23/10/2021

யாம் வியந்த தொழிலதிபர்?




தலைப்பைக் கண்டவுடன் இது வெறும் பெருமைபீற்றும் பதிவென்று தவறாக எண்ணிவிட வேண்டாம். இது கண்டிப்பாக அனைவருக்கும் உதவும் பதிவே என்பதைத் தாழ்மையுடன் தெரிவித்துக் கொள்கிறேன் . அந்தத் தொழிலதிபரின் பெயரை இங்கே குறிப்பிட்டு, தற்சமயம் அவருக்கு தர்மசங்கடம் கொடுக்க விரும்பவில்லை என்பதால் அதை இப்போது தவிர்க்கிறேன்.(கண்டிப்பாக பிற்காலத்தில் அவரின் வாழ்க்கை வரலாற்றை நூலாக்கும்போது இந்தத் தகவல்களும் அதில் இடம்பெயரும் என்பதில், எமக்கு எள்ளளவும் ஐயமில்லை.)

சரி...இப்போது கட்டுரைக்கு வருவோம். அந்த நண்பர் இந்தியாவில் இருந்து வந்து முதன் முதலில் கத்தாரில் தன் வாழ்க்கையைத் துவங்கியபோது மிகவும் குறைந்த ஊதியத்தில்தான் வேலை பார்த்துள்ளார். பின் அங்கிருந்து வெளியேறும் சூழல் வந்தபோது ஒரு சிறு நிறுவனம் ஒன்றைத் தொடங்கி இன்று அது பல கிளைகளுடன், பல வடிவங்களில் (ஒப்பந்த நிறுவனங்கள், வர்த்தக நிறுவனங்கள், இயற்கை விவசாயப் பண்ணை மற்றும் ஆலோசனை மையம், வாடிக்கையாளர் சேவை மற்றும் பராமரிப்பு, ஏற்றுமதி நிறுவனங்கள்.......என) கத்தார் மட்டுமின்றி இந்தியாவிலும் பரவி மிகப்பெரிய அளவில் வளர்ந்துள்ளார் என்றால் அதற்கு அவரின் கடும் உழைப்பு மட்டும் காரணமில்லை, அவரின் இயல்பு மாறாமல் பழகும் விதமும், பழமை மாறாமல் இருக்கும் பண்பும்தான். இதெல்லாம் பெரும்பாலும் வளர்ந்த மனிதர்களிடம் உள்ள பொதுக்குணம் தானே என்று நீங்கள் நினைக்கலாம். உண்மை தான்...இருப்பினும் யாரிடமும் இல்லாத தனித்துவமான சில குணங்களைத்தான் நான் இங்கே குறிப்பிட விரும்புகின்றேன்.

1. அவருடன் நான் மாலை ஆறு முப்பது மணியிலிருந்து இரவு பன்னிரண்டு மணிவரை இருந்தபோது கவனித்த விடயம் எமக்கு முதல் பிரம்மிப்பைக் கொடுத்தது, அது என்னவென்றால், என்னோடு இருந்த அந்த ஆறு மணிநேரத்தில் ஒருமுறை கூட கைப்பேசியை எடுத்து யாரிடமும் பேசாததுதான். (அட வாட்சப்கூட பார்க்கவில்லை. இதுதான் நேரமேலான்மை.... இப்போது அவர் தனக்கான நேர்த்தில் உள்ளார்)

2. அதுபற்றி அவரிடம் கேட்டபோது அவர் சொன்ன விடயங்கள்தான் எம் அடுத்த ஆச்சர்யம். அதாவது தன் நிறுவனத்தில் வேலை பார்க்கும் யாரும் ஆறு மணிக்குமேல் அலுவலகத்தில் இருக்கக் கூடாது. அதேபோல் மிகவும் முக்கிமான விடயமாக இருந்தால் மட்டும் வாட்சப்பில் தகவல் தெரிவிக்க வேண்டும். அவரும் மிக முக்கியமாக இருந்தால் மட்டுமே அன்று அழைப்பார். இல்லையேல் மறுநாள் வேலை நேரத்தில் மட்டும்தான் அழைப்பார். (அட...படுத்த உடன் தூங்குறாப்ல)

3. வேலை நேரத்தில் (மட்டும்) வேலை பார்ப்பது பற்றி இன்போசிஸ் நாராயணமூர்த்தி மற்றும் அப்துல்கலாம் போன்ற பெரிய நபர்களின் பொன்மொழிகள் நாம் கேட்டிருந்தாலும், அதை சொந்த நிறுவனத்தில் எத்தனை பேர் உண்மையில் பயன்படுத்துகிறார்கள் என்று ஆராய்ந்தால் முடிவு சொற்பமாகவே இருக்கும். இதில் அவர் கூறும் கூற்று "உண்மையில் வேலை நேரத்தில் வேலை பார்ப்பவர்களால் தன் நிறுவனம் நன்றாக இயங்குகிறதாம்." (அதிக நேரம் அலுவலத்தில் இருந்தால் கடின உழைப்பாளி என்று இன்னும் நினைப்பவர்களை என்ன சொல்வது? )

4. அடுத்து அவர் தேநீர் பரிமாறுபவர்களுக்கு அறிவுறுத்தியதாகச் சொன்னது. நல்ல மனநிலையோடு தேநீர் பரிமாறவேண்டும் என்பதே. வெறுப்புணர்வோடு இருந்தால் தனக்குகூட பரிமாற வேண்டாம் என்று அறிவிருத்தியுள்ளாராம். (செம்மல்ல)

5. அடுத்தது அவர் அலுவலகங்களுக்கு வரும் பொருள் வழங்குநர்கள் முதல் யாருமே 15 நிமிடங்களுக்கு மேல் காக்கவைக்கக் கூடாது என்பதே. (அடுத்தவர் நேரத்தை மதிக்கும் தன்மை, எத்தனை பேரிடம் உள்ளது?)

6. அவ்வளவு பெரிய வீட்டில் இருந்தாலும், இன்னும் அனைவரும் தரையில் அமர்ந்துதான் உணவருந்துகிறர்கள். அத்தனை படுக்கை வசதிகள் இருந்தாலும் இன்னும் தரையில்தான் தூங்குகிறார்கள். கொஞ்சம் கூட கர்வம் இல்லாமல் பேசும் தன்மை. அட எப்படி இப்படி என்று அன்றிலிருந்து இன்றுவரை ஆச்சர்யத்தில் திளைத்ததை தொகுத்து இங்கே இப்போது நான் தெரியப்படுத்துவற்கான ஒரே நோக்கம், என்நிலை சென்றாலும் தன்னிலை மாறாதத் தன்மையில் உயர்ந்த அந்த நபர் பற்றி தெரிந்தால் அதுபோல் மற்றவர்களும் தன்னை மாற்றிக்கொள்ளலாம் என்பதே.......

இங்கே அவர்பற்றி யாம் கூறியது வெறும் துளி மட்டுமே...அவரின் கடலளவு வரலாற்றுச் சுவடுகளை பதிவு செய்து நூலாக வெளியிட வேண்டும் என்கிற என் விருப்பத்தை அவரிடம் தெரிவித்துள்ளேன். அது நிறைவேறும் நாளன்று அவர் யாரென்று சொல்கின்றேன்.

அதுவரையில் நானும் உங்களுடன் காத்திருக்கிறேன்.......

இவண்,

செ. இராசா

No comments: