அவரைப்போல
இவரைப்போல என்றால்
இங்கே 'போல' என்பது பிரதியாகிறது!
நிலவைப்போல
மலரைப்போல என்றால்
இங்கே 'போல' என்பது உவமையாகிறது!
ஒப்புநோக்கில் சொல்லப்படும் 'போல'
உயர்வாக இருந்தாலும்
அது அகந்தையைச் சீண்டும்போது
அவமானமாகிறது!
காதல்நோக்கில் சொல்லப்படும் 'போல'
மலிவாக இருந்தாலும்
அது அகத்தினைத் தீண்டும்போது
ஆனந்தமாகிறது!
சிவாஜிபோல நடிக்கிறார் என்றால்
சிவாஜியின் பிம்பமே ஒழிய
சிவாஜியென ஆகாதே
கவியரசர்போல எழுதுகிறார் என்றால்
கவிநடையின் சாயலே ஒழிய
கவியரசாய் ஆகாதே
நாம்போல் இங்கே
நாம் மட்டும்தானே
நம்போல் பிறரென்றால்; அது
நாமாய் ஆகாதே...
ஆனாலும் இந்தப் 'போல' எனும்சொல்தான்
எத்தனை அற்புதமானது?
துதிபாடி குளிப்பாட்டி
தொங்கவிடும் அலங்காரமாய்
போல எனச்சொல்லிப் புகழ்பாடும்!
களிப்போடு சுதியேற்றித்
களங்காணும் சிருங்காரமாய்
போல எனச்சொல்லிக் கவிபாடும்!
புரியாத தத்துவத்தை
புரிய வைக்கும் விஞ்ஞானமாய்;
போல எனச்சொல்லி புலப்படுத்தும்!
அறியாத அறிவியலை
அறிய வைக்கும் மெய்ஞானமாய்
போல எனச்சொல்லித் தெளியவைக்கும்!
எங்கே நீங்களும்...
இந்தப்'போல' போல சொல்லிருந்தால்
சொல்லுங்கள் பார்ப்போம்?!
செ. இராசா
03/10/2021
போல
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment