குடி என்ற சொல்லே
குடி என்று சொல்கையில்
குடிக்காமல் விட்டால் எப்படி?
குடி
குடி உன்னைக்
குடிக்காதவரைக் குடி
ஆமாம்..இதெல்லாம் என்ன?
யாரோ சில குடிமகன்கள்
குடி-பற்றிச்சொன்ன
குடிஞான தத்துவங்கள்!
"குடி" என்றால் அது
குடும்பத்தைக் குறிக்கும்
பெயர்ச்சொல்;
அதே சமயம்
"குடி" என்றால் அது
குடும்பத்தைக் கெடுக்கும்
வினைச்சொல்!
இங்கே பெரும்பாலும்...
முதல் கோப்பையின் மூலம்
முதலில்லா இலவசம்தான்!
அதுவே தொடர் கோப்பையானால்
முதலெல்லாம் குடி வசம்தான்!
குடி
பங்கு வர்த்தகம்போல்
பங்காளி வர்த்தகம்!
தனை-யாரோ கெடுத்த கணக்கிற்கு
தான்-யாரையோ கெடுப்பதால்...
குடிக்கின்றோர் மன்றத்தில்
குடிக்காமல் நிற்போன் தீவிரவாதி!
குடிக்காதோர் மன்றத்தில்
குடித்தபடி நிற்போன் தீரா-வியாதி!
குடிகாரர் மத்தியில்
குடியை விட்டவன் தியாகவாதி!
குடியானோர் மத்தியில்
குடியை விட்டவன் சந்தேகவாதி!
குடி
அரியாசனத்தின் வருவாய்க் கணக்கு!
அறியா சனத்தின் செலவுக் கணக்கு!
குடி
கலைமகளைக் கவ்வும் விலைமகள்!
அலைமகனாய் மாற்றும் கொலைமகள்!
சங்க இலக்கியங்களில் இல்லாக் குடியா?
சங்கம் வைத்தோர் காட்டுகிறார் சான்று;
உண்மைதான்...
புறநானூற்றில் குடி உண்டு
அறம் கோணாத அளவில்...
பட்டினப்பாலையில் குடி உண்டு
பட்டினம் பாலையாகாத அளவில்
மணிமேகலையில் குடி உண்டு
மனிதனை அது மேயாத அளவில்
ஆனால்....
திருக்குறளிலும் குடி உள்ளதே....
திருந்திட வேண்டுமென்று
ஆம்..
"தீண்டாதீர் கள்"
செ. இராசா
18/10/2021
குடி
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment