எம்மயிரும் இங்கே உயர்வில்லை என்றுணரக்
கம்பன் கவிதையிலே காண்
(1)
காண்கின்ற கானலை காவிரியாய் நம்புபவன்
தான்தான் சரியென்பான் தள்ளு
(2)
தள்ளாடும் மானிடரின் தானென்ற கர்வத்தால்
எள்ளி நகைக்கும் இனம்
(3)
இனம்மதம் சாதியிலே என்னய்யா உண்டு?
மனம்குணம் பார்த்தலேநல் மாண்பு
(4)
மாண்போடு பார்த்தாலே மக்கள் பணிசிறக்கும்
மாண்டுதான் போகும் மதம்
(5)
மதப்பற்று தப்பில்லை மாந்தரின் வாழ்வில்
மதவெறிதான் தப்பாகும் மாறு
(6)
மாறும் உலகில் மதவெறிக் கொண்டுள்ளம்
கூறுதான் போடலாமோ கூறு
(7)
கூறுவோர் கூறியும் கூற்றினைக் கேட்கார்க்குக்
கூறுவதால் என்பயன் கூறு
(8)
கூறும் அறிவுரைகள் குப்பையிலே வீசுவோர்க்கு
சேறோடு சந்தனமும் ஒன்று
(9)
ஒன்றை இரண்டாக்கி ஊதுகின்ற பேரென்றும்
நன்றை அறியார்; நகர்
(10)
நகரும் இயந்திரத்தால் நாசமான வீடு
இகழ்கிறதே நாடும் இளித்து
(11)
இளிக்கும் செயலால் எதிர்ப்புதான் கூடும்
தெளிவுடன் ஆண்டால் சிறப்பு
(12)
சிறப்போங்கும் நாடென்றும் சீரழியக் கூடும்
பிறப்பிலே பேதம் பிணக்கு...
(13)
பிணக்குகள் இன்றிப் பிரியமாய் வாழ்ந்தால்
இணக்கங்கள் கூடும் இனிது
(14)
இனிதாய் மனங்கள் இணைந்தால் எவரும்
இனிமேலும் வாலாட்டா(ர்) இங்கு
(15)
இங்கங்க னாதபடி எங்கும் இருக்குமிறை
தங்களிடம் இல்லையே ஏன்?
(16)
ஏனென்ற கேள்வி இறைவனிடம் கேட்டுநின்றேன்
ஊனென நின்றான் உறைந்து
(17)
உறைந்துதான் போனேன் உளமார்ந்த நட்பில்
நிறைகிற(து) உன்னாலென் நெஞ்சு
(18)
நெஞ்சில் அமர்ந்தாய் நிறைவாக என்னன்பே
அஞ்சிடாமல் எம்மை அணுகு
(19)
அணுகுண்டு விஞ்ஞானம் ஆக்கிய(து) என்ன?
மனிதவுயிர் யாவும் மயிர்!
(20)
இருவரும்
08.07.2022
No comments:
Post a Comment