05/10/2021

கருங்காலி மரம்

 


கேரள உணவகங்களில் கவனித்தீர்களேயானால் மஞ்சள் அல்லது சிவப்பு நிற சுடுநீர் கொடுப்பார்கள். எல்லா உணவகங்களிலும் புட்டியில் அடைத்த தண்ணீர்கள் இருந்தாலும், இந்த சுடுநீர் இல்லாத உணவகங்களே கிடையாது. மலை நாடான கேரளாவில் மூலிகை நீர் அருந்தும் பழக்கம் ஆரம்ப காலங்களில் இருந்தே இருக்கிறது. இதில் ஆச்சரியம் என்னவென்றால் அவை ஒன்றும் நமக்கு பழக்கமில்லாத அல்லது நாம் அறியாத மூலிகைகள் ஒன்றும் கிடையாது. ஆம்...மஞ்சள் நிறத்தில் உள்ளது சீரக நீர். சிவப்பு நிறத்தில் உள்ளது கருங்காலிப்பட்டை என்னும் மரப்பட்டை போட்டு கொதிக்கவைத்த நீர் அவ்வளவே
(மற்ற வகைப் பட்டைகளும் உள்ளன என்பது கூடுதல் தகவல்).

ஆமாம் அது என்ன கருங்காலி மரம்? இதுபற்றி... ஔவையார்கூட ஒரு பாடல் பாடி உள்ளாரே என்று தேடினால், அருமையான பாடல் ஞாபகம் வந்தது. நமக்கெல்லாம் தெரிந்த ஔவை-முருகன் கதை ஞாபகம் இருக்கா? ஆன்...அதே தான்.....சுட்டப்பழம் வேண்டுமா? சுடாத பழம் வேண்டுமா?அதே..அதே. .அப்பாடலில் நாம் முருகன் என்று நாமாக கதை செய்தோம். காரணம் தமிழறிந்த மூதாட்டி ஒரு மாடு மேய்க்கும் சிறுவனிடம் தோற்பதா?....ஆனால், அவனின் வார்த்தை ஜாலத்தில் தோற்ற ஔவை இரண்டு நாட்கள் தூங்கவில்லை என்பது மட்டும் உண்மை...இதோ அந்தப் பாடல்:

கருங்காலிக் கட்டைக்கு நாணாத கோடாலி
சிறுகதலித் தண்டுக்கு நாணும் - பெருங்கானில்
காரெருமை மேய்க்கின்ற காளைக்கு நான் தோற்றது
ஈரிரவும் தூங்காது என் கண்

பெரிய பெரிய கருங்காலி மரங்களையெல்லாம் வெட்டித் தள்ளிய உறுதியான இந்த இரும்புக் கோடாலி, இளங் கதலித் தண்டுக்கு வளைந்து விட்டதே. (கதலி என்பது வாழையின் ஒரு வகை.) இந்தப் பெருங்காட்டில் மாடு மேய்க்கின்ற இந்தச் சிறுவனிடத்தில் தோற்றதால் இன்னும் இரண்டு நாட்களுக்கு உறக்கமே வாராதே என்று புலம்புகின்றார் ஔவையார்.

அது இருக்கட்டும், அது என்ன கருங்காலி மரம்? அட நம்ம கருவேல மரம் தாங்க...நாம் தான் அதன் பெயரையும் தொலைத்துவிட்டோம். அப்பட்டையில் கொதிக்கவைத்த மூலிகை நீரையும் அருந்தாமல் கடக்கின்றோம். இதைப்பற்றி அலுவலத்தில் பேசும்போது, இந்தப் பாடலில் வரும் கதலி பற்றியும் பேசினோம். அப்போது ஒரு இலங்கைத் தம்பி அடித்தார் பாருங்க......கதலி, இதர, மொந்தன், கப்பல், கரிவாழை......என்று பட படவென்று அடுக்கினார். என்னப்பா இதெல்லாம் என்றால் வாழைப்பழத்தின் வகைகளாம். அடக்கடவுளே....வாழைப்பழம் என்றால் பனானாவான்னு கேட்கத்தானே தெரியும். அதுசரி...இப்படியே போனால்....இன்னும் கொஞ்ச நாட்களில் என்னாகுமென்று யோசித்தவாறே நானும்...........அப்புறம் என்ன? ....முடிஞ்சு போச்சு. போங்க போங்க.....தமிழ் வாழ்க!!!

செ. இராசா.

No comments: