் எவருள்ளார் இன்று?
(6)
 
கர்மவீரர் என்றவுடன் கண்முன்னே தோன்றுவது
தர்மவான் நீரே தலை
(7)
 
எதிர்க்கட்சி ஆனாலும் ஏற்றிவிட்டீர் மேலே
எதிரிபோல் எண்ணுகிறார் இன்று
(8)
 
மக்களாட்சி தத்துவத்தை மண்தோண்டி போட்டுவிட்டு
வக்கனையாய்ப் பேசுகிறார் வந்து
(9)
 
காங்கிரசை நீரன்று கைதூக்கி விட்டதினால்
ஓங்கி உயர்ந்தவர்தான் உண்டு
(10)
 
✍️செ. இராசா

கொடைக்கானல் வாழும் ..........குறிஞ்சி முருகா!

 


கொடைக்கானல் வாழும்
..........குறிஞ்சி முருகா!
கொடைவள்ளல் நீரே குமரா-
............தடையின்றிக்
கத்தார்வாழ் ராசாவின்
............கைப்பற்றித் தூக்கிவிட
முத்தமிழால் வேண்டுகிறேன்
............வா!
 
✍️செ.இராசா

14/07/2022

மரம்

 

உயிர்வாழ் அடையாளம்
பூக்களின் சங்கமம்
பழமுதிர்ச் சோலை
பறவைகளின் கூடாரம்
தேனீக்களின் தோட்டம்
மலைகளின் அரண்
பிரம்மனின் உருவகம்
ஆயுர்வேதத் தாய்
வாயுத் தொழிற்சாலை
பச்சையப் பாலூட்டி
உடைதரும் கண்ணன்
காகிதக் கர்ணன்
எரிக்கும் சிவன்
தியாகச் சுடர்

13/07/2022

கட்டுரை-4 --- எளிய முறையில் உடம்பைக் குறைப்பது எப்படி?

 

பொதுவாக எல்லோரும் என்ன நினைக்கிறார்கள் என்றால், அரிசி சாப்பாடு சாப்பிட்டால் உடம்பு வைக்கும், அதுவே சப்பாத்தி சாப்பிட்டால் உடம்பு வைக்காது என்றெல்லாம் தவறான புரிதலில் உள்ளார்கள். நல்லாத் தெரிஞ்சுக்குங்க எல்லா உணவுக்குமே கலோரி கணக்கு உண்டு. அதைத் தெரிந்து கொண்டால்தான் நாம் உடம்பு போடாமல் தப்பிக்க முடியும். அது சரி....கலோரியை எப்படி கணக்கு வைப்பது?! வாங்க ஒரு உதாரணம் மூலமாக பார்ப்போம்.
 
இப்ப ஒரு கோப்பை தேநீர் செய்யத் தேவையான பொருட்கள் மற்றும் அது தரும் கலோரி ஆற்றல் பற்றி பார்ப்போம்.
 
தேநீர்ப்பை அல்லது பொடி- 3 கலோரி
பால் (200மிலி)- (42 க/100ml)- 84 கலோரி
சர்க்கரை - 2 tbsp- (25/ 1 tbsp)- 50 கலோரி
ஆக மொத்தம் -- 137 கலோரி....
 
இப்ப நாம பால் ஊற்றாமல் சாப்பிட்டால் என்னாகும். பார்ப்போமா?!
 
தேநீர்ப்பை அல்லது பொடி- 3 கலோரி
சர்க்கரை - 2 tbsp- (25/ 1 tbsp)- 50 கலோரி
ஆக மொத்தம் -- 53 கலோரி....
 
இப்ப நாம பால் ஊற்றாமல் சர்க்கரை போடாமல் சாப்பிட்டால் என்னாகும். பார்ப்போமா?!
தேநீர்ப்பை அல்லது பொடி- 3 கலோரி
ஆக, வெறும் 3 கலோரி மட்டுமே.... 
 
இப்படி நாம ஒவ்வொரு உணவுலயும் கொஞ்சம் கவனமா சிலவற்றை தவிர்த்தோ அல்லது குறைத்தோ சாப்பிட முடியுமா முடியாதா?
 
உதாரணமாக, இட்லி சட்னி பற்றி பார்ப்போமோ?
இட்லி- 70 கலோரி * 4 எண்ணிக்கை - 280 கலோரி
சட்னி- 25 கலோரி/ 1 கரண்டி- 2 என்றால்- 50 கலோரி
ஆகமொத்தம் - 310 கலோரி....
 
அதுவே சாம்பார் என்றால் 1 கப் சாம்பார்- 150கலோரி....ஆக (280+150) - 430கலோரி. 
 
இப்பப் புரியுதா? கலோரி எப்படி கூடுகிறதென்று. இதில் மேலும் சாம்பார், சட்னி, வடை....என்று கூட்டிக்கொண்டே போனால் என்னவாகும்...1000 கலோரியில் வந்து நிற்கும். நாம் ஒரு நாளைக்கே 2300 கலோரி என்ற கணக்கில் சாப்பிடலாமென்றால் காலையிலேயே கட்டிவிட்டால் எப்படி?! ஆக...கலோரி கணக்கீடு பற்றி தெரிவது நமக்கு இங்கே அவசியமாகிறது.
அனைத்து சாப்பாடு பற்றிய கலோரி அளவும் இணையத்தில் உள்ளது. என்னைப் பொறுத்தவரை 4 என்ற கணக்கு சரியாக இருக்குமென்றே நினைக்கிறேன். அதாவது 4 இட்லி- 280 கலோரி (அ) 4 எண்ணெய் போடாத தோசை- 400 கலோரி (அ) 4 எண்ணெய் போடாத சப்பாத்தி- 400 கலோரி (அ) 4 சிறிய பூரி -400 கலோரி உள்ளவாறு பார்த்துக்கொண்டு சட்னி சாம்பாரை மிகக்குறைந்த அளவில் தொட்டுக்கொண்டால் காலையில் எந்த உணவாக இருந்தாலும் எடுத்துக் கொள்ளலாம்.
 
இதேபோல் தான் மதியமும் இரவும் கணக்கு வைத்துக் கொள்ளவேண்டும். இல்லையில்லை நான் சற்றே கூடுதலாக சாப்பிடுபவன் என்றால், நாம் கலோரியை எரிக்கும் அளவிற்கு நம் உடலுழைப்பைக் கூட்ட வேண்டும் அவ்வளவே. ஆனால் ஒரு விடயம்; ஒரு மணிநேரம் நடந்தால்கூட 200 கலோரிதான் எரியும். அதற்கு ஒரு வடை சாப்பிடாமல் வாயைக் கட்டினாலே போதும். காரணம் ஒரு வடையில் 200 கலோரி உள்ளது.
 
அது சரி, ஏற்கனவே கூடிய உடம்பை எப்படிக் குறைப்பது? 
 
---தொடரும்

12/07/2022

கவிதை என்பது எது?

 






எம் உறவினர் ஒருவரின் வீட்டில் சில மணித்துளிகள் தங்க நேர்ந்தபோது, வழக்கம்போல் ஏதாவது படிக்கக் கிடக்கிறதா என்று தேடினேன். எனக்கு பதினொன்றாம் வகுப்புத் தமிழ்நூல் கிடைத்தது. முதல்ப்பாடமே கவிதை பற்றியதாக இருந்தவுடன் மனம் சந்தோசத்தில் துள்ளியது. கட்டுரை இப்படித்தான் ஆரம்பமானது; 
 
"கவிதை என்பது எது? கவிதை எழுதும் செயல்பாடு எப்படி நிகழ்கிறது? கவிதை எழுதுகிற போது எழுதி கொண்டிருப்பவனுக்குள் என்ன நிகழ்கிறது? கவிதை எழுதி முடித்து விட்ட பிறகு கவிஞனுக்கும் கவிதைக்கும் என்ன உறவு? அதை யார் முடிவு செய்கிறார்கள்?"
 
இப்படியெல்லாம் இருந்தவுடன் ஆகா வென்ற மனமகிழ்வோடு கட்டுரையைப் படித்தால் ஏமாற்றமே மிஞ்சியது. காரணம், இக்கட்டுரையின் ஆசிரியர், எழுத்துமொழி பேச்சுமொழி என்று ஏதேதோ கூறி, கவிதை மரபான செய்யுள் சந்தத்திலிருந்து விடுதலை அடைய வேண்டுமென்றும், கவிதைக்கென இருக்கிற தனித்துவமான மொழிநடையில் இருந்தும் விடுதலையடைய வேண்டுமென எதையோ கூற முற்படுகிறார். கவிதைக்கு அடையாளமாய் வால்ட் விட்மன், ஸ்டெபான் மல்லாரமே, பாப்லோ நெரூடா....என தனக்குத் தெரிந்த ஆங்கிலப் பெயர்களையெல்லாம் அடுக்கி புரூடா விடுகிறார். பாவம் இவருக்கு பாரதி, பாரதிதாசன், கண்ணதாசன் போன்ற பெயரெல்லாம் தெரியாதுபோலும். மேலும் தான் கட்டுரையின் ஆரம்பித்த கேள்விகளுக்கான விடையைக் கடைசிவரை கூறவே இல்லை.
 
சரி இவர் யாரென்று குறிப்பைப் பார்த்தால், இவர் ஒரு கலைவிமர்சகர், கவிஞர், மொழிபெயர்ப்பாளர், ஒவியர் என்று வருகிறது. ஒரிய மொழி நூலை மொழிபெயர்த்ததால் சாகித்திய அகாடமி விருது வாங்கியவராம். இவர் எந்தக் கட்சிக்காரருக்குச் சொந்தக்காரரோ தெரியவில்லை. 
 
சத்தியமாக சொல்கின்றேன். நீங்கள் வேண்டுமானால் படித்துப்பாருங்கள். உங்களுக்கேப் புரியும். அதாவது இது எதுவுமே புரியாதென்பது புரியும். கொடுமை இறைவா..இப்படி இருந்தால் தமிழ் எப்படிங்க வாழும்? பாவம் மாணவர்கள்....நாமும்தான்.
 
✍️செ. இராசா